05 ஜூலை 2024~28 துல் ஹஜ் 1445ஹி
உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, ‘அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்’ என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.
அல்லாஹ் எப்போதும் நித்தியமானவனும், நிலைத்திருப்பவனும், தன்னில் பரிபூரணமானவனும் ஆவான். மனிதர்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. [ஆனால், அல்லாஹ்விடத்தில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை]. மனிதன் சிறப்புமிக்கவனாக மாறும்போது, அவனுக்கு இறைவன் ஒரு புதிய வெளிப்படுத்துதலுடன் தன்னைத் தானே வெளிப்படுத்துகிறான். மனிதன் [இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடிய ஆன்மீகத்தில்] முன்னேறும் போது இறைவன் அவனிடத்தில் ஓர் உயர்ந்த வெளிப்படுத்துதலுடன் தன்னை வெளிப்படுத்துகிறான். மனிதன் ஒரு அதிசயமான மாற்றத்திற்கு ஆளாகும்போது இறைவன் தனது சக்தியையும் மகிமையையும் அற்புதமாக வெளிப்படுத்துகிறான். இதுவே அதிசயங்கள் மற்றும் அற்புதங்களின் வேராகும்.
நமது சர்வவல்லமையுள்ள இறைவனாகிய அல்லாஹ் மிகவும் உண்மையுள்ள இறைவன் ஆவான். மேலும் அவன் அற்புதமான செயல்களை [அவனுடைய அடையாளங்கள் மற்றும் வெளிப்படுத்துதல்கள் ஆகியவற்றை] அவனிடம் விசுவாசமாக இருப்பவர்களிடம் வெளிப்படுத்துகிறான். இந்த உலகம் அவர்களை விழுங்கிவிட விரும்புகிறது, எதிரிகள் அவர்களைப் பார்த்து (தங்கள்) பற்களைக் கடித்துக் கொள்கின்றனர், ஆனால் அவர்களின் நண்பனாக இருக்கக்கூடிய அல்லாஹ்வாகிய அவனே அவர்களை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி, அனைத்து விஷயங்களிலும் அவர்களை வெற்றிபெற வைக்கின்றான். அல்லாஹ்வை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டதன் பின்னர் அத்தகைய நம்பிக்கையாளர்கள்:
"நாங்கள் அவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் அவனை அடையாளம் கண்டு கொண்டோம். அவனே அனைத்து உலகங்களின் இறைவன் ஆவான்” என்று கூறுகின்றனர்.
அல்லாஹ்வுடைய தூதரின் சகாப்தத்திற்கு சாட்சிபகர்பவர் இரு மடங்கு அருளுக்குரியவர் ஆவார். இறைத்தூதர் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுக்குப் பிறகு, எவரும் ரூஹுல் குத்தூஸ் - பரிசுத்த ஆவியுடன் உலகிற்கு மற்றொரு ஷரீயத் சட்டத்தையும், மற்றொரு குர்ஆனையும் ஒருபோதும் கொண்டு வரப் போவதில்லை.இஸ்லாம் தான் இறுதி மார்க்கம் ஆகும், திருக்குர்ஆன் தான் இறுதி ஷரீஅத் ஆகும், ஆகையால், இதுவே திரு நபி முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களை உலகிற்கு இறுதி ஷரீயத்துடைய நபியாகவும், தூதராகவும் ஆக்குகிறது.
ஆனால், தீமை நீடித்திருக்கும் வரையிலும், உலகம் மனிதர்களால் நிரம்பியிருக்கும் காலம் வரையிலும், இஸ்லாம் மற்றும் மனிதகுலத்தின் சீர்திருத்தவாதிகளான ஷரீஅத்தை கொண்டு வராத நபிமார்களும், தூதர்களும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருப்பார்கள். அதனால், நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் சாரம்சம் எப்போதெல்லாம் துச்சமாக ஒன்று மற்றதாகக் கருதப்படுகிறதோ (அல்லது கைவிடப் படுகிறதோ அப்போ தெல்லாம்) இந்த போதனைகளைப் புதுப்பித்து இஸ்லாத்தின் உண்மைத்தன்மையை உலகுக்கு வெளிப்படுத்திக் காட்டுவதற்காக எவரேனும் ஒருவர் வருகைதருவார்கள்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் முன்னறிவித்தபடி, இறுதி நாட்கள் தஜ்ஜாலின் [அந்தி கிறிஸ்துவின்) தோற்றத்துடன் கடும் சோதனைகளுக்குரிய நாட்களாகவும், அது போன்றே பெயர் தாங்கிய இஸ்லாமிய அறிஞர்களது இஸ்லாமியமயமாக்கலாகவும் இருக்கும், முஸ்லிம்கள் பெயரளவில் மட்டுமே இருப்பார்கள் என்றும் யூத-கிறிஸ்தவர்களின் வழிமுறைகளையும், நடத்தைகளையும் (அப்படியே) பின்பற்றுவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவித்தார்கள்! இஸ்லாத்தையும், தவ்ஹீதையும் - அதாவது அல்லாஹ்வின் ஏகத்துவத்தையும் அழிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பரவி வரும் ஷைத்தான்களின் தாக்குதல்களை எதிர்க்க அல்லாஹ் செயல்படாமல் (அப்படியே) இருந்துவிடுவான் என்று நினைக்கிறீர்களா?
அல்லாஹ், சுன்னத்-அல்லாஹ்வாகிய அவனது (முந்தைய) நடைமுறையேப் போன்றே தன்னால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களைத் தொடர்ந்து எழுப்புவான். அவ்வாறான இஸ்லாத்தின் சீர்திருத்தவாதிகள் பரிசுத்த ஆவியினால் (ரூஹுல் குத்தூஸினால்) ஞான ஒளியைப் பெற்று, [அதாவது, எந்த ஒரு புதிய சட்டத்தையும் கொண்டிராத – திருக்குர்ஆனின் கட்டளைகளை மக்களுக்கு நினைவூட்டக் கூடிய அத்தகைய]அல்லாஹ்வின் இறை வெளிப்பாடுகளைப் பெற்று நபிகள் பெருமானார் முஹம்மது(ஸல்) (அவர்களைப் பின்பற்றி) அன்னாரது அடிச்சுவடுகளில் வருகை தருவார்கள்.
அவ்வாறே, (இஸ்லாமிய) மார்க்கத்தைப் புதுப்பிக்க ஒவ்வொரு நூற்றாண்டிலும், வருகை தந்த இஸ்லாத்தின் சீர்திருத்தவாதிகளுக்குப் பிறகு அல்லாஹ், தனது வாக்குறுதியின்படி, இஸ்லாத்தின் அசல் போதனைகளின் பக்கம் மக்களை மீண்டும் கொண்டு வருவதற்காக மஸீஹ் மற்றும் மஹ்தியாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களையும் உலகிற்கு அனுப்பினான். இன்று, நமது தற்போதைய சகாப்தத்தில், அல்லாஹ் இந்த எளிய அடியானை, இஸ்லாத்தை நோக்கி (அழைத்து வரும்) உலகின் சீர்திருத்தத்திற்காக எனது சகாப்தத்தின் மஸீஹாகவும், கலீபத்துல்லாஹ் அல்-மஹ்தியாகவும் அனுப்பியுள்ளான், மேலும் (ஷரீஅத் சட்டத்தை கொண்டிராத) நபி மற்றும் தூதர் என்ற உன்னதப் பதவிகளையும் எனக்கு வழங்கியுள்ளான். அல்லாஹ், எனக்கு அவனது அடையாளங்களை இறக்கி வைத்து, வலிமை மிக்க அடையாளங்களையும் எனக்குக் காட்டினான். வானங்களிலும் சரி அல்லது பூமியிலும் சரி, அவனைத் தவிர வேறு எந்த இறைவனும் இல்லை. அவன் மீது நம்பிக்கை வைக்காதவர் அவனது அருள்களை இழந்தவராகவே குழப்பத்தில் வாழ்கிறார்.
அல்ஹம்துலில்லாஹ் இன்று, எனது வருகையுடன், அல்லாஹ் என்னைப் பின்பற்றுபவர்களில் சிலருக்கும் கூட அவர்களின் நம்பிக்கையில் ஆறுதலளிக்கும் வகையில் அவனிடமிருந்து இறை வெளிப்பாடுகளை அவர்களுக்கு வழங்கியுள்ளான். சிலர் கனவுகள், ஆன்மீக தரிசனங்கள் மற்றும் உண்மையான இறை வெளிப்பாடுகளையும் பெற்றுள்ளனர். மேலும் (இவ்வாறு கிடைக்கும்) அல்ஹம்துலில்லாஹ், இந்த அனைத்து இறை வெளிப்பாடுகளுக்கும் மேலாக அல்லாஹ்வின் பிரதிநிதியாகிய அல்லாஹ்வின் தூதர் பெறுகின்ற இறை வெளிப்பாடுகளானது சக்தி வாய்ந்த சூரியனைப் போல், பகலைப் போன்று தெளிவாகவும், பிரகாசமாகவும் இருக்கும். அவனுடைய வெளிப்படுத்துதல்கள் மற்றும் அவனது அடையாளங்களின் மூலம், நம்முடைய அல்லாஹ் எந்த அளவு சக்தி வாய்ந்தவனும், நித்தியமானவனுமாக இருக்கிறான் என்பதை நாம் பார்த்தோம்; அவனுடைய பல அற்புதமான சக்திகளை நாம் உண்மையில் கண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால், அவனுடைய சொந்த வாக்குறுதிக்கும், அவனுடைய சொந்த வேதத்துக்கும் எதிரானதைத் தவிர, அவனால் முடியாதது என்று எதுவுமே இல்லை.
ஆகவே, நான் உங்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் பிரார்த்தனைக்காக எழுந்து நிற்கும்போது, நம்பிக்கையாளர்களாகியநீங்கள், உங்கள் இறைவனாகிய அல்லாஹ் சர்வ வல்லமை கொண்டவன் ஆவான் என்று நம்பிக்கைக் கொள்ள வேண்டும். அப்போது உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும், அவனது சக்தியின் அற்புதங்களையும் நீங்கள் காண்பீர்கள். நான் உங்களுக்குக் கூறுவது எனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலானதேத் தவிர செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் அமைந்தவை அல்ல.
அல்லாஹ்வே ஒவ்வொன்றினுடைய அதிபதி ஆவான். ஆனால் அல்லாஹ்வின் வேதமானது பிரார்த்தனை தொடர்பாக ஒரு குறிப்பிட்ட விதியை நிறுவியுள்ளது: அவன் [அல்லாஹ்] தனது எல்லையற்ற கருணையின் காரணமாக ஒரு நபரை (தனது)நண்பனைப் போன்று நடத்துகிறான்.
"என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(களது பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; (முஃமின் 40:61)
என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியிருப்பதை போன்றே, சில சமயங்களில் அவன் அந்த நபர் கேட்பதை நிறைவேற்றுகிறான், மேலும்
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், சோதிப்போம்...” (அல்பகரா 2:156)
என்று அவன் கூறுவது போல், சில சமயங்களில், சில சூழ்நிலைகளில் அவனது விருப்பம் மேலோங்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். இவ்வாறுதான் ஒரு நபரின் பிரார்த்தனைகளுக்கு ஏற்றவாறு அவனால் பிரதிகரிக்க முடியும். ஒரு நபருக்கு இறைவன் மீது இருக்கக்கூடிய உறுதித் தன்மையை அதிகரிக்கச் செய்வதற்காக அவன் அவ்வாறு செய்கிறான். மேலும் சில சமயங்களில் இறைவன் தனது விருப்பத்தை மேலோங்கச் செய்து அந்த நபரின் மீதான நேசத்தின் காரணமாக அவரின் அந்தஸ்தை அவன் உயர்த்திவிடலாம் அல்லது அல்லாஹ் அவரை தனது ஒளியின் பாதைகளில் முன்னேறச் செய்யலாம்.
நமது (இறைவனாகிய) அல்லாஹ் எல்லையற்ற அற்புதங்களையும் கொண்டுள்ளான். ஆயினும் உண்மையுடனும், ஆன்மாவின் வலிமையுடனும் அவன் பக்கம் திரும்புபவர்களால் [அவனுக்கு மட்டுமே உரித்தானவர்களாகிவிடுவதற்காக அவன் பக்கம் திரும்புபவர்களால்] மட்டுமே இந்த அதிசயங்களைக் கண்டு கொள்ள இயலும். அவனுடைய ஆற்றலின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும், அவனிடத்தில் விசுவாசமாக (உறுதியுடன்) இல்லாதவர்களுக்கும் அவன் தனது அதிசயங்களை வெளிப்படுத்துவதில்லை. துரதிர்ஷ்டவசமாக, அல்லாஹ்வால் அறிவும் சுதந்திரமும் மனிதனுக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் கூட, எப்போதும் உண்மையையும் பொய்யையும் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதை (மனிதனாகிய) அவனே அறியாதவனாகவும் இருக்கிறான். மேலும் அல்லாஹ் மட்டுமே அவனுடைய எஜமானனும் இறைவனனும் ஆவான் என்பதை அவன் இதுவரையிலும் அறியாதவனாகவே இருக்கிறான்.
உண்மையில் நமது இறைவனாகிய, நமது அல்லாஹ்வே நமது உண்மையான சுவர்க்கம் ஆவான். மேலும் அவனே நமது உண்மையான நல்வாழ்வு ஆவான். நம்முடைய மாபெரும் சந்தோஷங்கள் அவனிடத்தில் மட்டுமே காணப்படுகின்றன. அவன் எத்தகையதொரு பொக்கிஷம் என்றால், அதைப் பெறுவதற்காக நாம் நமது உயிரையேத் தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும் கூட அந்த பொக்கிஷத்தை உடைமையாக்கிக் கொள்வதானதுத் தகுந்ததாகும். அவன் எத்தகையதொரு ஆபரணம் என்றால் அவனை [அதாவது, அல்லாஹ்வை] அடைந்து கொள்ளவேண்டும். என்பதற்காகவே நாம் சொந்தமாக்கியிருந்த அனைத்தையும் இழந்து போனாலும் கூட, அது வாங்குவதற்கு தகுதியுடைய ஆபரணம் ஆகும்.
நீங்கள் அல்லாஹ்வுக்காக என்று ஆகிவிட்டால், பின்னர் அல்லாஹ்வும் உங்களுக்கானவனாக ஆகிவிடுவான் என்பதில் உறுதியாக இருங்கள். [ஆன்மீக ரீதியாக] அவன் உங்களை விழித்திருக்க வைப்பான், நீங்கள் உறங்கும்பொழுது அவன் உங்களைக் கண்காணிப்பான். ஒரு நம்பிக்கையாளர் என்ற முறையில், ஒரு நபர் தனது பாதுகாப்பைக் குறைத்துக் கொள்ளலாம், ஆனால் அவருடன் அல்லாஹ்வுடைய உதவி இருக்குமேயானால், அவர் அல்லாஹ்வுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய அடியார்களில் ஒருவராக இருப்பாரேயானால், பின்னர் அல்லாஹ்வே எப்போதும் அவன் மீது தனது பார்வையை நிலைநிறுத்தி, அவரது எதிரிகளை விரட்டியடித்துவிடுவான். அவர்களின் சதித்திட்டங்கள் அனைத்தையும் [அதாவது, அவனது அடியார்களின் எதிரிகளது சதித்திட்டங்கள் அனைத்தையும்] தடுத்து விடுவான்.
மனிதர்களே! அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்ற உண்மையான ஆற்றல்களை நீங்கள் அறியவில்லை. இதை நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் இறைவனை நீங்கள் உண்மையிலேயே அறிந்திருந்தால், நீங்கள் அவனை விட்டும் ஒருபோதும் விலக மாட்டீர்கள், இவ்வுலகத்தின் பிரச்சனைகள் குறித்து ஒருபோதும் கவலை கொள்ளவும் மாட்டீர்கள். இந்த தற்காலிக உலகம் குறித்து நீங்கள் கவலை கொள்ள மாட்டீர்கள். புதையலைக் கொண்டிருப்பவன் ஒரு பைசாவை இழந்து விட்டால், அந்த ஒரு பைசாவை இழந்தால் அவர் மரணித்துப் போய் விடுவார் என்பது போல அவர் அழுவதில்லை. அல்லாஹ் ஒருவனே உங்களுக்குப் போதுமானவனும், உங்களது அனைத்துத் தேவைகளுக்கும் அவனேப் போதுமானவனும் ஆவான் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், இந்த உலக விஷயங்களுக்காக ஒருபோதும் நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள். அல்லாஹ்வே உண்மையில் உங்களது உண்மையான பொக்கிஷமாவான், மிகவும் மதிப்புமிக்க ஒரு பொக்கிஷமாவான்; அதனால் அவனது மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். (அறிந்து கொள்ள முயலுங்கள்). உங்களது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவனே உங்களது உதவியாளன் ஆவான். அவன் இல்லாமல், (அவனது உதவி இல்லாமல்), நீங்களோ அல்லது உங்களது உலகத் திட்டங்கள் (எவற்றிலும் வெற்றி) இல்லை. ஆகவே, பௌதீக வசதி வாய்ப்புகளை/ வளங்களை மட்டுமே சார்ந்திருக்கும் பிற சமுதாங்களைப் பின்பற்ற வேண்டாம் என்றும், அவர்கள் இறைவனை [அல்லாஹ்வை] மறந்துவிட்டு, தங்களது (சொந்த) வேட்கைகளைக் கொண்டு ஆதிக்கம் செலுத்த அனுமதித்துள்ளதால், அவர்களை நீங்கள் பின்பற்ற வேண்டாம் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.
நம்பிக்கையாளர்களாகிய நீங்கள் அல்லாஹ்வின் மீது மட்டுமே (உங்களது) நம்பிக்கையை வைக்க வேண்டும். நிராகரிப்பவர்களோ பௌதீக வசதி வாய்ப்புகளின் மீதே நம்பிக்கை வைக்கின்றார்கள், எனவே அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவர்கள் இந்த பூமியுடன் இணைந்து விட்டார்களோ, அவர்களே ஆன்மீக ரீதியில் மரணமடைந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் இவ்வுலக விவகாரங்களில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர், அல்லாஹ்வை மறந்துவிட்டார்கள்; அவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் புறக்கணித்த அல்லது மறந்துபோய்விட்ட அதே படைப்பாளனிடம் ஒரு நாள் திரும்ப செல்ல வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிட்டார்கள்.
ஒரு மனிதனாகவும், கலீஃபத்துல்லாஹ் என்ற நிலையிலும், பௌதீக வசதி வாய்ப்புகளை சரியான வரம்புகளுக்குள் பயன்படுத்துவதை நான் தடை செய்யவில்லை. மற்ற சமுதாயங்கள் செய்து விட்டது போல் (அதாவது) அல்லாஹ்வை முற்றாகப் புறக்கணித்து விட்டு, அவன் அவர்களுக்குச் செய்த அனைத்து உதவிகளுக்காகவும் அவனுக்கு நன்றிகெட்டவர்களாகி விட்டதால், இந்த பௌதீக வசதி வாய்ப்புகளுக்கு நீங்கள் அடிமைகளாக மாறிவிடுவதையே நான் தடுக்கிறேன்.
ஆகவே, உங்களது இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள், உங்களது நம்பிக்கையில் ஏமாந்தவர்களாகி விடாதீர்கள். நீங்கள் நழுவிப் போய், இந்த தற்காலிக உலகத்தை அல்லாஹ்வையும் மறுமையையும் விட மேலானதாக தேர்வு செய்து கொண்டால், பிறகு, நீங்கள் பெரும் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவீர்கள்.
உங்களுக்கு அறிவுரை கூறுவதும், உங்களை எச்சரிப்பதும் எனது கடமையாகும், மேலும் உலுல்-அல்-பாப் [உண்மையான ஞானம் கொண்டுள்ளவர்கள்] மட்டுமே எனது அறிவுரைகளிலிருந்தும் பயனடைவார்கள். இறுதியாக, நான் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கிறேன்.
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
ஹஸ்புன்-அல்லாஹ் வ நிமல் வகீல் (அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன், அவனே நமது காரியங்களைச் சிறந்ததாக (ஆக்கி) வழங்குபவன்) [ஆல்-இம்ரான் 3:174].
ஆமீன், சும்ம ஆமீன், யா ரப்பல் ஆலமீன்.