ஜும்ஆ(குத்பா மற்றும் தொழுகை) யின் முக்கியத்துவம்''

05 ஆகஸ்ட் 2022~06 முஹர்ரம் 1444ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "ஜும்ஆ (குத்பா மற்றும் தொழுகை) யின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பில் ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள்.

இஸ்லாம் சமூக வாழ்க்கையை சிறப்பிக்கும் ஒரு மார்க்கமாகும். ஐந்து நேரக் கடமையானத் தொழுகைகளை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை ஒன்று கூடுவதற்காக அழைக்கப்படுகிறார்கள். இந்த சந்திப்புகள் அவர்கள் ஒருவரை யொருவர் நன்கு அறிந்து கொள்ளவும், ஒருவரையொருவர் அதிகமாக நேசிக்கவும், அவசியப்பட்டால் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதற்கும் அனுமதிக்கின்றன. உண்மையில, இந்த சமூக இயல்பை மிகவும் சிறப்பிக்கும் நாள் வெள்ளிக் கிழமையாகும். இது முஸ்லிம்களின் மிகவும் போற்றுதலுக்குரிய நாட்களில் ஒன்றாகும். இந்த நாளில் முஸ்லிம் நாடுகளில் வாராந்திர விடுமுறை விடப்படுகின்றன.

வெள்ளிக்கிழமை என்பது நமக்கு -மனிதகுலத்திற்கு முக்கியமான ஒரு முதன்மைச் செய்தியாகும். ஏனென்றால் இந்த நாளில் தான் தனித்துவம் மிக்கப் படைப்பாளனாகிய அல்லாஹ்(தபாரக) முதல் மனிதராகிய ஆதம்(அலை) அவர்களைப் படைத்தான். ஒரு ஹதீஸில், ஹஸ்ரத் அபு ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை[தீங்கு விளைவிக்கும் விஷயங்களை] செவ்வாய் கிழமையன்றும், ஒளியை புதன் கிழமையன்றும் படைத்தான். வியாழக் கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்" என்று கூறினார்கள். (முஸ்லிம்)

வெள்ளிக்கிழமையை வேறு எந்த நாளுடனும் ஒப்பிட முடியாத மற்ற நிகழ்வுகளை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அதில் ஐந்து சிறப்புகள் உள்ளன: அன்று தான், ஆதம்(அலை) அவர்களை அல்லாஹ் (தபாரக) படைத்தான். அதுமட்டுமல்ல, அல்லாஹ் (தபாரக) தன் அடியாருக்கு அநியாயமான ஒன்றைக் கேட்பதை தவிர உள்ள அனைத்தையும் வழங்குகின்ற ஒரு மணி நேரம் அதில் இருக்கிறது. இறுதி நேரம் அந்த நாளில்தான் தோன்றும் வானவர்கள், வானங்கள், பூமி, காற்றும் மலைகளும் அஞ்சக்கூடிய நாள் வெள்ளிக்கிழமையாகும். (இப்னு மாஜா)

இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் அரேபியர்களிடையே "அருபா" என்று முன்னர் அறியப்பட்டது, முஸ்லிம்களின் ஒன்றுகூடும் நாளை குறிப்பிடுகின்றது இஸ்லாத்தின் வருகையுடன் வெள்ளிக் கிழமை "யௌமுல் ஜுமுஆ" என மறுபெயரிடப்பட்டது.

இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு, பண்டைய வேதங்களின் மக்களுக்கு மத்தியில் வாரத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அதை இறை வணக்கத்திற்காக அர்ப்பணித்து அதை அந்த சமூகத்தின் சின்னமாக ஏற்றுக்கொள்வது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. யூதர்கள் "சபாத்தை" (சனிக்கிழமையைத்) தேர்ந்தெடுத்தனர். ஏனெனில் இந்த நாள் ஃபிர்அவ்னின் சர்வாதிகாரத்தில் இருந்து இஸ்ரவேல் சந்ததியினரின் விடுதலையைக் குறிக்கிறது. மறுபுறம், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்தனர்.

இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவர்களது இந்த நாளைப் பற்றி அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர், ஆனால் அல்லாஹ் நம்மை அதன் பக்கம் வழிகாட்டினான், நமக்கு அது வெள்ளிக்கிழமை ஆகும்; அடுத்த நாள் யூதர்களுக்கும், அதைத் தொடர்ந்த மற்ற நாள் கிறிஸ்தவர்களுக்கும் ஆகும். (முஸ்லிம்)

அல்லாஹ், அவனாலேயே வெள்ளிக் கிழமையைப் பரிந்துரைத்த பாக்கியம் இஸ்லாமியர்களுக்கு கிடைத்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் மறு உலகிலும் கூட அவர்களை (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை) நாம் முந்திச் செல்வோம் என்பதாகும். சுவர்க்கத்தில் வசிப்பவர்களுக்கு வெள்ளிக்கிழமை ஓர் ஈடு இணையற்ற நாளாக இருக்கும்.

அனஸ்(ரலி) அவர்களின் கூற்றுப்படி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சுவர்கத்தில் ஒரு சந்தை உள்ளது. அங்கே ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மக்கள் வருவார்கள். வடக்கு காற்று வீசி அவர்களின் முகம் மற்றும் ஆடைகளில் நறுமணத்தைப் பொழியும், அதன் விளைவாக, அவர்களின் அழகையும் கவர்ச்சியையும் அது அதிகப்படுத்தும். பின்னர் தங்களின் அழகிலும், கவர்ச்சியிலும் அதிகரித்தத் தங்களின் மனைவிகளிடம் அவர்கள் திரும்புவார்கள், மேலும் அவர்களது குடும்பத்தினர் அவர்களிடம் கூறுவார்கள்: 'எங்களை விட்டுப் பிரிந்ததில் இருந்து நீங்கள் அழகிலும் கவர்ச்சியிலும் பெருகியுள்ளீர்கள் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறோம்!.’ அப்போது அவர்கள் பதிலளிப்பார்கள்: ‘நாங்கள் உங்களை விட்டுப் பிரிந்ததிலிருந்து நீங்கள் அழகிலும் கவர்ச்சியிலும் அதிகரித்துள்ளீர்கள்!." (முஸ்லிம்)

“يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக (பள்ளிவாசலுக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளிவாசலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (அல்- ஜுமுஆ 10-11).

இந்த குறிப்பிட்ட வசனங்கள் உள்ள இந்த அத்தியாயம், அதாவது சூரா அல்-ஜுமுஆ, ஹிஜ்ரிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இறக்கப்பட்டது. அது அனைத்து முஸ்லீம்- நம்பிக்கை கொண்டவர்களுக்கும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கும், வெள்ளிக்கிழமைத் தொழுகையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. மேலும் வெள்ளிக்கிழமை பிரசங்கங்கள் மற்றும் தொழுகைகளில் கலந்துக் கொள்வதைக் கட்டாய கடமையாக்கிக் கொண்டு [முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய] - அவர்கள் அனைவருக்கும் கட்டளையிடுகிறது. உண்மையில், மிகவும் முக்கியமான இந்த விஷயத்தைப் பற்றி கடந்த காலத்தில் நான் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன்.

கூடுதலாக, அனைத்து பரிவர்த்தனை- வியாபாரங்களின் தடை மற்றும் அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மீதுள்ள ஆர்வத்தைப் பற்றியும் வலியுறுத்துகிறது. நம்பிக்கை கொண்டவர் வெள்ளிக்கிழமை களில் முன்னதாக பள்ளிவாசலுக்குச் செல்வதற்கு கடும்முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் ஜும்ஆத் தொழுகைக்காக முன்பாகவே (அங்கே) இருப்பது ஒரு சிறந்த நற்பண்பு ஆகும்.

ஈமான் கொண்டவர், பள்ளிவாசலுக்கு செல்லும் வழியில் இருந்து, தொழுகை நேரம் வரை அவர் வெள்ளிக்கிழமையில் இறைவனின் அழைப்புக்கு பதிலளிக்கிறார் என்பதையும், அதனால் அவனுடைய மன்னிப்பையும் திருப்தியையும் விடாமுயற்சியுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக எவர் முதல் மணி நேரத்தில் செல்வாரோ அவர் ஒட்டகத்தை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்துவது போலவும், எவர் இரண்டாவது மணி நேரத்தில் செல்வாரோ அவர் பசுவையும், மூன்றாவது நேரத்தில் செல்பவர் ஆட்டுக்கடாவையும், நான்காவது மணி நேரத்தில் செல்பவர் ஒரு கோழியையும் ஐந்தாம் மணி நேரத்தில் செல்பவர் ஒரு முட்டையையும் காணிக்கை செலுத்துவதற்கு ஒப்பாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் அதன் மதிப்பைக் குறித்து அறிந்திருந்தால் அந்த மூன்று விஷயங்களுக்காக ஒட்டகத்தைப் போல ஓடுவார்கள் (அவை): தொழுகைக்கான அழைப்பு, முன் வரிசை மற்றும் வெள்ளிக்கிழமைத் தொழுகைக்காக அதிகாலையில் செல்வது ஆகியவை.”

[இஸ்லாத்தின்] முதல் நூற்றாண்டில், விடியற்காலையில் மக்கள் நிறைந்துள்ள பாதைகளை உங்களால் காண முடியும், அவர்கள் பெருநாள் (ஈத்) நாட்களில், பள்ளிவாசலுக்குச் செல்லும் வழியில் ஒருவரையொருவர் பின்தள்ளிக் கொண்டு சென்றனர். பிறகு, இந்த நிகழ்வு மறைந்துப் போனது. ஒருவர் (இவ்வாறு) கூறலாம்:

'வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அதிகாலையில் செல்வதை நிறுத்துவதே இஸ்லாத்தில் ஏற்பட்ட முதல் பித்-அத் நவீனமாக இருந்தது.'

யூதர்களும் கிறிஸ்தவர்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யூத கோவில்களுக்கும் தேவாலயத்திற்கும் அதிகாலையில் விரைந்து செல்கின்றனர் என்ற உண்மை குறித்து முஸ்லிம்கள் எவ்வாறு வெட்கப்படாமல் இருக்கின்றனர்?மேலும் இவ்வுலகின் பொருட்களைத் தேடி அதிகாலையில் சந்தைக்குச் சென்று விற்கவும், வாங்கவும் லாபம் ஈட்டவும் செய்பவர்களை விட சுவர்கத்தைத் தேடக் கூடியவர்கள் எவ்வாறு காலையில் எழாமல் இருப்பார்கள்?

மிகவும் கண்டிக்கப்படும் ஒரு ஹதீஸில், நபி(ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுகையில் இருந்து மிகவும் சோம்பேறித்தனம் மற்றும் அலட்சியம் காரணமாக விலகி இருக்கும் அனைவரையும் எச்சரித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அபு அல்-ஜாத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு மனிதன் அலட்சியத்தால் மூன்று ஜும்ஆக்களை (தொடர்ச்சியாக) மேற்கொள்ளாவிட்டால், அல்லாஹ் அவருடைய இதயத்தை முத்திரையிடுகிறான், மேலும் அவரால் நற்செயல்களைச் செய்ய முடியாமல் ஆகிவிடும்." (அபு தாவூத்)

இந்த நாளில் அல்லாஹ்வை அதிகம் நினைவுகூரவும், நமது நேசத்திற்குரிய நபி(ஸல்) அவர்களின் மீது அதிகமதிகம் தரூத் ஷரீஃப்- பை ஓதிடவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ஸ் இப்னு அவ்ஸ் அறிவிக்கின்றார்கள்: “உங்களது நாட்களில் மிகவும் சிறப்பானது வெள்ளிக்கிழமை ஆகும்; அதனால் அந்த நாளில் என்மீது அதிகம் (ஸலவாத்) அருள்களைப் பொழியுமாறு வேண்டிக்கொள்ளுங்கள், ஏனென்றால் உங்களது (அந்த ஸலவாத்) அருள்களைப் பொழியுமாறு கூறும் வேண்டுதல் எனக்கு சமர்ப்பிக்கப்படும். அவர்கள் (நபித்தோழர்கள்) கேட்டனர்: "அல்லாஹ்வின் தூதரே, உங்கள் உடல் சிதைந்துவிட்ட நிலையில், எங்களது ஸலவாத் (தரூத்) உங்களுக்கு எவ்வாறு சமர்ப்பிக்க முடியும்?" இதற்க்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "நபிமார்களின் உடல்களை உண்பதிலிருந்தும் அல்லாஹ் பூமியைத் தடைசெய்து விட்டான்". (அபு தாவூத்)

எனவே, நீங்கள் அனைவரும் வெள்ளிக் கிழமை தொழுகைக்கான அழைப்பிற்கு பதிலளியுங்கள். ஜும்ஆவை (அதாவுது வெள்ளிக் கிழமையை) உங்களது ஒழுக்க நெறிமுறைகளில் உறுதியாக நிலைநிறுத்துகின்ற ஒரு மார்க்க நாளாக மாற்ற முயற்சி செய்யுங்கள். நீங்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மஸ்ஜித் -துக்குச் செல்ல, நீங்கள் உங்களது வேலையிலிருந்தவாறே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு மஸ்ஜித் -துக்குத் தயாராகும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் குழந்தைகளை அழிவிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மேலும், அல்லாஹ் (தபாரக்) கூறுகிறான்:

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ ‎﴿٢﴾‏ وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

''அவனே எழுதப்படிக்கத் தெரியாத மக்களுக்கு - அவர்கள் இதற்கு முன்னர் தெளிவான வழிகேட்டில் இருந்த போதிலும் - அவனது கட்டளைகளைப் படித்துக் காட்டி, அவர்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களுக்கு வேதத்தையும், நுட்பமான அறிவையும் கற்றுக் கொடுக்கும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே அனுப்பினான். மேலும் இதுவரை அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்). அவன் வல்லமை மிக்கவனும், நுண்ணறிவுள்ளவனு மாவான்.'' (அல்-ஜுமுஆ 62:3-4)

இவ்வசனம் அருளப்பட்டதும், உம்மியீன்களுக்கு (அரேபியர்களுக்கு) மத்தியில் ஒரு தீர்க்கதரிசி வந்ததைப் போல, ஆக்கிரீன்களிடையே (அதாவது, மற்றவர்களிடையே - இறுதி நாட்களில்) நபி வரப் போகிறார் என்ற அறிவிப்பைக் கேட்டு ஹஸ்ரத் அபூஹுரைரா(ரலி) அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். (அபூஹுரைரா (ரலி)) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்: “மன் ஹும் யா ரஸுல்லல்லாஹ்?” (அல்லாஹ்வின் தூதரே, அவர்கள் யார்?), நான் (அபூஹுரைரா(ரலி) அவர்கள்) மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்கும் வரை, நபி(ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. அப்போது பாரசீகரான ஸல்மான் ஃபார்ஸி(ரலி) அவர்கள் எங்களுடன் இருந்தார். எனவே, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சல்மான் ஃபார்ஸி(ரலி) [பாரசீக ஈரானியரான] அவர்களின் மீது தனது கையை வைத்து, இவ்வாறு கூறினார்கள்:

“ஈமான் சுரையா நட்சத்திரம் வரை சென்றாலும், ஒருவர் அல்லது பலர் (ஒருவரையா அல்லது பலரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறினார்களா அபு ஹுரைரா(ரலி) அவர்கள் மறந்து விட்டார்கள்) அவரது குடும்பத்தினர் (அதாவது, பாரசீக வம்சாவளியைச் சேர்ந்தவர்) அதை மீண்டும் கொண்டு வருவார். (புகாரி)

இந்த ஹதீஸிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றது :

1) ஒரு நாள் வரும், அந்த நாளில் முஸ்லீம்களின் இதயங்களில் இருந்து ஈமான் பிரிந்து சென்றுவிடும், அதாவது அவர்களின் மார்க்கத்தின் நிலை மிகவும் பலவீனமாக மாறிவிடும்.

2) மார்க்க நம்பிக்கை வலுவிழந்துப் போகும் இந்தக் காலத்தில் ஃபாரசீக வம்சத்திலிருந்து ஒருவர் தோன்றுவார். அவர் இறைவனிடமிருந்து வந்த ஒரு தூதராகவும், பிரதிநிதியாகவும் இருப்பார். அவர் முஸ்லிம்களின் இதயங்களில் புதிய நம்பிக்கையை ஊட்டுவார்.

இவ்வாறு, சூரா அல்-ஜுமுஆவின் வசனங்கள் 3-4 மூலம் வலுப்படுத்தப்பட்ட இந்த ஹதீஸ், பிற்காலத்தில் மேன்மை மிக்க ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களது ஒரு சிறந்த பிரதிநிதியின் மூலமாக (மீண்டும்) நடைபெறும் அதே ஆன்மீக நிகழ்வைக் குறிக்கின்றது. அப்படிப்பட்ட ஈமானை உயிர்ப்பிப்பவர் (சீர்திருத்தவாதி), மஸீஹ், ஃகலீபத்துல்லாஹ்வாகிய அவர் தவ்ஹீதை( அல்லாஹ்வின் ஏகத்துவத்தை) நிலைநிறுத்தவும், இஸ்லாத்தின் ஸ்தாபகர், திருத்தூதர் (எம்பெருமானார் (ஸல்)) அவர்களின் மாண்பை நிலைநாட்டிடவும் வருகைத்தருவார். திருக்குர்ஆனில் அல்லாஹ் அளித்துள்ள வாக்குறுதியின் படியும், பல்வேறு வேதங்களில் அவரைப் பற்றியுள்ள முன்னறிவிப்பின் படியும், இறைத்தூதர் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் இத்தகைய வெளிப்பாடுகள் தோன்றியிருந்தது, (தற்போதும் உங்களுக்கு மத்தியில்)தோன்றி உள்ளது, (பிற்காலத்திலும்) இஸ்லாத்தில் தோன்ற உள்ளது. மேலும், (அவ்வாறு) கலீஃபத்துல்லாஹ் மற்றும் இஸ்லாத்தின் நம்பிக்கையை உயிர்ப்பிப்பவர் தோன்றும்போது, ​​யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் போன்று நடந்து கொள்வதற்கெதிராக முஸ்லிம்களுக்கு சூரா ஜுமுஆ கடுமையான எச்சரிக்கையையும் வழங்குகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஆஹிரீன்கள் யார்?" என்பதை வெளிப் படுத்தியது சுவாரஸ்யமானதாகும், அதாவது, இறுதிக் காலத்தில் உம்மிய் யீன்களை (எழுத்தறிவற்ற அரேபியர்களைப்) போலவே நம்பிக்கையற்றவர்களாக மாறிவிடுவார்கள், மேலும் ரசூலன் (இறைத்தூதர்) ஆக யார் வருவார்கள் என்பதையும் அன்னார் வெளிப் படுத்தினார்கள். அவர்கள் அதாவது இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: அன்னாருடைய அல்ஹே பைத்தின் [அதாவது (அவ்வாறு வருகைத் தருபவர்) அன்னாரது வீட்டின்/குடும்பத்தின்)] உறுப்பினராக (அதாவது அன்னாரை முழுமையாகப்) பின்பற்றிய வராக இருப்பார்.

என் சகோதர சகோதரிகளே!, இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அவனே இதற்கு வாக்குறுதியளித்துள்ளான். அவன் எப்போதும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறான். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.