சக முஸ்லிம்களின் உரிமைகளை நிறைவேற்றுதல்

12 ஆகஸ்ட் 2022 |13 முஹர்ரம் 1444

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "சக முஸ்லிம்களின் உரிமைகளை நிறைவேற்றுதல்" என்ற தலைப்பில் தனது ஜும்ஆப் பேருரையை நிகழ்த்தினார்கள்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிரிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் : 49:11)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌ اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌ وَاتَّقُوا اللّٰهَ‌ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ‏

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் : 49:12)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு மசூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : " ஒரு முஸ்லிமை வார்த்தைகளால் ஏசுவது பாவமாகும். அவருடன் சண்டையிடுதல் குஃப்ர்- நிராகரிப்பாகும் " (திர்மிதி -2635)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "மற்றவர்களின் குற்றங் குறைகளை உற்று நோக்கி (புகாரின் மூலமாகவும், தம்மிடம் தவறு இல்லாதது போன்று உங்களை விட புனிதமானவர் என்றும் தனக்குத் தானேக் கருதிக்கொண்டவராய்): 'மக்கள் சீர்கேடானவர்கள்' , என்று கூறக் கூடிய ஒரு மனிதர் விரைவில் மிகவும் சீர்கேடானவராக மாறிவிடுவார்! (அதற்குக் காரணம் அவர் நம்பிக்கையாளர்களை இகழ்ந்தார் என்பதாகும்) "(முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டதாக ஹஸ்ரத் ஹுதைஃபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஏளனம் செய்பவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபு ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "தீர்ப்பு நாளில் மனிதர்களில் மிகவும் மோசமானவனாகவே இரட்டை முகத்தானைக் காண்பீர்கள். அவன் இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும் போது இன்னொரு முகத்துடனும் செல்வான்." (புகாரி, முஸ்லிம்)

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்" என்று பதிலளித்தார்கள்.

அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்" என்று கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் ஸுஃப்யான் இப்னு அஸத் ஹத்ரமி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "உண்மையில் ஒரு முஸ்லீம் சகோதரரிடம் நீங்கள் உண்மையை(த் தான்) சொல்கிறீர்கள் என்று அவர் நம்பும் போது அவரிடம் பொய்யான ஒன்றைச் சொன்னால் அது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகமாகும். (அபூதாவூத்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் முஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "எவர் ஒருவர் (முஸ்லிம்) சகோதரனை (அந்த முஸ்லிம் செய்து விட்ட) பாவத்திற்காக கேலிசெய்கிறாரோ அதேப் பாவத்தை (அவ்வாறு பழிக்கின்ற) அந்த நபரும் செய்யாதவரை மரணிக்கமாட்டார். (திர்மிதி)

எனவே, மற்றவர்களின் பாவங்களைப் பற்றி ஏளனமாகப் பேசி 'உங்களை விட புனிதமான மற்றும் தூய்மையான' அணுகுமுறையை மேற்கொள்கின்ற அந்த நபர் அதே பாவத்தில் வீழ்ந்து விடுவதற்கு வழிவகுக்கிறது.

இருப்பினும், ஒரு பாவியிடம் எச்சரிக்கை மற்றும் அறிவுரை வழங்கும் விதத்தில் பேசுவது என்பது குறிப்பிடப்பட்ட ஹதீஸில் கூறப்படும் எச்சரிக்கையின் நோக்கத்தில் காணப்பட வில்லை [ஒருவன் தன் சகோதரனையோ அல்லது சகோதரியையோ அவனுடைய/அவளுடைய பாவத்தைப் பற்றித் துன்புறுத்தி அப்பாவத்திற்கு எதிரே எச்சரிக்கை செய்து இந்தப் பழிசுமத்தும் விளையாட்டில் ஈடுபட்டு, இந்த [கடந்தகால] பாவத்தால் அவனுடைய/அவளுடைய வாழ்க்கையை கசப்பாக்குவது – அந்த நபர் செய்த பாவத்திற்காக அல்லாஹ் ஏற்கனவே அந்த நபரை மன்னித்திருக்கலாம். ஆனால் நீங்கள் [உங்கள் வரம்புக்குட்பட்ட அறிவில்] அந்த பாவத்தைக் கொண்டு அந்த நபரைத் தொடர்ந்து துன்புறுத்துகின்றீர்கள். இது ஒருபோதும் நல்லதல்ல, ஆயினும் நல்ல [தூய] இதயத்துடன் நீங்கள் அந்த நபரை அணுகி அவன்/ அவளை மீண்டும் அந்த பாவத்தில் வீழ்ந்து விடாமல் இருக்க அந்த நபருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி, திருக்குர்ஆனில் அல்லாஹ் நிறுவியுள்ள அவனது வசனங்களின்படி அவன் அல்லது அவளை நீங்கள் எச்சரிக்கை செய்தால், இது ஒரு நல்லொழுக்கத்தின் செயலாகும், ஏனெனில் நீங்கள் அந்த நபரை நன்மை செய்ய ஊக்குவிப்பதோடு, அவன் / அவளை எல்லா வகையான தீமைகளை செய்வதில் இருந்தும் / வீழ்ந்து விடுவதில் இருந்தும் எச்சரிக்கிறீர்கள் - எனவே, அறிவுரை, நல்லதைச் செய்யும்படி உபதேசிப்பதும் எச்சரிக்கை செய்வதும் நல்லொழுக்கத்தின் செயல்கள் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக‌ ஹஸ்ரத் வாதிலா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு (முஸ்லிம்) சகோதரரின் அவலநிலையில் (அது உலக கஷ்டமாக இருந்தாலும் அல்லது தீன் மார்க்க விஷயமாக இருந்தாலும் சரி) சந்தோஷத்தை வெளிப்படுத்தாதீர்கள், ஏனெனில் அல்லாஹ் அவர் மீது அவனது கருணையை பொழிந்து, அந்த அவல நிலைக்கு உங்களை உட்படுத்திவிடுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. (திர்மிதி)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு கனம் (غَنْمٍ) மற்றும் அஸ்மா பின்த் யஜீத்(ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்:

"அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் மோசமானவர்கள் யாரென்றால் நண்பர்களிடையே வதந்திகளை பேசி பிளவை ஏற்படுத்துபவர்கள் ஆவார்கள்" (அஹ்மத், பைஹகி)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ ஒரு (முஸ்லிம்)
சகோதரருடன் தேவையில்லாமல் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள் அல்லது அவருக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அவரை பரிகசிக்காதீர்கள். உங்களால் நிறைவேற்ற முடியாத ஒன்றை அவருக்கு வாக்குறுதி வழங்காதீர்கள்”. (திர்மிதி)

இருப்பினும், சரியான காரணத்தின் அடிப்படையில் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றத் தவறுவது என்பது நான் இப்போது குறிப்பிட்ட ஹதீஸின் தடையிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜைத் பின் அர்ஹம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைப் பொறுத்தவரை, வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் கொண்டவர், சில உண்மையான காரணங்களால் அதில் தோல்விஅடைந்தால், அது பாவத்திற்கான குற்றம் இல்லை. (அபூதாவூத், திர்மிதி)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் இயாத் முஜாஷாயி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அனைத்து மக்களும் அதிகளவில் பணிவை(தாழ்மை குணத்தை) வளர்த்துக் கொள்ள வேண்டும், அதனால் எவரும் மற்றவர் மீது கர்வம்/ பெருமை கொள்ள மாட்டார், எவரும் மற்றவர் மீது அடக்குமுறையை மேற்கொள்ள மாட்டார் என்பதை சர்வவல்லமை மிக்க அல்லாஹ் எனக்கு வெளிப்படுத்தியுள்ளான்." (முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"மற்றவர்கள் மீது கருணை காட்டாத ஒருவர் மீது அல்லாஹ்வும் கருணை காட்ட மாட்டான்." (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “விதவைகள் மற்றும் அனாதைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கடுமுயற்சி மேற்கோள்ளுங்கள். அவ்வாறு செய்பவர் (வெகுமதியில்) ஜிஹாதில் கடுமுயற்சி செய்பவருக்கு சமமானவர் ஆவார்.” (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் ஸஹ்ல் பின் ஸஆத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நானும், (உறவினராகவோ அல்லது உறவினர் அல்லாதவராகவோ இருக்கும்) அநாதையைப் பராமரிக்கக் கூடியவரும் சுவர்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்கு மிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள். (புகாரி, முவத்தா)

உண்மையில் (அதற்குரிய) நற்கூலி அசாதாரணமானதாகும். சுவர்கத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அண்டை வீட்டாராக இருப்பது என்பது ஒரு சிறிய வெகுமதி அல்ல. இரண்டு விரல்களையும் ஒன்றாக வைக்காமல் சிறிதளவு பிரிப்பதற்கான காரணம் என்னவென்றால், சுவர்க்கத்தில் அவரவரின் சொந்த தகுதிக்கு ஏற்ப வித்தியாசம் இருக்கும் என்பது மட்டுமே.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக நுஃமான் பின் பஷீர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “பரஸ்பர அன்பு மற்றும் உறவைப் பொறுத்தவரையில் நீங்கள் முஸ்லிம்களை ஒரே உடலாகக் காண்பீர்கள். ஒரு பகுதி வலிக்கும்போது, ​​முழு உடலும் பாதிக்கப்படும். (புகாரி, முஸ்லிம்)

அபூமூஸா(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் எவரேனும் ஒருவர் தேவையின் நிமித்தம் வந்தால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “தேவை உடையவர் சார்பில் உதவி செய்வதில் ஈடுபடுங்கள்/பரிந்துரை செய்யுங்கள்; அதனால் அவ்வாறு ஈடுபடுபவர்/ பரிந்துரை செய்பவருக்கும் நற்பலன் வழங்கப்படும்” என்று கூறுவார்கள். பிறகு, “அல்லாஹ் எதனை தீர்மானித்தாலும் அதனை அவனது தூதரின் நாவில் கட்டளையிடுகிறான்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

ஏழைகள் எதைப் பெற வேண்டும் என்று அல்லாஹ் (தபாரக) விரும்புகிறானோ, அதை அவர் (அந்த ஏழை) பெற்றுக் கொள்வார், (எந்த மாற்றமும் இன்றி அதற்கு) பரிந்துரை செய்பவரும் நற்கூலிகளின் தனது பங்கை மிகவும் எளிதாகப் பெற்றுக் கொள்ளாமல் விடப்படுவதில்லை. ஒருவர் சார்பாக பரிந்துரை செய்யுமாறு சஹாபாக்களை அறிவுறுத்திய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்ததைப் போல, (உதவி செய்யுமாறு) பரிந்துரை செய்யப்படுபவர் மற்றும் (தேவைக்காக உதவி) கோருபவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரையில் அதிருப்தி அடையாதபோது மட்டுமே மற்றொருவர் சார்பாக பரிந்து பேச வேண்டும். (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “உங்கள் சகோதரனுக்கு உதவி செய்யுங்கள்,அவர் அநீதி இழைப்பவராக இருந்தாலும் சரி அல்லது அநீதிக்கு உட்பட்டவராக இருந்தாலும் சரியே”. ஒரு மனிதர் வினவினார்: "அல்லாஹ்வின் தூதரே! அவர் அநீதிக்கு உட்படும்போது நான் அவருக்கு உதவி செய்வேன், ஆனால் அவர் அநீதி இழைப்பவராக இருந்தால் நான் அவருக்கு எவ்வாறு உதவ முடியும்?" (அதற்கு) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி இழைப்பதில் இருந்து உங்களால் அவரை தடுக்க முடியும். அதுவே அவருக்கு நீங்கள் செய்யும் உதவியாக இருக்கும். (புகாரி, முஸ்லிம்).

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். எனவே அவர் அவருக்கு அநீதி இழைக்கக் கூடாது, அவரது தேவைகளிலும், சிரமங்களிலும் அவரைக் கைவிட்டுவிடவும் கூடாது. எவர் தன் சகோதரனின் தேவைகளை நிறைவேற்றுகிறாரோ, அவருடைய தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான்; எவர் தம் சகோதரரின் துன்பங்களை நீக்கி விடுகிறாரோ அவருடைய துன்பங்களில் ஒரு துன்பத்தை அல்லாஹ் மறுமை நாளில் நீக்கி விடுவான். மேலும் எவர் ஒருவர், ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவருடைய தவறை அல்லாஹ் மறுமை நாளில் மறைத்துவிடுகிறான். (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு முஸ்லிமை இழிவுபடுத்துவது என்பது, ஒரு மனிதனிடம் தீமை உள்ளது என்பதற்கு போதுமானதாகும்." (முஸ்லிம்)

மற்ற முஸ்லீம்களை இழிவாகக் கருதும் இந்த ஒரு தீமையைத் தவிர வேறு எந்தத் தீமையும் ஒரு மனிதனிடம் இல்லாவிட்டாலும் கூட, அவன் தீமையிலும் சீரழிவிலும் மூழ்கியிருக்கிறான் (என்றே பொருள்), ஏனென்றால் அவனை முற்றிலும் அழித்துவிடுவதற்கு இந்த ஒரு தீமையே போதுமானது ஆகும்.

“ஒரு முஸ்லிமின் அனைத்து விஷயங்களும் புனிதமானவையாகும். அவைகள், மற்ற முஸ்லிம்களால் கண்ணியப்படுத்தப்பட வேண்டும். அவரது உயிர், உடைமை மற்றும் கௌரவமானது கண்ணியப் படுத்தப்பட வேண்டியவையாகும்” (முஸ்லிம்)

ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமை காயப்படுத்துவதும், அவரை துன்பப்படுத்துவதும் அல்லது சிரமப்படுத்துவதும் அனுமதிக்கப் பட்டதல்ல. மாறாக, அவரது உயிர், சொத்து, கண்ணியமானது மதிக்கப்பட வேண்டியவையாகும். அவருடைய தவறுகள் மூடி மறைக்கப்பட வேண்டும், அவர் அவதூறுக்கு ஆளாகி விடக் கூடாது. சுருக்கமாக கூறுவதென்றால், அவர் பாதுகாக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டும்.

"எவர் ஒருவரின் தேவையற்ற செயல்களில் இருந்து அவரது அண்டை வீட்டார் பாதுகாப்பாக இருக்கவில்லையோ அவர் சுவர்கத்தில் நுழைய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்." (முஸ்லிம்)

அண்டை வீட்டார், முஸ்லிமாக இருந்தாலும் சரி, முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் சரி, ஒருவரின் தேவையற்ற செயல்களின் விளைவாக அச்சம் கொண்ட நிலையில் இருக்கிறார். அத்தகைய ஒரு தீய மனிதர், நரகத்தில் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன் அவர் சுவர்கத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நம் இளையோர் மீது கருணை காட்டாதவர், நம் பெரியவர்களை மதிக்காமல் இருப்பவர், நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதவர் நம்மை சார்ந்தவரல்ல". (திர்மிதி)

இளையவர்களிடம் கருணை காட்டுவதும், மூத்தவர்களை மதிப்பதும், நல்லொழுக்கத்தின்பால் அழைத்து, தீமையைத் தடுப்பதும், முஃமின்களின் கடமைகளில் உள்ளதாகும். இருப்பினும், (நல்லொழுக்கத்தின்பால் அழைத்து, தீமையைத் தடுக்கின்ற) இந்த அறிவுரையின் கடமையை நிறைவேற்றும்போது, ​​​​ஒருவர் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும், மற்றவர்களை மதிக்க வேண்டும் மற்றும் மரியாதையுடன் செயல்பட வேண்டும். ஒருவர் கடுமையையும், 'உங்களை விட புனிதமானவனும் தூய்மையானவனும் எவருமில்லை' என்ற அணுகுமுறையையும் பின்பற்றக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் உக்பா பின் ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் ஒருவர் மற்றவரின் குறையைக் கவனித்து, அந்தக் குறையை (விளம்பரம் செய்யாமல்) மூடி மறைப்பாரோ, (அவரின் செயலானது) உயிருடன் புதைக்கப்படும் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றியதைப் போன்றதற்க்கு சமமாகும் (ஈடாகும்)." (அஹ்மத், திர்மிதி)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒவ்வொரு மனிதனும் அவனது (முஸ்லிம்) சகோதரனுக்கு ஒரு கண்ணாடி போன்றவனாவான்." (திர்மிதி

எனவே, ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமிடம் ஒரு குறையையோ அல்லது தீமையையோ கண்டால், அவர் தனது சகோதரரின் கண்ணாடியை போன்று செயல்பட வேண்டும், பார்வையாளருக்கு வெளிப்படுத்தும் போது,அவரது தோற்றத்தில் இருக்கும் தவறுகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தாத ஒரு கண்ணாடியைப் போன்று அவரை இழிவுபடுத்தாமல், தான் கண்டதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தாமல், அவரது தவறை அவரிடம் தெரிவிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "மக்களை அவர்களின் பதவிகளுக்கேற்ப பராமரித்திடுங்கள்". (அபு தாவூத்)

ஒவ்வொருவரும் அவரவர் அந்தஸ்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பது தீனின் போதனையாகும். ஒரு நபரின் பதவிக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். எல்லோரையும் ஒரே சாட்டையால் இயக்க முடியாது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு நம்பிக்கையாளர் என்பவர் அன்பின் களஞ்சியம் ஆவார். எவர் மீதும் அன்பு செலுத்தாத, எவரும் அவரை நேசிக்காமல் இருக்கும் மனிதனிடம் எந்த நன்மையும் இல்லை." (அஹ்மத், பைஹகி)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபு ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு நோய்வாய்ப்பட்ட (முஸ்லிம்) சகோதரனை ஒரு முஸ்லிம் சந்திக்கச் சென்றாலோ அல்லது ஒரு சகோதரனைச் (சாதாரனமாக) சந்திக்கச் சென்றாலோ, அல்லாஹ் கூறுகிறான்: “நீ தூய்மையானவன்; உமது நடை புனிதமானது; நீ சுவர்கத்தில் உமது தங்குமிடத்தை ஏற்பாடு செய்துள்ளீர்." (திர்மிதி)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபு அய்யூப் அன்சாரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுடன் தனது உறவை மூன்று நாட்களுக்கு மேல் துண்டித்துக் கொண்டு அவர்கள் இருவரும் சந்திக்கும் போது, ​​ஒருவர் தம் முகத்தை ஒரு பக்கமாகவும், மற்றவர் தம் முகத்தை மறுப்பக்கமாகவும் திருப்பிக் கொள்ளும் விதத்தில் இருப்பது ஹலாலானது அல்ல. இவர்கள் இருவரில் எவர் முதலில் சலாத்தை [அமைதியின் வணக்கத்துடன் வாழ்த்தை] கூறுகின்றார்களோ அவரே சிறந்தவராவார். (புகாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள உறவுகளைத் துண்டித்தல் என்பது பகைமை மற்றும் உலக காரணங்களால் உறவை முறித்துக் கொள்வதாகும். இந்த ஹதீஸ் பொது தனிமையை ஏற்றுக் கொண்டு மக்களிடமிருந்து விலகி இருப்பதை குறிக்கவில்லை.

ஒருவர் நினைவில் கொள்ள வேண்டிய தனிமை என்னவென்றால் தியானம்(திக்ர்) செய்து அல்லாஹ்வுடன் தொடர்பு வைத்துக் கொள்வது ஆகும், அத்தகைய தனிமை ரூஹ் (ஆன்மீக வளர்ச்சி) வளர்ச்சிக்கான ஒரு அருளாகும். மேலும் உண்மையில் இது தீனின் அதாவது இஸ்லாத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இருவருக்கிடையே அல்லது அவர்களுக்கிடையே [இரண்டு நபர்களுக்கு மேல்] தகராறு அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு வேண்டுமென்றே சமாதானம் செய்து கொள்வதில்லை என்பது நல்லதல்ல

மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபு ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: சந்தேகத்தில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். பொய்களில் மிக மோசமானது சந்தேகம் கொள்வது (அதாவது வெறுமனே சந்தேகத்தின் பேரில் மற்றவர்களை தவறாக நினைப்பது) ஆகும்.

மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாதீர்கள்.

ஏமாற்றுதல் (வாங்கக்கூடாது என்ற) நோக்கத்துடன் (விற்பனைக்கான எந்தவொரு பொருளையும்) அதிக விலைக்கு ஏலம் விடாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ள கூடாது அல்லது ஒருவருக்கொருவர் பகைமை எண்ணத்தை ஊக்குவிக்கக் கூடாது. (கிப்பத்)புறம் பேசாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! (அல்லாஹ்வின்) அனைத்து அடியார்களும் சகோதரர்களைப் போன்று வாழ வேண்டும்.(ஸஹீஹ் புகாரி, முஸ்லீம்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீது ஆறு கடமைகள் உள்ளன. (அதாவது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன)

"அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று வினவப்பட்டது. அண்ணலார் பதிலளித்தார்கள்: "நீர் உம் முஸ்லிம் சகோதரரைச் சந்திக்கும்போது அவருக்கு ஸலாம் உரைப்பதும், அவர் உம்மை விருந்துக்கு அழைக்கும்போது அவ்வழைப்பை ஏற்றுக் கொள்வதும், அவருக்கு நீர் நலம் நாடிட(அறிவுரை கூறிட) வேண்டும் என்று அவர் விரும்பும்போது அவருக்கு நீர் நலம் நாடுவதும் (அறிவுரை கூறுவதும்), அவருக்குத் தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே உரியன) என்று அவர் கூறினால் அதற்கு நீர் பதில் கூறுவதும், அவர் நோயுற்றுவிட்டால், அவரை நலம் விசாரிப்பதும், அவர் இறந்து விட்டால் அவருடைய "ஜனாஸா'வுடன் செல்வதும் தான் அவருக்கு உம்மீதுள்ள உரிமைகளாகும். (அதாவது அவருக்கு நீர் ஆற்றவேண்டிய கடமைகளாகும்)'' (முஸ்லிம்)

மேலும் முஸ்லீம்கள் மீது முஸ்லிம்களுக்கு சுமத்தப் பட்டுள்ள உரிமைகள் (வெறும்) ஆறுடன் நிறுத்தப் படவில்லை. எவ்வாறாயினும் இந்த குறிப்பிட்ட நிகழ்வின் போது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இந்த ஆறு விஷயத்தை பற்றி குறிப்பிட்டார்கள். இன்னும் மற்ற ஹதீஸ்களிலும் (நபிமொழிகளிலும்) திருமறை வசனங்களிலும் மேலும் அதிகமான உரிமைகளும் கடமைகளும் குறிப்பிடப் பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபுபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "எந்த ஒரு முஸ்லிமையும் துன்புறுத்தி அவரை ஏமாற்றும் மனிதன் சபிக்கப்பட்டவன் ஆவான். (திர்மிதி)

இந்த நபிமொழிகளில் குறிப்பிடப்பட்ட உரிமைகள் கடமைகள் மற்றும் மனப்பான்மை பொதுவாக முஸ்லீம் களின் பொது அமைப்பிற்கு தொடர்புடையதாகும். இத்தகைய உரிமைகள் ஏராளமாக பயன்படத் தக்கவை ஆகும். இந்த ‌பொதுவான உரிமைகளைத் தவிர குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் பயன்படத்தக்க சிறப்பு உரிமைகளும் உள்ளன. இன்றைய நாட்களில் இத்தகைய உரிமைகளை செலுத்துதல் மற்றும் கடமைகளை நிறைவேற்றுதல் தொடர்பாக ஒருவகையான பெரும் கவனக் குறைவும் அலட்சியமும் நிலவுகின்றன. எனவே இத்தகைய உரிமைகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதில் நம்மிடையே விடா முயற்சி மிகவும் இன்றியமையாததாகும்.

அல்லாஹ் (தபாரக) நாம் நமது கடமைகளை நம்மால் முடிந்தவரை சிறந்த முறையிலும் அவனக்கு விருப்பமான முறையிலும் ஆற்றுவதற்கு நமக்கு தஃவ்பீக்கை வழங்குவானாக. ஆமீன்.