இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ

வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம்.

வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52)

மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-

"அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக்


கொண்டு தனது செயல்களை கட்டுப்படுத்திக் கொள்கிறார், அதனால், குறிப்பாக ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு, அன்னாரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி குர்ஆனின் போதனைகள், கட்டளைகள் மற்றும் அன்னாரது சொந்த சுன்னத் அதாவது, நமது நேசத்திற்குரிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களது நடைமுறைகள் ஆகியவற்றைப் புதுப்பிப்பதற்காக வருகை தரும் இஸ்லாமிய நபிமார்கள் மற்றும் அல்லாஹ்வின் தூதர்கள் - அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி தனது மக்களுக்கும் அனைத்து மனிதகுலத்திற்கும் இறைச் செய்திகளை முறையாக பகிர்ந்து கொள்ள முடிகிறது. இறை வெளிப்பாடுகளானது, மனிதனின் ஆன்மாவை மீண்டும் வாழ வைக்கும் அத்தகைய விளக்குகளாகும். இது ஸிர்ரை அதாவது அவனது உள் இதயத்தை அல்லாஹ்வின் பக்கம் தட்டி எழுப்பி, அல்லாஹ் அவனுடன் தொடர்பு கொள்கிறான்.  

அல்லாஹ்வின் வார்த்தையே அவனது அடியானிடத்தில் ஓர் இறை வெளிப்பாட்டைத் தூண்டுகிறது, அதன் பிறகு அல்லாஹ் குன்- ஆகுக என்று கூறும்போது: அவனால் என்ன உத்தரவிடப்பட்டுள்ளதோ, அந்த வார்த்தை- கட்டளை வடிவம் பெற்று வெளிப்படுகிறது - குன் ஃபயகுன் - ஆகுக! என்றதும் அது ஆகி விடுகிறது! - அது அவ்வாறே வெளிப்பட்டு யதார்த்தத்திற்கு வந்துவிடுகிறது. அல்லாஹ்வின் வார்த்தை, அவனது கட்டளை மற்றும் அனுமதியுடன் ஒவ்வொன்றும் வெளிப்படையாக உருவாகி விடுகிறது. படைப்பு அவனைக் கொண்டே, அவனது கட்டளையால் மட்டுமே தொடங்குகிறது.

அல்லாஹ் மனித குலத்திற்கு இவ்வாறு தெரிவிக்க விரும்புகிறான் :

"“நான் உன்னைப் படைத்துள்ளேன், மனித குலமே! இந்த அற்பமான உலகில் உங்களைப் போன்றே தற்காலிகமாக மட்டும் இருக்கும் மற்றவர்களை ஏன் வணங்குகிறீர்கள்? நீங்கள் இவ் உலகின் மீது பெரிதும் ஆசை கொள்பவர்களாக இருக்கின்ற நிலையில் இருந்து கொண்டே, இரட்சிப்பையும் விரும்புகின்றீர்கள். எனது தூதர்கள் மூலம் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளதையேச் செய்யுங்கள்! உங்களிடம் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். என்னை உங்களிடமிருந்தும், உங்களை உங்களிடமிருந்தும் பிரிக்க முயலும் ஷைத்தான்களின் பிடியிலிருந்தும் விடுபடுங்கள். நீங்கள் இன்னும் ஆழமாக சென்று பார்த்தால், உங்களை மன்னிப்பதற்காக நான் எப்போதும் தயாராக இருப்பதை காண்பீர்கள், என்னை அடைவதற்கான வழியையும் காண்பிப்பேன். நான் உங்களது இறைவனாகவும், சிறந்த நண்பனாகவும் இருக்கிறேன். நீங்கள் எனக்குப் பிரியமானவர்களாய் இருப்பதால், என்னால் உஙகளைக் கைவிட்டு விட முடியாது. நீங்கள் என்னிடம் மன்னிப்புக் தேடிக் கொண்டிருக்கும் வரை, நானும் உங்களை தொடர்ந்து மன்னிப்பேன். நீங்கள் என்னிடமே திரும்ப வேண்டிய எனது அத்தகைய பகுதியாக உள்ளீர்கள், அது என்னுடையது, எனக்கே உரியது, அது என்னிடமே திரும்ப வேண்டி உள்ளது..…” ஏனென்றால், நீங்கள் எனக்காகவே உள்ளீர்கள், என்னிடமிருந்தே வந்துள்ளீர்கள், நீங்கள் அனைவரும் எனக்கே உரியவர்கள், என்ன நேர்ந்தாலும் என்னிடமே திரும்ப வேண்டிய எனது அமானத்தாக எனக்கே உரியவர்களாக இருக்கிறீர்கள்!.

நான் உங்களுக்காக தாகமாக இருக்கும்போது, நீங்களும் என்னிடம் தாகமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு யாரையும் இணை வைக்காமல் என்னை மட்டும் பிரத்தியேகமாக வணங்குங்கள். எனக்கான வழி எளிதானது, ஆனால் உங்களிடம் அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் ஆசைகளால் அதை சிக்கலாக்குகிறீர்கள், அழிந்து போகுமாறு விதிக்கப்பட்டுள்ள இவ் உலகின் இன்பங்களை விட்டும் உங்கள் கவனத்தை என் பக்கம் திருப்பி விடுங்கள். நான் உங்களுக்காக இருக்கும்போது, நீங்கள் கவலையடைய வேண்டாம். நான் அருகில் இருக்கிறேன், நான் உங்களது சொற்களை கேட்கிறேன். அதனால் எனது அழைப்பிற்கு செவிதாழ்த்தாமல் இருந்து விடாதீர்கள், ஏனெனில் இந்த அழைப்பானது உங்களை வறுமையில் இருந்தும் அகற்றி, செல்வத்தின் மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் மகத்தானதொரு அழைப்பாகும்.

என்னை சொந்தமாக்கிக் கொண்டவன் செல்வந்தனாகவும், என்னை இழந்து போனவன் ஏழையாகவும் இருப்பான். எனக்காக கஷ்டப்படத் தயாராக இருங்கள், இதனால் நீங்கள் எனது நேசத்தின் உலகிற்குள் அனுமதிக்கப்படுவீர்கள், அது எத்தகைய நேசமென்ன்றால், அது எனது கடுங்கோபத்தை கொண்டிராமல், எனது கருணையால் நிரம்பி இருக்கக் கூடியதும், அனைத்துத் தீமைகளிலிருந்தும் பாதுகாக்கக் கூடியதும் ஆகும். நீங்கள் தீமையை எதிர்த்துப் போராடும்போது, உங்களுக்கு உதவியாக என்னைத் தேடுங்கள், உங்களுக்கு உதவ நான் தயாராக இருப்பேன். எனது வானவர்கள், என்னால் நியமிக்கப்பட்டவர்கள், அர்ப்பணிப்புமிக்க எனது சேவகர்களின் படை உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பார்கள்.

எனது அங்கீகாரம் மற்றும் நேசத்தின் வாசனையைக் கொண்டு நான் புனிதப் படுத்தியுள்ள எனது கலீபத்துல்லாஹ்வுக்கு அருளப்பட்ட இறைச் செய்திகளை நீங்கள் விழித்தெழுந்து செவி சாய்த்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் யாரைத் தேர்ந்தெடுத்துப் பாதுகாக்கிறேனோ, அவர்கள் எனது பாதையில் நடந்து, அவர்களுக்கு சுமத்தப்பட்டுள்ள பணியை பூர்த்தி செய்கின்ற வரையிலும், அத்தகைய அன்புடனும் பாதுகாப்புடனும் அவர்களை தொடர்ந்து சூழ்ந்திருப்பேன்."

மேலும் ஹஸ்ரத் கலீபதுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்

"அல்லாஹ் எத்தகையவன் என்றால், அவனே படைப்பாளனும், உருவாக்குபவனும், வடிவமைப்பவனும் ஆவான். அவன் வடிவமைக்கின்றவனும், உருவாக்குகின்றவனும் தீர்மானிக்கின்றவனும் ஆவான். அவன் தனது போதனைகளை, அறிவுறுத்துதல்களை கீழே இறக்குகிறான், மேலும் அந்த ஞானத்தின் முத்துக்களானது இறை வெளிப்பாடுகள் என்றும் இறைத் தூண்டுதல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. குறிப்பாக அது உங்கள் இதயத்தில் நுழைந்து விட்டால், சூரியன் இரவை ஒரு புதிய விடியலாக, மாற்றுவது போல அது உங்களுக்கு ஒரு புதிய நாளாகி விடும்.

அல்லாஹ் ஒருவரிடம் திருப்திக் கொண்டுவிடும்போது, அவன் எதனையேனும் வாக்குறுதி அளிக்கும்போது, அதனை கொடுக்கப் பட்டுள்ள நிபந்தனைகளுடன் வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு அவர் கடமைப்பட்டிருக்கிறார்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:

لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ

ஒவ்வொரு மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு அவனை கண்காணிக்கும், பாதுகாக்கின்ற மலக்குகள் உள்ளனர்.எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், நிச்சயமாக அல்லாஹ் (மோசமான நிலைக்கு) அவர்களை மாற்றுவதில்லை

(அர் ரஃது 13: 12)

إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَٰكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاءُ ۚ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَg

நீர் விரும்புகின்றவரை நேர் வழியில் செலுத்த நிச்சயமாக உம்மால் முடியாது. மாறாக அல்லாஹ், தான் விரும்புபவருக்கே நேர் வழி காட்டுகின்றான். மேலும் நேரான வழியில் செல்லக் கூடியவர் யார் என்பதை அவன் நன்கு அறிகின்றான். (அல் கஸஸ் 28: 57)

அல்லாஹ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மிகப்பொருத்தமான நேரம் வரும்போதெல்லாம், அவன் அதைச் செய்வான், அவனுடைய செயல்களை எவராலும் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் அவன் மற்றவர்களின் அனைத்து செயல்களுக்கும், பழிவாங்குதலுக்கும் அப்பாற்பட்டவன் ஆவான்.

அடிப்படையில், தனது வார்த்தைகளைக் கொண்டு தூய்மைப்படுத்தி வழிநடத்துகின்ற அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதரின் வருகையின் போது அத்தகைய மாபெரும் இறை வெளிப்பாடுகளின் பகல்களும் இரவுகளும் நிகழ்கின்றன, அதன் காரணமாக, முறைப்படி அவரால் உலகை வழிநடத்திட முடியும்.

வாழ்வின் இறுதி வழிகாட்டி திருக்குர்ஆனுடன் வந்தபோதும், இறுதி ஷரீஅத்தைக் கொண்ட நபி முஹம்மது நபி (ஸல்) என்ற நபரின் மூலம் வந்த போதும் ,இறுதி மார்க்கம் இஸ்லாத்த்துடன் வந்தபோதிலும் திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மகிமைக்குரிய இஸ்லாமிய மார்க்கமும் தீயவர்களின் தீய நோக்கங்களில் இருந்து எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கும் என்று இதற்கு பொருளல்ல. அதன் பொருள் என்னவென்றால், அவைகள் உண்மைதான், இருந்தபோதிலும் பொய்கள் அவற்றை நசுக்கி இல்லாமல் ஆக்கிட முயற்சிக்கும். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்: அது சாத்தியமற்றது! 

فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

“என்னிடமிருந்து உங்களிடம் நேர்வழி வருமாயின் எனது நேர்வழியினைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எந்த அச்சமும் இருக்காது.அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2: 39)

நபிமார்களையும், சீர்திருத்தவாதிகளையும் இந்த உலகத்திற்கு அனுப்புதல் என்பது அல்லாஹ்விடமிருந்து மனிதகுலத்திற்கான ஒரு நம்பிக்கையின் செய்தியாகும். அதன் பொருள் என்னவென்றால்:

"மனித குலமே!உனக்கு இன்னும் நேரம் இருக்கிறது! மனந்திரும்பு, மனந்திரும்பு, மனந்திரும்பு!”

தூதருக்கு பல வடிவங்களில் இறை வெளிப்பாடுகள் வழங்கப்படுகிறது. ரீங்காரம் அல்லது மணி சத்தம் போன்ற இறை வெளிப்பாடுகளின் வார்த்தைகளை அவர் செவியுறச் செய்யப்படுகிறார், அல்லது இறை வெளிப்பாடுகள் ஒளி வேகத்தில் வந்து பிறகு அவரது மனதில் பதிய வைக்கப்படுகிறது, அல்லது வானவர் வருகை தந்து, அவர் உணர்ந்து கொண்டு, சில சமயங்களில் ஒரு தோழரைப் போலவும், சில சமயங்களில் ஆசிரியரின் முன்னால் ஒரு மாணவனைப் போன்று பயத்துடனும் மரியாதையுடனும் அவருடன் பேச வைக்கப்படுகிறது. 

இறை வெளிப்பாடுகளானது அல்லாஹ்வின் நபிமார்களுக்கும்,  தூதர்களுக்கும் மிகவும் வேதனையைத் தரக் கூடியதாகும். அவர்களின் ஆன்மாக்கள் அவர்களின் உடலிலிருந்து துண்டிக்கப்படும் விதத்திலான அத்தகையதொரு உண்மையான வேதனையாகி விடுகிறது. அதனால்தான் இறை வெளிப்பாடுகள் மிகவும் விலைமதிப்பற்றவையாகும், ஏனென்றால் இது உமிழும் நெருப்பிற்கு உட்பட்டு, அணிய வேண்டிய அழகான துண்டுகளாக மாறிவிடும் தங்கம் போல், அதே போன்றே அல்லாஹ்வின் தூதர் நேரிலோ அல்லது அல்லாஹ்வின் வானவர் மூலமாகவோ அல்லாஹ்வுடனான தனது தொடர்பினால் அவனது செய்தியைப் பெறும்போது நல்ல இயல்புடையவராக ஆக்கப்படுகிறார்.

இறை செய்திகள் இறை தூண்டுதல்களின் மூலமாக இதயத்திற்கும், எழுதுவதன் மூலமும் கூட வருகிறது. நமது நேசத்திற்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓர் உம்மி அதாவது எழுத்தறிவில்லாத மனிதர் ஆவார், எழுத்து வடிவத்தைவிட, தான் கேட்ட வார்த்தைகளை அதிகம் சார்ந்திருந்தார், ஆயினும் இறை வெளிப்பாடுகளின் எழுதப்பட்ட வடிவம் நிலை பெற்றிருக்க வில்லை என்று இதற்கு அர்த்தமல்ல. அவைகளும் உள்ளன.

ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின் மக்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு வழியாக பத்து கட்டளைகள் இறை கைகளால் பொறிக்கப்பட்டிருந்தன. இது போன்ற அற்புதங்கள் மனிதனின் எண்ணங்களை மாற்றவும், அவன் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு கட்டுப்பட் டு நடப்பதற்கும் அற்புதங்கள் தேவைப்பட்ட ஒரு காலமாகும். இன்று, பூமியின் மீதான வாழ்வின் பல சகாப்தங்களுக்குப் பிறகு, மனிதகுலமானது முந்தைய ஷரீஅத் சட்டத்தை கொண்ட அனைத்து தீர்க்கதரிசிகளின் போதனைகளையும் மரபுரிமையாகப் பெற்றுள்ளது, இதனுடன் அறிவியலின் முன்னேற்றம் போன்றவை, மனிதனுக்கு இது போன்ற அற்புதங்கள் இருப்பது சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது, ஆயினும் அவைகள் நிலை பெற்றுள்ளன. இத்தகைய வெளிப்பாடுகளுக்கும் அற்புதங்களுக்கும் அல்லாஹ் ஒரு காலத்தை நியமித்துள்ளான். அவன் ஒரு காலகட்டத்தில் சிலவற்றை வெளிப்படுத்தலாம், இன்னும் பிற காலகட்டங்களில் அவனுடைய அடையாளங்களின் மற்ற அம்சங்களை அவன் இருந்து கொண்டிருப்பதற்கான நற்செய்தியாகவும், அதைக் கொண்டு அதாவது அவனது இருப்பை நம் இதயங்களை மகிழ்விக்கவும், நம் அனைவருக்கும் மத்தியில் வேறு சிலவற்றை வெளிப்படுத்தலாம்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் உலகில் தோன்றும் போதெல்லாம், அவர் அல்லாஹ்விடமிருந்து வந்தவர் என்பதாலும் அவரை அல்லாஹ் வழிநடத்துகிறான், வழிகாட்டுகிறான். என்பதாலும். ஒருவர் அவர் மீது நம்பிக்கை கொள்வதையும், அவரது அணியில் இணைவதையும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும், அவரது விருப்பம் என்பது அல்லாஹ்வின் விருப்பமாகும், அல்லாஹ்வின் சிறப்பிற்குரிய தூதராக அவர் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர் இறக்கும் வரை, அவரது மனித உணர்வுகளிலிருந்து விடுபடவும், அவரது சொந்த நஃப்ஸை துறக்கவும், அவரது உருவத்தில் தன்னை அதாவது அல்லாஹ்வை செதுக்கிக் கொள்ள கற்றுக்கொடுப்பதற்காகவும் அல்லாஹ் அவருக்கு வழிகாட்டுகிறான். இது நிகழும்போது, இந்தத் தூதருக்கு அல்லாஹ்வின் உதவி எப்போதும் இருக்கும் என்பதும், எதிரிகளின் சதித்திட்டங்கள் இருந்தபோதிலும், எது வந்தாலும் அல்லாஹ்வின் கரம் அவர் மீது எப்போதும் இருந்து கொண்டிருக்கும் என்பதும் தெளிவாகிறது. அப்படிப்பட்ட ஒரு காலம் வரும்போது, அவர் நிச்சயமாக வெற்றி பெற்று, அவருடன் இருக்கின்ற சிறுகூட்டமாகிய நம்பிக்கையாளர்களும் பெருகி, சத்தியத்தின் செய்தியைக் கொண்டு உலகை ஒளிரச் செய்யும் விளக்குகளாகப் பூமியில் பரவுவார்கள்.

இந்த உலகமானது இறை வெளிப்பாடுகளிலிருந்து என்றென்றும் பறிக்கப்பட்டிருக்குமாயின், இந்த உலகம் நீண்ட காலமாக அழிந்து, காலத்தின்


சுழற்ச்சியில் தொலைந்து போயிருக்கும். ஏனென்றால் மனிதன் திரும்பிப் பார்க்க முடியாத வகையில் தொலைந்து போயிருப்பான். ஆனால் அல்லாஹ் ஒரு கருணையுள்ள இறைவனாவான். அவன் தனது அடியார்களின் தவறான எண்ணங்கள் மற்றும் தீய செயல்களின் விளைவுகளை எச்சரிக்கும் வரை அவன் ஒருபோதும் அவர்களை தண்டிப்பதில்லை. அவர்களை எச்சரிப்பதற்காகவும், அவர்களை நேர்வழிக்குக் கொண்டு வர முயற்சி செய்வதற்காகவும் தான் தேர்ந்தெடுத்த அடியார்களை அனுப்புகிறான். அவர்களில் கட்டுப்படுபவர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள், அதே சமயம் அவர்களில் கட்டுப்படாதவர்கள், அவனுக்கும் அவனுடைய தூதருக்கும் புற முதுகு காட்டுபவர்கள், விரக்தியடைந்த ஆன்மாக்களைப் போன்றவர்கள் ஆவர், அவர்கள் இறுதி தண்டனையை அனுபவிக்கும் வரை எந்த திசையும் இல்லாமல் தவறான ஆன்மாக்களாக மாற முடிவு செய்த விரக்தியடைந்த ஆன்மாக்கள் போன்றவர்கள். ஆனால் அல்லாஹ் கூறுவது போல்:

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே (பாவங்களினால்) தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்”... (அஸ் ஸுமர் 39:54) 

இந்த விஷயங்களை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் அவசியமான தவ்ஃபீக்கையும், வாய்ப்பையும், இல்ம் எனும் அறிவையும் வழங்குவானாக!,

மேலும், குறிப்பாக சீர்திருத்தத்திற்கான அனைத்து அடையாளங்களையும் வாய்ப்புகளையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய போதிலும், அவர்கள் சீர்திருத்தம் செய்து கொள்ளாமல், மனந்திரும்புதலுடன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பாமல் தங்கள் மாயையில் நிலைத்திருந்த அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் புரிந்து கொள்ளச் செய்வானாக!

இன்ஷாஅல்லாஹ்... ஆமீன்..,

ஆதாரம் : 5.5.2023 (ஹிஜிரி 1444 ஷவ்வால் பிறை 14) ஜும்மா குத்பா.

தலைப்பு : இறை வெளிப்பாடுகளின் மறைவான மற்றும் வியக்கத்தக்க செயல்பாட்டின் நிலையும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும் (பாகம்-2)