நாள்: 22 செப்டம்பர் 2024
18 ரபீயுல் அல்லல், ஹிஜ்ரி 1446
பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்
இன்று ஹஜ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் சீரத்தை (அதாவது அன்னாரின் வாழ்வு, நற்குணம் மற்றும் நடைமுறைகளை) கொண்டாடுவதானது நமக்கு ஒரு மாபெரும் அருளாகும். நாம் நபியின் எந்த ஒரு ஆண்டு விழாவை (அல்லது பிறந்த நாளை) கொண்டாடுவதில்லை, மாறாகமுழுமை பொருந்திய மனிதராகிய ரஹ்மதுல்லில்-ஆலமீன் (அனைத்து உலகங்களுக்கும் அருட்கொடை), காத்தம்-அன்-நபிய்யீன் (அனைத்து நபிமார்களுக்கும் முத்திரை(ஸல்) அவர்களின் சீரத்தை (அதாவது வாழ்வு, நற்குணம் மற்றும் நடைமுறைகளை) மட்டுமே நாம் கொண்டாடுகிறோம். ஆகையால், இன்று எனது உரையை செவி மடுக்கும் உங்கள் அனைவருக்கும், ஸீரத்துன்-நபி(ஸல்) (அவர்களின் கொண்டாட்டம் வெறுமனே) ஒரு நாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு மட்டுமே கொண்டாடப்படக் கூடிய ஒன்றல்ல என்பதை உங்களுக்கு நினைவூட்டுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நபி(ஸல்) அவர்களின் ஸீரத் நமது அன்றாட வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் (சுன்னத்) நடைமுறைகளை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அன்னாரே நம்முடைய சொந்த கிப்லா ஆவார்கள், அதாவது நமது சொந்த வழிகாட்டியாகிய – முழுமைபொருந்திய மனிதர் ஆவார்கள்.
ஆகையால், ரபீ’யுல் அவ்வல் மாதம் உலகின் முகத்தை மாற்றிய முக்கியதொரு நிகழ்வை குறிக்கிறது, அந்த நிகழ்வே அனைத்து மனிதர்களிலும் மிகச் சிறந்தவரும், கருணை மிக்கவரும், முழுமை பொருந்தியரும், நபிமார்களின் முத்திரையுமாகிய முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறப்பாகும்.
முஸ்லிம்களாகிய நாம், இஸ்லாத்தின் திருத்தூதரின் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, ஆனால் அன்னாரது வாழ்வையும், அன்னார் மேற்கொண்ட பணிகளையும் நினைவுகூருகிறோம். அன்னாரது ஆயுள் சாதனைகள், வெற்றி கொண்டவை, மகிழ்ச்சி மற்றும் துக்கங்கள் போன்றவற்றை நினைவுகூருகிறோம், இன்னும் அன்னாரது வாழ்வையும், நற்குணங்களையும் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறோம், மேலும் நம்மை அன்னாரது சாயலில் வடிவமைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். ஆகையால், இந்த கொண்டாட்டம் இன்று முஸ்லிம்களின் இதயங்களில் எவ்வாறு ஆழமாக ஒலிக்கிறது? எப்படி?
எம்பெருமானார் ஹஜ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் பிறப்புடன், ஆன்மீக வெளிப்பாட்டின் புதியதொரு சகாப்தத்தில் புதிய சந்திரன் தோன்றும்போது, அது நம்பிக்கை கொண்டவர்களின் இதயங்களை ஆழமான ஒளியைக் கொண்டும், ஞானத்தைக் கொண்டும் பிரகாசத்துடன் ஒளிரச் செய்கிறது.
அல்லாஹ்வின் மீதும் அவனது திருத்தூதர் ஹஜ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீதும் நாம் கொண்டுள்ள நேசமானது மற்ற அனைத்தைக் காட்டிலும் உயர்ந்து நிற்காத வரையில் உண்மையான நம்பிக்கை நம்மை விட்டும் விலகியே நிற்கின்றது.
உண்மையில், ஓர் உண்மையான நம்பிக்கையாளரின் சாராம்சம் என்பது அல்லாஹ்வையும் அவனது திருத்தூதர் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களையும் அனைத்தைக் காட்டிலும் அதிகமாக நேசிப்பதிலேயே உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதான இந்த ஆழமான நேசமே முஸ்லிம்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது.
நான் உங்களை நினைவூட்டுகிறேன், நமது மேன்மை மிகுந்த திருத்தூதர் ஹஜ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் ஒருமுறை கூறியிருந்தார்கள்: “உங்களில் எவர் ஒருவரும், தனது பெற்றோர்களை விடவும், தனது குழந்தைகளை விடவும், அனைத்து மனிதர்களை விடவும் என்னை அதிகமாக நேசிக்காத வரையில் ஓர் உண்மையான நம்பிக்கையாளராக மாட்டார்.” (புஹாரி)
திருத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஏன் இவ்வாறு கூறியுள்ளார்கள்? அதாவது நீங்கள் உங்கள் பெற்றோரையும், உங்கள் குழந்தைகளையும் விட அன்னாரை நேசிக்க வேண்டும் என்று. நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை நேசிக்கும் போது, அன்னாரது நற்குணத்தை நீங்கள் காண்பீர்கள் - அன்னார் தனது சொந்த பெற்றோருடன் எவ்வாறு நடந்துகொண்டார்கள்? (குறிப்பு:இங்கேக் குறிப்பிடப்படுவது, சிறுவயதில் அன்னாரது தாயார் ஆமினாவிடம் அன்னார் நடந்துகொண்டது பற்றியதும், இறுதியில் அன்னாரதுத் தாயார் ஆமினா அவர்கள் மரணித்தார்கள், ஆனால் அன்னார் தனது பௌதீகத் தந்தை அப்துல்லாஹ்வின் அன்பையும், இருப்பையும் இழந்து போனதால், பெரும்பாலும் அன்னாரது வளர்ப்பு பெற்றோரிடம் தனது நற்குணத்தை வெளிப்படுத்தியது பற்றியதும்], இன்னும் அன்னார் தனது குழந்தைகளுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? எனவே, (அவ்வாறு நேசிக்கும் போது) இந்த நல்ல செயல்களை (நல்லப் பழக்கங்களை) உங்களால் வளர்த்துக்கொள்ள இயலும் மேலும், ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களை தேசிப்பதன் மூலம், உங்களது பெற்றோர் மற்றும் உங்களதுப் பிள்ளைகளின் மீது நீங்கள் மிகுந்த அன்பைக் கொண்டிருப்பீர்கள்.
இந்த நன்மைக்குரிய நேசத்தின் விளைவாகவே, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் யவ்முன்-நபி(ஸல்) அவர்களின் நாளை அல்லது (நம்மைப் போலவே ஸீரத்துன்-நபியை (அதாவது திருநபி(ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கையை நாமும் கொண்டாடுகிறோம்). இங்கு மொரீஷியஸ்ஸிலும், உலகின் இன்னும் பிற பகுதிகளைப் போலவே, ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் தமிழ்நாட்டிலும், இந்த புனிதமான மாதம் முழுவதும் அனைத்து பள்ளி வாயில்களிலும் இந்த மங்களகரமான பேரருளுக்குரிய நிகழ்வுக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு இரவிலும் இந்த கொண்டாட்டங்கள் புனிதத் திருக்குர்ஆனையும், (திரு நபி (ஸல்) அவர்களைப் புகழும்) கஸீதாக்கள் அல்லது நஸம்களை படிப்பதன் மூலமும், இஸ்லாத்தின் பல்வேறுத் தலைப்புகளில், குறிப்பாக திருநபி ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் அற்புதமான ஸீரத்-வாழ்க்கையை, அன்னாரது உயர்ந்த குணம் மற்றும் அன்னாரது மிகவும் பயனுள்ள போதனைகளின் உரைகளின் மூலமும் இந்தக் கொண்டாட்டங்கள் சிறப்பிக்கப்படுகின்றன.
நமது நேசத்திற்குரிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உறவைத் துண்டித்தவர்களுடன் உறவுகளை சீர் செய்து கொள்வார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தன்னிடம் இருந்து ஒதுங்கிச் சென்றவர்களிடம் கூட அன்னார் ஈடற்றப் பெருந்தன்மையைக் காட்டினார்கள். தன்னை ஒடுக்கியவர்களுக்கும் கூட அன்னார் மன்னிப்பை வழங்கினார்கள். அன்னார் எப்போதும் தொடர்ச்சியாக தனது அண்டை வீட்டாரை மென்மையுடனும் கருணையுடனும் நடத்தினார்கள். அன்னாரதுப் பெருந்தன்மைக்கு எல்லையே இல்லை. மற்றவர்கள் தமதுப் பேராசையை வெளிப்படுத்தும் இடங்களில், அன்னார் தாராளமாக நடந்து கொள்வார்கள். தனது விருந்தினர்களை ஏற்று அரவணைத்துக் கொண்ட விதங்களுக்காகவும், அனாதைகளிடம் கருணையுடன் நடந்து கொண்டதற்காகவும், ஏழைகளுக்கு மிக முக்கியமான ஆதரவை வழங்கும் விஷயங்களிலும் அன்னார் பிரபலமானவர் ஆவார்கள்.அன்னார் எப்பொழுதும் முகத்தில் புன்னகையை வெளிப்படுத்தினார்கள். மேலும் சிறந்த நடத்தையை வெளிப்படுத்துவதன் மூலம் சிறந்த முன் உதாரணத்தை வழங்கினார்கள். மேலும் அழைப்பிதழ்களை மனதார ஏற்றுக்கொண்டார்கள்.அவ்வாறு அழைக்கும் நபர் ஏழையாக இருந்தாலும் சரி அல்லது பணக்காரராக இருந்தாலும் சரி, அன்னார் அழைப்பை நிராகரிக்க மாட்டார்கள். அன்னார் நோய்வாய்ப்பட்டவர்களைச் சென்று பார்வையிட்டார்கள், சமூகத்திற்கு உணவு, தண்ணீர் மற்றும் பால் வழங்கினார்கள், மற்றவர்களுக்குப் பரிமாறிய பிறகே, தான் கடைசியாக உண்பதையும் குடிப்பதையும் அன்னார் உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
இவ்வாறான உயர்ந்த குணாதிசயங்களும் பழக்கவழக்கங்களுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வினால் அருளப்பட்டிருந்தன. திருக்குர்ஆனில், அல்லாஹ்வே அன்னாரை இவ்வாறுப் புகழ்கிறான்:“
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர் (அல் கலம் 68:5)
எனவே, நாம் ஸீரத்துன்-நபி (ஸல்) அவர்களின் தினத்தைக் கொண்டாடும் போது, நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வை, குணம் மற்றும் உன்னதமான பண்புகளை சிந்தனை செய்ய வேண்டும், அதனால் நம்மால் அன்னாரைப் பின்பற்ற இயலும். அன்னாரைப் பின்பற்றிச் செல்வதில்தான் நமக்கு பேரரருள் இருக்கின்றது. அன்னாரைப் பின்பற்றுவதன் மூலம், நாம் பல்வேறு இகழ்வுகளிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொண்டு, நம்முடைய பாவங்களுக்காக மனந்திரும்பி, அல்லாஹ்வுக்காக நம்பிக்கையாளர்களின் ஒரே உடலாக ஒன்றிணைவதற்கான வாய்ப்பை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கருணை மற்றும் அன்னாரது உம்மத்-சமூகத்தின் மீது அன்னார் கொண்டிருந்த பற்றுதல் குறித்து அல்லாஹ் இவ்வாறு விவரித்துள்ளான்:
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
“(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.” (அத்தவ்பா 9:128)
[மேற்கண்ட வசனம், 21 செப்டம்பர் 2024 வெள்ளிக்கிழமை அன்று கலீஃபத்துல்லாஹ்வின் ஸீரத்-உன்-நபி உரையின் போது சூரா அல் ஃபாத்திஹாவிற்கு பிறகு கிரியோலில் ஓர் இறை வெளிப்பாடாகவும் இறங்கியது]
உண்மையின் அடிப்படையில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பு என்பது நமக்கான ஓர் ஒளியும், வழிகாட்டுதலும் ஆகும். உண்மையில், ஒட்டுமொத்த படைப்பினத்தின் மீதும் இந்த ஒளியின் பேரருளால் அருட்கள், நீதி, சமானதாம், அமைதி ஆகியவற்றை பொழியுமாறு அல்லாஹ் விரும்பியுள்ளான். ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் அனைவரையும் ஒன்றிணைப்பதன் மூலம் தனது தேசத்தை சீர்திருத்தம் செய்து மாற்றியதில் வெற்றி கண்டுள்ளார்கள். அன்னார் அம்மக்களுக்கு மரியாதை வழங்கினார்கள், மேலும் இஸ்லாத்தின் ஒளியால் அம்மக்கள் அறிவொளி பெற்றனர். திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ் அவர்களது இதயங்களை பிரகாசமாக்கி, அவர்களின் இதயங்களை ஒன்றிணைத்தான்:
وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا
அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; (ஆல இம்ரான் 3:104)
ஸீரத்துன்-நபி (ஸல்) அவர்களின் அருளுக்குரிய சந்தர்ப்பத்தில், நம் வாழ்வில் உண்மையான மற்றும் நேர்மையான மாற்றத்தை ஊக்குவிக்க, நமது இதயத்தின் ஆழத்திலிருந்து - நமது இதயத்தின் மிக ஆழத்திலிருந்து - நாம் பேச வேணடும் அது நமக்கு இக்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டிலும் நன்மை பயக்கும். இருப்பினும், அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆனில் அறிவுறுத்தியிருப்பதை போல, நாம் அன்னாருக்கு செலுத்த வேண்டிய மரியாதை குறித்து மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். முற்கால மக்கள் தங்களது நபிமார்களிடம் வழிபாட்டை செய்து கொண்டதைப் போல நாமும் வழிதவறிவிடாமல் அண்ணல் நபி ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு மரியாதை செலுத்துவதானது மிகவும் உண்மையான முறையில் செய்யப்பட வேண்டும்.
ஆகவே, அறியாமைக் காலத்து மக்கள் தங்களது சிலைகளை கொண்டாடியதைப் போல அன்னாரது பிறந்த நாளை கொண்டாடாமல். ஸீரத்-உன்- நபி (ஸல்) அவர்களின் கொண்டாட்டம் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு ஏற்பவே மிகவும் வரையறுக்கப்பட்ட வழிகளில் நடத்தப்பட வேண்டும் என்பது அவசியமாகும். இஸ்லாமியர்களான நாம், அண்ணல் நபி ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் கூற்றுகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை நமது சொந்த முன்மாதிரிகளின் மூலம் (எப்போதும்) உயிருடன் வைத்திருக்க வேண்டும்.அன்னார் இன்ன பிற உயிர்களையும் பிரகாசிக்கச் செய்யும் ஓர் ஒளியாக வந்துள்ளார்கள். எனது ஸஹாபாக்கள் அனைவரும் அன்னாருடைய முன்னுதாரணத்தை பின்பற்றவும்,அன்னார் கொண்டு வந்த அற்புதங்களிலும், அடையாளங்களிலும் உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கவும் முயற்சிக்க வேண்டும், அவைகள் உலகம் முழுவதும் இஸ்லாத்தின் பலப்படுத்துதலில் உதவியாக இருந்தன
நமது நேசத்திற்குரிய எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாவின் சர்வ வல்லமையின் மூலமாக சிறப்புமிக்க அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்துவதில் பிரசித்திப் பெற்றவர்களாய் திகழ்ந்தார்கள்.
மேலும் அன்னாரது மிகவும் சிறப்புமிக்கதும், என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடிய அதிசயமாகவும் திகழ்வதுத் திருக் குர்ஆன் ஆகும்:
تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا
“உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.” (அல் ஃபுர்ஃகான் 25:2)
ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அன்னாரது பழக்கவழக்கங்கள் மற்றும் பண்புகள் பற்றி வினவப்பட்டபோது, "அன்னாரது நடத்தை திருக்குர்ஆன் ஆகவே இருந்தது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். (அதாவது, திருக்குர்ஆன் அல்லாஹ்விடம் இருந்து வந்த வழிகாட்டுதலின் வேதம் என்கின்ற போது, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை திருக்குர்ஆனின் நடைமுறை செயல்வடிவம் என்பது பொருள் ஆகும்).
மேலும் அல்லாஹ் திருக் குர்ஆனில் கூறுகிறான்:
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல் அஹ்ஸாப் 33:22)
எனவே, அல்லாஹ் தனது மகத்தான கிருபையால் நமது ஸீரத்-உன்-நபி கொண்டாட்டங்களின் மீது அருள்புரிய வேண்டும் என்றும், நமது நேசத்திற்குரிய எஜமானரும் வழிகாட்டியுமான ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் உண்மையான முன்மாதிரிகளை நாம் அனைவரும் பின்பற்றி நடப்பதற்கு அல்லாஹ் நமக்கு உதவி செய்வதற்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்தக் கொண்டாட்டங்கள் உங்கள் அனைவரின் வாழ்விலும், எனது ஸஹாபாக்கள் மற்றும் உம்மத்தார் (முஸ்லிம் சமூகத்தார்) அனைவரின் வாழ்விலும் மாபெரும் சீர்திருத்தத்தை ஏற்படுத்தட்டுமாக!. அல்லாஹ் மற்றும் அவனது நபி முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் ஒளி இம்மையிலும் மறுமையிலும் நம்மீது எப்போதும் ஒளிரச் செய்யட்டுமாக. இன்ஷா அல்லாஹ், ஆமீன், சும்ம ஆமீன், யா ரப்பல் ஆலமீன்.
அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின்
கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
انك انت السميع الدعاء.
ரப்பனா தகப்பல் மின்னா இன்னக அன்த ஸ் ஸமீவுல் அலீம்.ரப்பனா தகப்பல் மின்னா இன்னக அன்தஸ் ஸமீவுத் துஆ.
எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக!, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்! நிச்சயமாக நீயே பிரார்த்தனைகள்(யாவற்றையும்) செவியுறுபவனாக இருக்கின்றாய்!”