11 நவம்பர் 2022 ~16 ரபிய்யுல் ஆஹிர் 1444ஹி
உலகெங்கிலும் உள்ள தனது ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு ஹஸ்ரத் அமீருல் மூஃமினீன் முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் தஷ்ஹுது, தவ்வூத் மகற்றும் சூரா அல் ஃபாத்திஹாவை ஓதினார்கள். பிறகு 'மேற்கத்தியமயமாகும் உம்மத்' என்ற தலைப்பின் கீழ் தனது ஜும்ஆ உரையை வழங்கினார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருளால், நபி பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் - நாடு துறந்து சென்றவர்களிடம் உரையாற்றிய ஹதீஸ் குறித்த எனது கடந்த வார விளக்கத்தில் இருந்து எனது குத்பாவைத் தொடர்கிறேன்: “நீங்கள் சோதிக்கப்படும் ஐந்து விஷயங்கள் உள்ளன, உங்களது வாழ்வில் அவைகளை காணாமல் இருக்க நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்: எந்த சமுதாயத்தில் மானக் கேடானவை பரவலாகிவிடுமோ அப்போது முன்னர் கேள்விப்படாத "காலரா" போன்ற புதுமையான நோய்கள் பரவும்.
அளவு, நிறுவைகளில் குறைபாடு செய்பவர்களுக்கு பஞ்சம், சிரமம் ஏற்படும். மேலும், அநியாயக்கார அரசன் சாட்டப்படுவான். ஜகாத் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொண்டால் வானிலிருந்து வரும் மழை அவர்களுக்கு தடுக்கப்படும். மிருகங்கள் மட்டும் இல்லையெனில் அவர்களுக்கு அறவே மழை பொழியாது. அல்லாஹ் மற்றும் அவனது தூதருடன் செய்து கொண்ட வாக்குறுதியை முறித்துவிட்டால் அவர்கள் மீது அல்லாஹ் விரோதிகளை சாட்டிவிடுவான். அவர்களிடமுள்ளதை விரோதிகள் கைப்பற்றிக் கொள்வார்கள்.
அல்லாஹ்வின் வேதத்தின்படி இல்லாமல் தங்களின் மனோ இச்சைபடி தலைவர்கள் தீர்ப்பு வழங்கினால் அல்லாஹ் அவர்களுக்கிடையே சண்டை சச்சரவுகளை ஏற்ப்படுத்திவிடுவான். (இப்னுமாஜா)
மேற்கத்திய நாடுகள் மிக நீண்ட காலமாக இஸ்லாத்தை ஒரு பலிகடாவாக எடுத்துக் கொண்டன. [அதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் மீது அதிகமான பழிகளைச் சுமத்தி, இன்றைய சமூகத்தில் உள்ள அனைத்து தீமைகளுக்கும் இஸ்லாமே காரணம் என்று கூறுகிறார்கள்] மேலும், முஸ்லிம்களை தங்களின் தேவைகளுக்குப் பயன்படுத்தி கொள்கின்றனர். [அதாவது. நம் காலத்தில் இந்த தற்காலிக உலகில் அவர்கள் விரும்பும் அனைத்தும்]. இஸ்லாம் இப்படித்தான், இஸ்லாம் அப்படித்தான் [என்று ஒரு மோசமான வழியில் ] அல்லாஹ்வின் தூய மார்க்கத்தின் மீது சேற்றைவாரி வீசுகிறார்கள். இஸ்லாம் உலகில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திவிடுமோ என்ற அச்சத்தில் இஸ்லாத்தின் இருப்பு அவர்களை நடுங்க வைக்கிறது. ஆனால், அவர்கள் அஞ்சுவதுபோல் இன்ஷா அல்லாஹ் நிகழ்ந்து விடும். ஆயினும் அது அவர்கள் பார்க்கின்றவாறான ஒரு
தீய வழியிலும் அல்லது அவர்கள் பொய்யாக சித்தரிக்கும் சாபக் கேடான ஒன்றாகவும் இருக்காது.
அவர்கள் இஸ்லாத்தை சாபக் கேடாகப் பார்க்கின்ற அதே வேளையில், இந்த அழகிய மார்க்கமே உண்மையில் அவர்களின் இரட்சிப்பாகும். [மேலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்]. ஆயினும் அவர்கள் இன்னும் அறியாதவர்களாகவே உள்ளார்கள். [இஸ்லாமோஃபோபியா - இஸ்லாம் அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான தப்பெண்ணமானது அவர்களது மனதை அச்சத்துடன் ஆக்கிரமித்துள்ளதால் இந்த உண்மையை அவர்கள் இன்னும் அறியாதவர்களாகவே உள்ளனர்].
அவர்களின் கண்ணோட்டத்தை தடுத்துவைத்துள்ள கண்மூடித்தனமானவை அவர்கள் உண்மையை புரிந்து கொள்வதிலிருந்தும் தடுத்துவைத்துள்ளது.
இஸ்லாத்தின் அமைதி அவர்களை வெற்றி கொள்ளும். இஸ்லாத்தின் வசந்த காலம் இந்த உலகில் உள்ள தூய ஆன்மாக்களின் வாழ்வில் புதிய தொரு நாளைக் கொண்டுவரும்.
அரபு மக்கள் தங்கள் அரசாங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த, மேலும் அதற்காக அவர்களின் அடக்குமுறை செய்யும் தலைவர்களை வீழ்த்திட மேற்கத்திய நாடுகளின் பெயரளவிலான உதவியை பெற்ற "அரபு வசந்தம்" (என்ற என்றழைக்கப்பட்ட பெயருடன்) இதனை குழப்பிக் கொள்ள கூடாது. அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளோ தங்கள் சமூகத்தை, அவர்களது உலகின் (கொள்கையில்) இருந்தும் விலக்கி மற்றுமொரு வடிவில் மூழ்கடித்துள்ளன. அவர்கள் நேரான பாதையில் இருந்தும் விலகிச் சென்றுள்ள ஒரு சமூகமாகும்.
ஆகவே, முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதை விட்டு விட்டு, மேற்கத்திய (நாகரீகத்தின்) பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, அதன்மூலம் அவர்களைப் போன்ற (எந்த) கட்டுப்பாடுகள் இல்லாமலும், இறைத் தண்டனைகள் குறித்து எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமான வாழ்க்கை அவர்களால் வாழ முடியும் என்பதனை அவர்கள் விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் பாதையில் இருந்து விலகிச் செல்லும் இத்தகைய விலகல்கள் மற்றும் மேற்குலகத்தின் நவீனப் போக்குகளை கடை பிடித்தல் போன்றவை இறை கோபத்தையும் தண்டனையையும் கொண்டு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த வாரம் நான் உங்களிடம் கூறியதைப் போல், பெரும்பான்மையான அரேபியர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக அமெரிக்கா அரபு உலகத்தையே கவிழ்க்க விரும்புகிறது. அவர்கள் இஸ்லாத்தை கொஞ்சம் கொஞ்சமாக [விஷத்துளிகளை செலுத்துவதை போன்று] அழிக்க விரும்புகிறார்கள்.
பாலஸ்தீனம் போன்ற முஸ்லீம் நாடுகளை வலுவிழக்கச் செய்ய அவர்கள் கையாளும் அனைத்து வகையான உத்திகளும், உலகில் இஸ்லாம் மேலாதிக்கம் பெற்று விடும் - மேலான ஆட்சி செய்யும் - என்று அவர்கள் பயப்படு அஞ்சுவதே இதற்குக் காரணம் ஆகும்.
இஸ்லாம் ஆயுதங்களைக் கொண்டல்லாமல் "சர்வவல்லமையுள்ள இறைவனின் தூய இறை வெளிப்பாடுகள் உண்மையான நம்பிக்கையாளர்கள் தங்கள் காலத்து அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கீழ்ப்படிதல் அவர்களின் அன்றாட வாழ்வில் குர்ஆனின் போதனைகளை உயிர்ப்பித்தல் ஆகியவற்றைக் கொண்டு இஸ்லாம் வெற்றி பெறும் காலமே இஸ்லாத்தின் வசந்த காலம் ஆகும்" இன்ஷா அல்லாஹ்!
இந்த (வசந்த காலத்தின்)வருகையின் மீது நம்பிக்கை வைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், இஸ்லாம் என்பது எல்லாக் காலங்களிலும் [இவ்வுலகில் மட்டுமல்ல, மறுமையிலும்] நிலைத்திருக்கக் கூடிய உயிருள்ள மார்க்கம் ஆகும். இன்று இஸ்லாத்தின் மீது எல்லா இடங்களில் இருந்தும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது.
இது மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் ஆகும், இருப்பினும் (துருக்கி, பாலஸ்தீனம் மற்றும் பிற முஸ்லீம் நாடுகளில் உள்ளவர்களாக இருக்கட்டும். அதே போல் இஸ்லாம் அல்லாத நாடுகளில் உள்ள முஸ்லிம்களாக இருப்பினும் சரி இந்த உம்மத்தின் பல உண்மையான மற்றும் நேர்மையான தன்னார்வலர்களின் ஒருங்கிணைந்த முயற்சியைக் கொண்டு இஸ்லாத்தின் இறுதி வெற்றிக்காக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அணியில் பலரும் இணைந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால், நான் கூறியது போல் இஸ்லாத்தை மேற்கத்திய நாடுகளைப் போன்று நினைக்கவும், கருதவும் கூடாது. இது கீழகத்திய (நாடுகளை சார்ந்ததும்) அல்ல மேற்கத்திய (நாடுகளை சார்ந்ததும்) அல்ல. இந்த உலகத்தில் மக்கள் எங்கு வாழ்ந்தாலும், நிச்சயமாக இது அவர்கள் அனைவருக்குமான உண்மையான வாழ்க்கை வழிமுறையாகும்.
முழு உலகமும் அல்லாஹ்வின் படைப்புகளாகும். அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி இவ்விஷயத்தில் சொந்தமாக்கி உரிமை கொண்டாட முடியாது. ஏனெனில், அவர்களே அல்லாஹ்வின் அடிமைகள் மட்டுமே. ஆனால், அல்லாஹ் அவர்களின் இறைவனாக இருக்கும்போது, இரு உலகங்களிலும் உள்ள உண்மையான வெற்றி அல்லது தங்களின் அழிவுக்குரிய அடக்கஸ்தளத்தை தாங்களே தோண்டி கொள்ளுதல் ஆகியவற்றின் வழியை வகுக்கக் கூடிய சுதந்திரத்தையும் அவன் அவர்களுக்கு வழங்கியுள்ளான்.
இன்று முஸ்லிமல்லாதவர்கள், குறிப்பாக உண்மையான அரசியலை அறியாமல் சுயமாக உருவான அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் வாழ்வில் பயங்கரத்தை பரப்பி வருகின்றனர். இஸ்லாத்தை நவீனமயமாக்கல் மற்றும் மேற்கத்தியமயமாக்கல் என்பதன் பக்கம் அவர்களை ஈர்ப்பதற்காக முஸ்லிம்களின் இன்றைய தலைமுறையில் இப்படியான குழப்பத்தை அவர்கள் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இன்றைய புதிய தலைமுறையினர், ஒரு ஆண் மற்றொரு ஆணை திருமணம் செய்துக் கொண்டு குழந்தையை தத்தெடுக்கலாம் அல்லது மருத்துவ ரீதியாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம். ஆனால், சர்வ வல்லமையுள்ள இறைவனின் (இயற்கை மார்க்கத்தின்) கட்டளைகளுக்கு கீழ்படியாமல் இருத்தலை பழைய ஏற்பாட்டிலோ, புதிய ஏற்பாட்டிலோ, திருக்குர்ஆனிலோ அதே போன்று வேறு எந்த புனித வேதங்களிலோ காணப்பட்டாலும் சரி, ஏதோ ஒரு வகையில் அந்த சமூகத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.
சோதோம், கொமோரா போன்ற கீழ்ப்படியாத தேசங்களின் அழிவைப் பற்றி நாம் படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். லூத் நபி (அலை) அவர்களிடம் (மக்களிடம்) கடுமையாக நடந்து கொள்ளவில்லை, ஆனால் அவர்கள் தமக்குத் தாமே கடுமையாக நடந்து கொண்டனர்.
முஸ்லீம்களாக இருப்பதனால் அல்லாஹ்வின் விருப்பத்திற்கும் கட்டளைகளுக்கும் ஏற்றவாறு இல்லாமல் இருக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களை, அனைத்து பாலின ஈர்ப்புடையவர்களை, திருநங்கைகளை, அல்லது வேறு எந்த பாலின அடையாளம் உடையவர்களையும் கொல்லத் தொடங்க வேண்டும் என்ற பொருள் அல்ல. மாறாக, அவர்களுக்கு உண்மை தூய்மை மற்றும் இரட்சிப்பின் செய்தியை வழங்குவதும் மேலும் அவர்களின் காமம் மற்றும் சரீர இச்சைகளை அவர்களுக்கு உண்மையில் எது அனுமதிக்கப்பட்டுள்ளது அல்லது எது அனுமதிக்கப்படவில்லை என்ற உண்மையான பகுத்தறிவுடன் அவர்களை சிந்திக்கச் வைக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இந்த மக்கள் மனிதர்களாக இருந்த போதிலும், அல்லாஹ்வின் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வற்புறுத்த முடியாது. ஆயினும்கூட, குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்ப அழகுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் ஊடகங்கள் அனைவரின் மனதிலும், குறிப்பாக சிறு குழந்தைகளின் உள்ளத்தில் தவறான விஷயங்களை திணிக்க முயற்சிக்கிறது.
எது சரி, எது தவறு என்பதற்கு இடையே ஒரு எல்லை கோடு இருக்க வேண்டும். மேலும், இன்றைய காலத்தில் பள்ளிப் பாடத்திட்டத்தில் இது நெறிப்படுத்தப்பட்டு இயல்பாக்கப்பட்டு வரும் காரணத்தால் இவை அனைத்தும் சாதாரணமானவை என்று நினைக்கக் கூடிய புதிய தலைமுறையினரை குழப்பிவிடும். ஆனால் அது சாதாரணமானவை அல்ல என்பதால் சிறுவயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு இதைக் கற்றுக்கொடுப்பது இன்றைய முஸ்லிம் பெற்றோர்களின் கடமையாகும்.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் படி, முரட்டுத்தனமாக அல்லாமல் உண்மையான முஸ்லிம்களாக இருப்பதன் மூலம் சமூகத்தில் உள்ள அந்த கடினமான கேள்விகளையும் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள குழந்தைகள் இன்று நன்கு தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த அடிப்படை போதனைகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும். ஏனெனில், ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இஸ்லாம் அல்லாத இன்னும் வேறு எந்த மார்க்கத்தின் மத வரையறையின் படியும் அல்லாத இன்றைய சமூகத்தின் அத்தகைய அம்சங்களை கற்றுக் கொடுக்க பள்ளி பாடத்திட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
அனைத்து நம்பிக்கைகளும் அவற்றின் தோற்றத்தில் உண்மையானதாக இருந்தன, ஆனால் கருத்து வேறுபாடுகள் மற்றும் இறைவனின் வார்த்தைகளின் இடைச்செருகல்கள் காரணமாக, இஸ்லாம் தோன்றி அனைத்து மனிதகுலத்திற்கும் இறுதி வழிகாட்டுதலாக திருக் குர்ஆனை முன்வைக்கும் வரை இந்த நம்பிக்கைகள் அவற்றின் போதனைகளை இழந்தன.
எனவே, இன்று நாம் வாழும் சமூகம் ஒழுக்கக்கேட்டில் ஆழமாக சிக்கிக் கொண்டிருப்பதால், குழந்தைகளின் ஆன்மீகக் கல்வியே மூலதனமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. அனைத்து சமூகங்களும், அரபு நாடுகளும் கூட மேற்கத்தியமயமாக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் பெயருக்கு மட்டுமே முஸ்லீம்களாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் நாத்திகர்களாகவோ அல்லது மார்க்கத்தை நடைமுறைப்படுத்தாத வெற்று முஸ்லிம்மக்களாக மட்டுமே இருக்கின்றார்கள்.
அல்லாஹ் (தபாரக்), திருக்குர்ஆனில் இவ்வாறாக கூறுகிறான்: அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாததைக் தங்கள் நாவுகளால் கூறுகின்றனர். (அல்-ஃபாத் 48:12)
அரேபிய உலகம் மேற்கத்திய நாடுகளுக்குத் தன்னை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை நாம் பார்க்கும்போது, நபிகள் நாயகம் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் முன்னறிவிக்கப்பட்ட தஜ்ஜாலின் இன்னல்கள் பற்றி நமக்கு நினைவுக்கு வருகிறது.
அதே வேளையில் சில நவீன வசதிகளானவை பாவங்கள் அல்ல, ஆனால், அவற்றுள் சினிமா அரங்குகள், சூதாட்டம், ஹாலோவீன் பார்ட்டிகள் மற்றும் தங்கள் நாடுகளை மேற்கத்திய நாடுகளுக்கு தோழமையாக காட்டுவதற்காக உள்ள மற்ற கவர்ச்சி போன்ற தீமைகளும் மேலும் அவர்களின் ஆடை அணியும் முறையும் இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளுக்கு எதிரானதாக உள்ளன. இது வருந்தத்தக்கதாகும். என்னவென்றால், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் அந்த முன்னறிவிப்புகளை அறிந்திருந்தும், ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியது போலவே, மேற்குலக மக்களின் போக்குகளை அவர்கள் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு சயீத் அல்-குத்ரி அறிவித்தார்கள்:
"உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் ஜாணுக்குச் ஜான் முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ("நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள்") யூதர்களையும் கிறித்தவர்களையுமா?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்த இரண்டு மதத்தை தவிர) "வேறு யாரை?" என்று (திருப்பிக்) கேட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)
தற்போது நான் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ், நான் இதே விஷயத்தை அடுத்த வாரம் தொடர்கிறேன். அல்லாஹ்வின் வழி உண்மையில் மகத்தானவை ஆகும். அவன் தனது ஒளியைத் தேடுபவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறான். மேலும், தீமை செய்பவர்களைப் பொறுத்தவரை, தண்டனை அவர்களை வந்தடையும் முன்பு அவர்கள் மனந்திரும்புவதற்கும் தங்களை சீர்திருத்துவதற்கும் போதுமான அவகாசத்தை வழங்குகிறான். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.