24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி
உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.
(குறிப்பு: பல்வேறு அரபு நாடுகளில் தங்கள் அரசாங்கத்திற்கு எதிராக அரபு மக்கள் மேற்கொண்ட கிளர்ச்சியை மேற்குலகமானது அரேபிய 'வசந்த காலம்' (Arab Spring) என்று குறிப்பிடுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இது ஒரு உண்மையான வசந்த காலம் அல்ல, மாறாக குளிர்ந்த குளிர்காலமாகும், ஏனெனில் மேற்கத்திய நடத்தைகளை கடைபிடித்து, அவர்களது கலாச்சாரங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் அரேபிய மக்கள் தங்களது சொந்த மார்க்கமாகிய இஸ்லாத்தை இழந்துவிடுகின்றனர். அநீதியை எதிர்த்துப் போராடுவதும், சர்வாதிகாரத்தை எதிர்கொண்டு தங்களது உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவது என்பது அரபு மக்களின் உரிமையாகும், ஆயினும், உரிமைகளைப் பெறுவதற்காக தற்கொலை அல்லது இஸ்லாம் கற்றுத் தராத வழிகளில் முஸ்லிம் அல்லாத்வரகளைப் போன்று நடந்து கொள்வது, மேற்கத்திய நாகரீகங்களை ஏற்றுக்கொள்வது இவை அனைத்தும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரபுகளின் இந்தத் துயர நிலையையே அரபு மக்களின் குளிர் காலம் (Arab winter) என்று கலீஃபதுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்)
ஒரு நாட்டில் அநீதிக்கு எதிராக போராடுவதும், நீதியை நிலைநாட்டுவதும் மனித உரிமையாகும்.
நான் கடந்த வாரம் உங்களுக்கு கூறிய அரேபிய நாடுகளின் துயரம் குறித்து, இது ஒரு தற்கொலையில் இருந்து தொடங்கியது என்பதைக் கூறினேன்.
தற்போது நான் அதிகாரம் தங்கள் கைகளில் இருப்பதாகவும், அதனால் தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றும் கருதி தங்கள் நாட்டின் சக குடிமக்களை எதேச்சாதிகார விருப்பத்திற்கு அடிமைப்படுத்த நினைக்கும் எதேச்சாதிகார அதிகாரிகளுக்கு எதிரான சாமானிய மக்களின் தைரியம் குறித்த கூடுதல் தகவல்களைக் கண்டறிய முயற்சிப்பேன்
அரேபிய 'குளிர்காலம்' ஒரு மோசமான [மன ரீதியான அதிர்ச்சியை ஏற்படுத்தும்] வழியில் தொடங்கியது என்றபோதிலும், அது துல்லியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டும், அதாவது ஒரு நாட்டில் அநீதி ஏற்படும் போதெல்லாம், அந்த அநீதிக்கு எதிராகப் பேசவும், நியாயத்தையும் நீதியையும், மனிதனின் சுதந்திரத்தையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கும் தைரியமே அவசியமானதாகும். தீன் - மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்று இஸ்லாம் போதிக்கிறது.
'தீன்' என்ற சொல் மிகவும் பரந்ததாக உள்ளது, மேலும் அடிப்படையில் (அது) மனிதனின் வாழ்க்கை முறையைக் குறிக்கிறது, மேலும், மனிதகுலம் அனைத்தின் இயற்கையான மற்றும் சரியான வாழ்க்கை முறை என்பது தனித்துவமிக்கப் படைப்பாளனாகிய
சர்வவல்லமையுள்ள இறைவனிடத்தில் (தன்னை) அர்ப்பணிப்பதாகும். மேலும் இந்த 'தீன்' என்பது முஸ்லிம்களின் தலைமையின் கீழ் இருக்கின்ற நாடுகள் மற்றும் மாநிலங்களின் அரசாங்கங்களையும் குறிக்கிறது - இஸ்லாம் என்பது தனித்துவமான இறைவனிடத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து உண்மையான நம்பிக்கையாளர்களின் அடிப்படை வாழ்வியல் முறையாகும்.
நான் இங்கு குறிப்பாக 'இஸ்லாமிய' நாடுகள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் நாடுகளைப் பற்றி கூறுகிறேன்: தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் நாட்டில்
அத்துமீறல்களை மேற்கொண்டு இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும்போது - அவர்களது அடக்குமுறையை நிறுத்துவதற்கும், சர்வவல்லமையுள்ள இறைவனின் உண்மையான போதனைகளின் பக்கம் திரும்பும் பொருட்டு அதன் அடக்குமுறை அதிகாரத்திற்கு அழைப்பு விடுப்பது அந்த நாட்டு மக்களின் உரிமையாகும். (இது நீதி - நேர்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும்).
இஸ்லாம் அநீதியை அனுமதிக்கப்பட்ட வழிகளில் எதிர்க்க வேண்டும் என்று போதிக்கிறதேத் தவிர, அனுமதிக்கப்படாத வழிகளில் அல்ல.
தற்கொலைகள் இவ்விஷயத்தில் தடுக்கப்பட்டவை (அதாவது ஹராம்) ஆகும், இருந்தபோதிலும், நீதியை உரிமையுடன் கோருவதும், இறையச்சம் முடையவர்களின் (அதாவது, இறைவனுக்கு அஞ்சுவர்கள், பக்தியும், நீதியும்மிக்கவர்களின்) வழிகளைப் பின்பற்றுவதும் மக்களுக்குரிய உரிமையாகும்.
நான் இங்கு முன்னிலைப்படுத்த விரும்புவது என்னவென்றால் அநீதிக்கு எதிரான கிளர்ச்சியாக தற்கொலை என்ற செயல் அடிப்படையாகிவிடக் கூடாது, உலகிற்கு தாங்கள் அறிக்கைகளை வெளியிடுவதற்காக தற்கொலை செய்தவரை எவரும் பின்பற்றவும் கூடாது. ஒருவரது குரலை ஒலிக்கச் செய்ய, சர்வவல்லமையுள்ள இறைவனுக்கு அஞ்சி அவர் உயிருடன் நிலைத்திருக்க வேண்டும், மேலும் ஒருவரின் உரிமைகளுக்காகவும், அதேப் போன்று தமது சக குடிமக்களின் உரிமைகளுக்காகவும் அவர் போராட வேண்டும்.
சர்வாதிகார அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கான அத்தகையதொரு உதாரணம் எதுவென்றால் அல்ஜீரிய மக்கள் தங்களது ஏழாவது ஜனாதிபதிக்கு எதிராக 1999 முதல் (அவரது) இருபது வருட சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு 2019 இல் அவர் ராஜினாமா செய்யும் வரை அவர்கள் கிளர்ச்சி செய்தனர். பல தசாப்தங்களாக அல்ஜீரியாவை ஆளும் அத்தகைய சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, எதிர்த்து நிற்பதற்காக அல்ஜீரியர்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டனர்.
அதன் ஜனாதிபதியான அப்துல்அஜீஸ் பௌடிஃப்லிகா என்பவர் மிகவும் முதிர்ந்த வயதை அடைந்து நோயால் அவதிப்பட்ட போதிலும்,அதிகாரத்தின் மீது மிகவும் தாகம் கொண்டிருந்தார், 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, (அப்போது) 82 வயதான இந்த முதியவர் (தன் வெற்றியை குறித்து) தனக்குத் தானே உறுதியாக நம்பினார். மேலும் 2019 ஏப்ரலில் நடைபெறவிருக்கும் தேர்தலில் தான் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்தார். சுவிட்ஸர்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் தனது பினாமியின் மூலம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அல்ஜீரியாவின் தலைமைப் பொறுப்பில் 20 ஆண்டுகள் இருந்தபோது, அவர் மீது பல மோசடி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இன்னும் அவர் மரணப் படுக்கையில் இருந்தபோதும், அவர் ஆட்சியில் இருக்க விரும்பினார்! அவரது உடல்நிலை மற்றும் அவரது வயது முதிர்ந்த நிலை காரணமாக அவரை ஒரு முக மூடியாக பயன்படுத்தி அவருக்குப் பின்னால் இருந்துக் கொண்டு மற்ற பல சர்வாதிகாரிகள் அல்ஜீரியாவின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வார்கள் என்பதை அல்ஜீரியர்கள் இறுதியில் உணர்ந்துக் கொண்டார்கள்.
எனவே, பல்லாயிரக்கணக்கான அல்ஜீரியர்கள் அவரது வேட்புமனுவுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர், மேலும் அவர்கள் மாற்றத்தைக் கோரி தெருக்களில் இறங்கினர், மேலும் 20 ஆண்டுகால பௌடிஃப்லிகாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது, ஏனென்றால், அதிகாரத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற அவரதுத் தாகத்தால் அவர்கள் வெறுத்துப்போயினர்.
அதனால்தான், போராட்டங்கள் வாரக்கணக்கில் நீடித்தன. ஏனெனில் அவர்கள் மாற்றத்தையும், இறுதியாக அவர்களுக்கு எப்போது ஒரு புதிய அரசாங்கம் ஒன்று கிடைக்கும் என்பதையும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தலைநகர் அல்ஜியர்ஸிலும், அதேப் போன்று ஓரான், பெஜாயா மற்றும் பிற நகரங்களிலும் எதிர்ப்புகளும், அதிருப்தி ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
அதிபர் அப்துல் அஜீஸ் பௌடிஃப்லிகா தேர்தலில் போட்டியிட்டால், அதன் முன்னேற்றத்தை கண்காணிக்க தாங்கள் தேர்தலில் பங்கேற்க மறுப்பதாக 1000-த்திற்க்கும் மேற்பட்ட அல்ஜீரிய நீதிபதிகள் கூறினர். மேலும் அவருக்கு எதிராகவும் அல்ஜீரியாவின் ஜனாதிபதி பதவிக்கான அவரது வேட்புமனுவிற்கு எதிராகவும் எதிர்ப்புக்கள் தொடங்கியதில் இருந்து நோய்வாய்ப்பட்ட தலைவர் எதிர்கொள்ள வேண்டியிருந்த மிகப்பெரிய அவமானம் இதுவே. பௌடிஃப்லிகா, தான் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறிய போதிலும், அவரும் அவரது அரசாங்கமும் தாங்கள் எப்போதும் மேலோங்கி இருப்பதையும், அவர்களின் வார்த்தைகள் செல்வாக்குடைவையாக இருப்பதையும், எதிர்ப்பவர்கள் குறிப்பாக இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்திக் கொள்வதையும் உறுதி செய்வதற்காக அவர்கள் மற்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். ஆயினும், அந்த அரசாங்கத்திற்கு அது மிகவும் தாமதமாகிப் போனது. இளைஞர்களின் உள்ளுணர்வு இறுதியாக விழித்துக்கொண்டது. மேலும் அவர்களின் வாழ்க்கையை மூழ்கடித்த மிதமிஞ்சிய மற்றும் காலாவதியான சர்வாதிகார ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அவர்கள் மாற்றத்தை விரும்பினர். அவர்கள் அரசியலை (மறுபரிசீலனை) செய்ய விரும்பினர்; அவர்கள் ஓர் அரசியல் மறுமலர்ச்சியை விரும்பினர். பௌடிஃப்லிகா உடனான அவர்களின் அணுகுமுறையானது இறுதியில் மிகுந்த அவமானத்துடன் முற்றுப் பெற்றது, மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது 84 ஆவது வயதில் மரணித்தார்.
அல்ஜீரியா அதன் பரந்த அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் காரணமாக ஒப்பீட்டளவில் செழிப்பானதாக இருந்தது. ஆனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன், இந்த நாட்டின் பொருளாதாரத்தில் இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது, ஏனெனில் எண்ணெய் (அந்த நாட்டின்) மிகப்பெரிய வருமான வாயில்களில் ஒன்றாக இருந்தது.
2023 இல், ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன்” நிறுவனத்தின் அடிப்படையில் பொருளாதார சுதந்திர குறியீட்டில் (Index of Economic Freedom), அல்ஜீரியப் பொருளாதாரம் உலக அளவில் 164 ஆக மதிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில், அல்ஜீரியா மத்திய கிழக்கு/வட ஆஃப்ரிக்கா பிராந்தியத்தில் உள்ள 14 நாடுகளில் 13 ஆவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அப்துல் மாஜித் டெப்பூனி என்பவர் தற்போதைய ஜனாதிபதி ஆவார். 12 டிசம்பர் 2019 அன்று நடந்த தேர்தலில் (ஏப்ரலில் இருந்து டிசம்பருக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போது),வெற்றி பெற்றார். மேலும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்த பிறகும் இன்னும் அவர் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
பௌடிஃப்லிகாவின் வேட்புமனுவுக்கு எதிரான கிளர்ச்சியிலிருந்து, ஒரு ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருக்க உரிமை உண்டு என்பது குறித்து அல்ஜீரிய அரசியலமைப்பில் சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. எனவே, உலகில் மாற்றங்கள் ஏற்பட வேண்டிய அவசியம் இருப்பதை நாம் காண்கிறோம். சர்வாதிகாரிகள் [சர்வாதிகாரத்தைப் பிரயோகிக்கும்
தலைவர்கள்] எந்த தேர்தல் மோசடியும் இல்லாமல், மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தவர்களால், மக்களின் குரலை செவிமடுப்பவர்களைக் கொண்டு மாற்றப்பட வேண்டும். எவ்வாறு வாக்களிப்பது [யாருக்கு வாக்களிப்பது] என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு நன்மை பயக்கும் மாற்றத்தை உண்மையிலேயே எது கொண்டு வரும் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக முஸ்லீம் நாடுகளுக்கு அந்தந்த இஸ்லாமிய நாடுகளைச் சார்ந்த முஸ்லிம்கள் தக்வா- இறையச்சம் கொண்டவர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும்.
ஆனால் இன்று, துரதிருஷ்டவசமாக, இறைச் சட்டங்களாகிய இஸ்லாமிய சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, தனது நாட்டை வழிநடத்துவதற்காக தக்வா- இறையச்சம் கொண்ட ஒருவரை நாம் கண்டறிவது என்பது மிகவும் அரிதாக உள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரியது! இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் தங்கள் நாட்டை நிறுவுவதில், உலகம் மற்றும் அதன் கவர்ச்சிகளால் மயங்கி விடாமல், தங்களது சொந்த அரசியல் ஆயாதங்களைத் தேடாமல், மிகச் சிறந்த தலைவரான ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றும் தக்வா உடையவர்களே இஸ்லாமிய நாடுகளின் தலைவராக இருக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன், அதனால் (வரக்கூடிய) ஒரு நாளில் கெட்டவர்கள் அல்ல, மாறாக இறையச்சமுடையவர்கள் ஆட்சியில் அமர்வார்கள்.இறையச்சம் உடையவர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டால், அவர்களின் நாடும் உலகமும் ஒரு புதிய சுவாசத்தை - உயிர் உணர்வை கண்டு கொள்ளும்- அது இஸ்லாத்திற்கு ஆதரவான வாழ்வின் உயிர் மூச்சாகும். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.