சைத்தானின் திட்டம் மற்றும் அவனது படைக்கு எதிரான இறைவனின் அருள்

“இறை நம்பிக்கை கொண்டவர்களே! முழுமையான உள்ளத்துடன் இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள். மேலும் ஷைத்தானின் அடிச்சுவட்டை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான எதிரி ஆவான்.”

மேற்கூறிய திருக் குர்ஆன்- அல் பகரா வசனம் 209 ஐ ஓதிக் காட்டியவர்களாக

அனைத்து மனித சமுதாயத்திற்கும், இல்மை அதாவது ஞானத்தை வழங்கும்படியும், இந்த உலகின் இருளிலிருந்து மக்களை அகற்றி, ஒவ்வொருவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் தபாரக்தாலாவின் வெளிச்சத்தின் பக்கம் அதாவது ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்கும் பிரார்த்தனை செய்தவர்களாக ஹஸ்ரத் முனீர் அஹமத் அஜீம் (அலை) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்கிறார்கள்:-

"ஷைத்தான் அனைத்துப் பொய்களுக்கும் தந்தையாவான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் அறிவின்மை
எனும் இருளின் இளவரசனும், இந்த பௌதீக உலகின் தெய்வமும், ஆண்களையும் பெண்களையும் தவறான வழியில் வழிநடத்த, தன்னை ஒளியின் தேவ தூதனாக காட்டிக்கொள்பவனுமாவான். கடந்த காலங்களைப் போலவே இந்த நாட்களிலும், பல குழுக்களின் பல்வேறு மார்க்கத் தலைவர்களும் போலித் தோற்றங்களுடன் தங்களை சர்வவல்லமையுள்ள இறைவனின் தூதர்களாக காட்டிக் கொள்கின்றனர். உண்மையில் அவர்கள் இவ்வுலகின் தெய்வமாகிய ஷைத்தானின் சீடர்களாவார்கள். மேலும் அவர்கள் மக்களை அறிவின்மையின் இருளில் வைத்திருக்கிறார்கள், அதனால், அல்லாஹ்(தபாரக்) எந்த அளவுக்கு அவர்களை நேசிக்கிறான் என்பதை அவர்களால் கண்டு கொள்ள இயலாது. அல்லாஹ்வின் பிரகாசிக்கின்ற ஒளியை அவர்கள் மறைக்க முயற்சி செய்கிறார்கள், அதன் காரணமாக இழந்து போன ஆன்மாக்களை அவன் பக்கமும், இஸ்லாம் மற்றும் தவ்ஹீத் அதாவது அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் பக்கமும் மீட்டுக் கொண்டுவர அல்லாஹ் தேர்ந்தெடுத்து அருள்புரிந்த தூதர்களின் வடிவத்தில் அவ்வப்போது அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்.

பாவிகள் அனைவரும், அது போன்றே, அல்லாஹ்வின் ஏகத்துவம், அல்லாஹ்வின் தூதர்கள் மற்றும் அவனது அனைத்து கட்டளைகள் மற்றும், அவன் நிறுவியுள்ள முழுமை பொருந்திய நம்பிக்கையான அதாவது இஸ்லாத்தின் தூண்கள் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும் ஆன்மீக ரீதியில் மரணித்தவர்களும், குருடர்களும் ஆவர். அதாவது இஸ்லாத்தைப் பற்றி திருக்குர்ஆனின் அத்தியாயம் 5-சூரா அல்-மாயிதாவின் வசனம் 4-ல், 

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று) அவன் தெளிவுபடுத்தியுள்ளது போல்

அவர்கள் ஆன்மீகத்தின் நுட்பமான ஞானத்தையும், பார்வை அறிவையும் இழந்து விட்டவர்கள். ஏனெனில் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்(தபாரக்) ஒரே இறைவன் என்பதையும், அவனுடைய எந்தவொரு வணக்க வழிபாட்டிலும் அவனுக்கு எந்த இணையும் இல்லை என்ற உண்மையையும் அவர்கள் நிராகரிக்கிறார்கள். அவனுடைய இறைப்பண்புகளில் எவரும் கூட்டாளியாக எதனையும் பகிர்ந்து கொள்வதில்லை.

அல்லாஹ் (தபாரக்)வின் ஏகத்துவத்தைப் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் மறுப்பவர்கள் இவ்வுலகின் தீமைகளால் ஆளப்படுகிறார்கள். அதன் காரணத்தினாலேயே, மக்களை அல்லாஹ் (தாபாரக்)வின் வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருவதற்கு, இருளிலிருந்து அவர்களை அகற்றுவதற்கு, ஷைத்தானின் தீய சக்திகளின் அனைத்து ஈர்ப்புகளிலிருந்தும் அகற்றுவதற்காகவும் ஒரு தீர்க்கதரிசி ரூஹுல்-குத்தூஸுடன் அதாவது பரிசுத்த ஆவியுடன் அவரை அல்லாஹ்(தபாரக்) அனுப்புகின்றபோது, பின்னர் ஷைத்தான், எல்லாம் வல்ல இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்திடலாம் என்பதற்காக மக்களிடத்தில் தன்னை வெளிப்படுத்துகிறான், அந்த மக்களும் தங்கள் மனதில் ஷைத்தான் போட்டு வைத்திருப்பதை நம்புவார்கள், அவர்கள் முட்டாள் தனத்துடன் முரட்டுத் தனமாக, இறைச் செய்தியின் பக்கம் செவிசாய்க்க விரும்புவதில்லை.

அவர்களின் இவ்வாறான நம்பிக்கைக்கிடமற்ற, கதிகெட்ட நிலையிலும் ஏதாவதொரு வகையில் அவர்களது கண்கள் திறக்கப்பட்டால் அன்றி அவர்கள் நிரந்தரமான அழிவை நோக்கி செல்லத் துவங்குகின்றனர். ஷைத்தான் அவர்களுக்கு பகைவனாக இருந்து இரவிலும், பகலிலும்,ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் அவர்களைத் திசைதிருப்ப ஒவ்வொரு மூச்சிலும் முயற்சி செய்து இறைவனால் நிறுவப்பட்டுள்ள இறை வழிகளில் இருந்தும் அவர்களை வழி தவறச் செய்கின்ற அதேவேளையில், அவர்களோ அவனை தங்களது உற்ற நண்பன் என்று நினைத்துக் கொள்கின்றார்கள். இந்த மக்கள் தாங்கள் சரியான பாதையில் இருப்பதாகவும் நினைக்கத் தொடங்குகின்றார்கள், ஷைத்தானிடமிருந்து அவர்கள் பெறுகின்ற தவறான வழிகாட்டுதல்களை தெய்வீக வழிகாட்டுதலாகவும் எடுத்துக் கொள்கிறார்கள், மேலும் அவர்கள் தங்களை தூய்மையானவர்கள் என்றும், அனைத்து தீங்குகளுக்கும் அழிவுகளுக்கும் எதிராக எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளவர்கள் என்றும் நினைக்கத் துவங்கிவிடுகிறார்கள்.

ஆகவே, "நான் ஒருபோதும் பாவம் செய்யவில்லை" என்று சொல்லும் நபர் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார். இதன் காரணமாகவே அல்லாஹ்(தபார)வின் தூதர் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தோன்ற வேண்டியுள்ளது, அதாவது அதற்குக் காரணம் ஷைத்தானின் தீய சக்திகள் செய்து வைத்திருந்ததை அழிக்க வேண்டும் என்பதாகும்.

எனவே, மனித குலமே! உலகம் முழுவதும் உள்ள மக்களே! உலகம் முழுவதும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்! நான் இதை மீண்டும். மீண்டும்.. கூறிக் கொள்கிறேன், நான் இதை மீண்டும் பிரகடனம் செய்வதை நிறுத்தப் போவதில்லை: மனிதகுலம் ஆபத்தில் உள்ளது! அல்லாஹ்வின் கோபமும் தண்டனையும் மிக அதிகமாக உள்ளது. மனிதகுலத்தின் அழிவு பல வழிகளிலும் வந்து கொண்டிருக்கிறது. உங்களை சுற்றிப் பாருங்கள்! உலகில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? என்பதைப் பாருங்கள்! ஒவ்வொரு நாளும் எத்தனையோ இலட்சக்கணக்கான மக்கள் ஆபத்தான வைரஸ்கள், வெள்ளம், நிலச்சரிவுகள், பூகம்பங்கள், பஞ்சம் ஆகியவற்றால் இறந்து கொண்டிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். பல்வேறு நாடுகளில் மக்கள் தங்கள் வேலைகளையும் இழந்து வருகின்றனர், உலகின் பொருளாதாரம், பல்வேறு நாடுகளில் பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருகிறது.

இவ்வாறான நிலைமை நிலவுகின்ற போதிலும், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இன்னும் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடுகிறார்கள், மேலும் மக்களின் நிகழ்காலம் மற்றும் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய பிரதான விஷயங்களிலிருந்தும் அவர்களது மனதைத் திசை திருப்புகிறார்கள். மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள், மற்றவர்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய முஸ்லீம்களோ தங்களைத் தாங்களே இஸ்லாமல்லாத வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறவர்களாகவும் நம்பிக்கையற்றவர்களை தங்களின் நடைமுறையில் பின்பற்றுகிறவர்களாகவும் இருக்கின்றனர்.

இத்தகைய பேராபத்துகள் மற்றும் பேரழிவுகளின் பட்டியல் மிக நீளமானது. மக்கள் எல்லா வரம்புகளையும் மீறிவிட்டனர், இதனால், மக்கள் அனைவரும் சிந்தித்து உண்மையான வாழ்க்கை முறையை நோக்கி, இஸ்லாத்தின் பக்கம், நன்மையின் பக்கம், கருணையின் பக்கம், ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாகவும் இருக்கின்ற அதேவேளையில், உங்களது பிரார்த்தனைகளையும் வணக்கவழிபாடுகளையும் வானங்கள் மற்றும் பூமியின் ஒரே இறைவனாகிய, மனிதகுலத்தை உருவாக்கிய அல்லாஹ்(தபாரக்)வின் பக்கம் திரும்பிவிடலாம் என்பதற்காக அல்லாஹ்(தபாரக்) தனது கோபத்தை பல வழிகளிலும் வெளிப்படுத்துகிறான்.

ஆகவே, மனித குலமே, எனது முஸ்லீம் சகோதரர்களே, சகோதரிகளே, அன்புக்குரிய குழந்தைகளே இன்னும் உலகெங்கிலும் உள்ள எனது ஸஹாபிகளே அனைவரும் அல்லாஹ் தபாரக்தாலாவிற்க்கு அடிபணிந்துவிடுங்கள்!

ஷைத்தானை எதிர்த்து நில்லுங்கள், அதனால், அவன் உங்களை விட்டும் ஓடிவிடுவான். அல்லாஹ் தபாரக் தாலாவின் அதிதீவிர வீரர்களாகி, உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும் அவனது ஏகத்துவத்தை மிகுந்த வீரியத்துடன் பாதுகாப்பவர்களாகிவிடுங்கள், நல்லதைச் செய்யுங்கள், நல்லதையேப் பாருங்கள், நல்லவர்களாகவே நடந்துகொள்ளுங்கள். முஸ்லிம்களை நல்ல முறையில் பயிற்சி செய்யுங்கள், முஸ்லிம்கள் என்று வெறும் பெயரளவில் மட்டுமே இருந்து விடாமல், அதனை செயல்படுத்திக் காட்டும் நல்ல முஸ்லிம்களாக நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் தபாரக்தாலாவிற்கு அருகில் வாருங்கள்! தினசரித் தொழுகைகளை மேற்கொள்ளுங்கள்!, திருக்குர்ஆனைப் படியுங்கள்! படைப்பினங்களுடன் அல்லாமல் அல்லாஹ்(தபாரக்)வுடன் நெருங்கிய நட்பு கொள்ளுங்கள், பிறகு அதற்கு பிரதிபலனாக அல்லாஹ்(தபாரக்) உங்களை எந்த அளவுக்கு நேசிப்பான் என்பதையும், எந்த அளவுக்கு நெருங்கி வந்துவிடுவான் என்பதையும் நீங்கள் காண்பீர்கள்! மேலும், நீங்கள் உங்களது சொந்த இதயத்தை உங்களால் பார்க்க முடியும், மேலும் உங்கள் இதயத்தின் நிலையை உங்களுக்குக் காண்பிப்பதற்காக அல்லாஹ்(தபாரக்) உங்களுக்குள் இருக்கும் இறை ஒளியை இயக்குவதற்கு, ஏற்றி வைப்பதற்கு அனுமதியுங்கள்.

உங்கள் பாவங்களை ஒப்புக் கொள்ளுங்கள், இன்னும் அவற்றின் இருப்பை மறுக்காதீர்கள், ஏனென்றால் இறைவனின் தூய வார்த்தைகளையே நமது மனதில் வைக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டும்: "எங்களிடம் எந்த பாவமும் இல்லை என்று கூறினால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம், நம்மில் எந்த உண்மையும் இல்லை என்று பொருள். ஆனால் நாம் அல்லாஹ்(தபாரக்)விடம் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும், அப்போது அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, நமக்கு உகந்ததை நிறைவேற்றுவான். அவன் நம்முடைய பாவங்களை மன்னித்து, நாம் செய்த அனைத்துத் தவறான செயல்களிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்திவிடுவான்".

நீங்கள் ஒன்று ஷைத்தானால் ஆளப்படுகிறீர்கள் அல்லது அல்லாஹ் (தபாரக்)வால் ஆளப்படுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பாவத்திற்கு அடிமையாக இருப்பீர்கள் அல்லது இறைவனின் அடியானாக இருப்பீர்கள். பாவம் உங்களது வாழ்க்கையை கட்டுப்படுத்துமேயானால், அதனை மறுக்காமல் பாவத்தை ஒப்புக் கொண்டவர்களாய் இறைவனிடம் கதறி அழுதுவிடுங்கள். பாவிகளை ஈடேற்றி பாதுகாத்திடவும், நம்மீது இருக்கும் ஷைத்தான் மற்றும் பாவத்தின் சக்தியை உடைத்திடவும் இந்த உலகிற்கு வரக்கூடிய அவனது தூதரின் மூலம் உங்களை அவன் விடுவிக்கிறான். அவனே உங்கள் இரட்சகன் ஆவான். உங்கள் வாழ்வின் அனைத்து இரகசியங்களையும், மறைந்திருக்கும் சிந்தனைகளையும் செயல்களையும் அறியக் கூடிய தூய இறைவனின் முன்னிலையில் நீங்கள் இருக்கின்றீர்கள். இறைவனிடமிருந்து உங்களையும் உங்கள் செயல்களையும் 

மறைக்க இயலாது, ஏனெனில் நம் காதுகளை உருவாக்கியவன் இறைவன் ஆவான், அவனால் கேட்க முடியாதா? அவனே நம் கண்களை உருவாக்கினான், அவனால் பார்க்க முடியாதா?. எனவே, அவனுக்கு விசுவாசமாக இருக்கும் இதயத்தை உடையவர்களுக்கு சக்தியை வழங்குவதற்காக நமது படைப்பாளன் முழு உலகத்தையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறான்.

மனிதர்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் அல்லாஹ்(தபாரக்) கண்காணிக்கிறான். அல்லாஹ் (தபாரக்)விடமிருந்து ஒரு பாவியை மறைத்து விடுவதற்குப் பேதுமான எந்த இருளும் உலகில் இல்லை. ஆகவே, பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களும், தவறுகள் மன்னிக்கப் பட்டவர்களும் உண்மையில் மகிழ்ச்சிக்குரியவர்களாவார்கள். தவறு செய்வதாக குற்றம் சாட்டப்படாதவரும், அனைத்து வஞ்சகங்கள் இருந்தும் விடுபட்டவரும் மகிழ்ச்சிக்குரியவராவார். உலகப் பற்று கொண்ட, பாவம் செய்கின்ற ஆண் அல்லது பெண்ணின் இதயமானது, திருக்குர்ஆனின் அனைத்து போதனைகளிலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, அதுபோன்றே மற்ற வேதங்களின் படியும் ஒரு பாவி என்றே விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த உலகத்தின் தீமைகளாலும், மனித இயல்பின் இயற்கையான ஆசைகள் மற்றும் அடங்கா விருப்பங்களாலும், கட்டுப்படுத்தப்படும் ஒருவரின், இந்த பாவம் நிறைந்த இதயம் அனைத்து அருட்களையும் இழந்து விடுகிறது. ஷைத்தானின் இருண்ட சாராம்சம் என்பது உள்ளியல்பிற்குப் பதிலாக இறை ஒளியைக் கொண்டு அவர்களின் இறந்து போன இதயத்தை உயிர்ப்பிக்கவும் அவர்களது நரம்புகளில் ஓடும் இரத்தத்தை ஒளியூட்டவும் மக்கள் சர்வ வல்லமை உள்ள இறைவனாகிய அல்லாஹ்வை(தபாரக்)விடம் முறையிட்டுப் பிரார்த்திக்க கடுமையாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். உண்மையில், தனது இதயத்தை ஒரு பள்ளிவாசலாக-இறை இல்லமாக மாற்றுவதற்கு கடும் முயற்சி மேற்கொள்கின்ற அவன் அல்லது அவளிடத்தில் சர்வவல்லமையுள்ள இறைவன் குடிகொள்கிறான், அத்தகைய ஓர் அருள்பாலிக்கப்பட்ட தூய்மையான இடத்திலேயே இறைவன், அவன் அல்லது அவளோடு அவன் தொடர்ந்து வாசம் கொள்கிறான். இதுவே இறைவன் பார்க்கும் நமது இதயத்தின் உண்மையான காட்சியாகும்."

ஆதாரம் : 13.8.2021 ஜும்மா குத்பா

தலைப்பு : சைத்தானின் திட்டமும் அவனது படையும்