உம்மத்தின் நோய்கள் (பகுதி 3)

17 ஜூன் 2022 | 16 துல் கஃதா 1443 ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "உம்மத்தின் நோய்கள் (பகுதி 3)" என்ற தலைப்பில் தனது ஜும்மா பேருரையை நிகழ்த்தினார்கள்.

காரணங்கள்

முதல் காரணம்:

பொதுவாக தப்லீக் பணி என்பது உலமாக்களுக்கான பொறுப்பு என்று நாம் நினைக்கிறோம். ஆனால், குர்ஆனில் உள்ள கட்டளைகள் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொருந்தும் என்பதைத் தெளிவுப் படுத்துகிறது. இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வது (அதாவது, தாவா/தப்லீக் செய்வது) ஒவ்வொரு முஸ்லிமின் (மீதும்) தலையாய கடமையாகும் என்பதை ஸஹாபா (ரலி) மற்றும் அதற்குப் பின் வந்த அனைத்து உண்மையான முஸ்லிம்களும் (அதாவது, தாபியீன்களும்) செய்த செயல்களும் கடின உழைப்பும் தெளிவாக நிரூபிக்கின்றன.

இந்த தப்லீக் பணியை உலமா பெருமக்ககளின் தோள்களில் மட்டும் சுமத்திவிட்டு, அது நமது பொறுப்பல்ல என்று நினைப்பது நமது பெரும் பலவீனமாகும். உண்மையை நமக்கு முன் கொண்டுவந்து, நமக்கு நேர்வழியை எடுத்துக் காட்டுவதே உலமாக்களின் பொறுப்பாகும். மனிதகுலம் அனைத்திற்கும் நல்லதைப் பரப்புவதும், அவர்களை நேர்வழியில் முன்னேறச் செய்வதும் அனைத்து முஸ்லிம்களின் (மீதும்) கடமையாகும். பின்வரும் ஹதீஸ் இதை நமக்கு தெளிவாக விளக்குகிறது,

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே!. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள்/அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே!. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்!" (முஸ்லிம்)

இதை போல் மற்றொரு ஹதீஸில் வருகிறது, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் “மார்க்கம் (தீன்) என்பது நஸீஹத்(நல்லுபதேசம், நேர்மை/உண்மை) ஆகும் என்று கூறினார்கள். நாங்கள், யாருக்கு (அதனை நாடுவது)? “என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும் (அதாவது அனைத்து முஸ்லீம்களுக்கும்) “என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம்)

மிகக் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காகக் கூட, இந்த பணியை உலமா பெருமக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலை மற்றும் தற்போதைய நெருக்கடியான நிலைமை இந்த கலிமாவைப் பரப்புவதற்கும், இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட நம்மை வற்புறுத்துகிறது.

இரண்டாவது காரணம்:

ஒருவர் தனது ஈமான், மற்றும் அமலில் உறுதியாகவும் நிலையாகவும் இருந்தால், மற்றவர்களுடையக் கட்டுப்படாமையும், நிராகரிப்பும், அவரை பாதிக்காது என்று பொதுவாக நாம் எண்ணுகிறோம். இந்த திருக்குரான் வசனத்தின்படி:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنفُسَكُمْ ۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ

"நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் உங்களது சொந்த ஆன்மாவிற்கு பொறுப்பாவீர்கள்! வேறு எவரேனும் வழிதவறிச் சென்றால், நீங்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றும் வரையில், அது உங்களுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது" (அல் - மாயிதா 5: 106)

உண்மையில், இதன் அர்த்தமும், இந்த வசனத்தின் அர்த்தமும் அதனுடன் இணைக்கப்பட்டதாகத் தோன்றவில்லை, ஏனெனில் இவ்விஷயத்தில், இது அல்லாஹ்(தபாரக்) வின் ஞானத்திற்கும் திட்டத்திற்கும் முரணாகவும், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் போதனைக்கு - அதாவது இஸ்லாத்தின் ஷரீஅத்திற்கு முரணாகவும் தென்படலாம். இங்கு நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது மற்றும் புரிந்து கொள்ளப்பட்டது என்னவென்றால், முஸ்லிம்களின் முன்னேற்றமும் வெற்றியும் நாம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும், ஒரே சமூகமாக வாழ வேண்டும் என்பதில்தான் உள்ளது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படை, அதன் இன்றியமையாத கருத்தும் ஆகும். முஸ்லிம் சமூகத்தை பல அங்கத்தவர்களைக் கொண்ட ஒரே அமைப்பாகவே நாம் கருத வேண்டும். உடலின் ஒரு பகுதி, ஓர் உறுப்பு காயம் அடைந்து விட்டால் , முழு உடலும் அந்த வலியுடன், உணர்வுடன பாதிப்படைகின்றது. மனிதன், அதாவது மனித இனம் எந்த எல்லைக்கும் முன்னேற முடியும், மற்றும் அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உயர்ந்த மரியாதை மற்றும் புகழைப் பெற முடியும், ஆனால் எப்போதும் வழிதவறிச் சென்று பாவங்களில் விழும் ஒரு கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், இறையச்சமுள்ள முஸ்லிம்கள் உறுதியுடன் இருந்து, நேர்வழியில் தொடர்ந்து செல்லும் வரை, மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்கள் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்பதற்கு இந்த வசனம் உறுதியளிக்கிறது .

இன்னொரு விஷயத்தையும் வெளிக்கொண்டு வரவேண்டி உள்ளது. இஸ்லாமிய சட்டத்தின் அனைத்து விதிமுறைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்போது தான் முழு வெற்றியும், மற்றும் முழுமையான நிறைவும் வரும். இதில் அல்லாஹ்வின் அனைத்து கட்டளைகளும் அடங்கும். ஹஸ்ரத் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் வார்த்தைகள் இந்த விளக்கத்தை உறுதிப்படுத்துகின்றன. அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் உங்களது சொந்த ஆன்மாவிற்கு பொறுப்பாவீர்கள்! வேறு எவரேனும் வழிதவறிச் சென்றால், நீங்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றும் வரையில், அது உங்களுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது" (அல் - மாயிதா 5: 106)

நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன் : 'மக்கள் தவறு செய்பவரைப் பார்க்கின்ற போது, அவர்கள் அவரை (அவ்வாறு தவறு செய்வதிலிருந்தும்) தடுக்கவில்லை என்றால், விரைவில் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு தண்டனை கிடைக்கும். (பிடித்து விடுவான்)" (திர்மிதி)

நிச்சயமாக அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ

"சுமப்பவன் எவனும் மற்றவனின் சுமையை சுமக்கமாட்டான்." (ஃபாத்திர் 35:19)

மூன்றாவது காரணம்

புகழ்பெற்ற மனிதர்கள் மற்றும் சாதாரண முஸ்லிம்கள், படித்தவர்கள் மற்றும் படிக்கத் தெரியாதவர்கள் அனைவரும் சேர்ந்து சமூகத்தை சீர்திருத்துவதில் மிகவும் அலட்சியமாகவோ அல்லது ஆர்வமற்றவர்களாகவோ மாறிவிட்டனர் என்றால் எல்லோரும் தங்கள் கேடு காலத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது, அது கடினமாக இருக்கும் என்று நம்புகிறார்கள், தற்போது முஸ்லிம்கள் முன்னேறிச் சென்று, தங்களது முந்தைய கண்ணியத்தை மீண்டும் பெறுவது என்பது சாத்தியமற்றது என்று கூட கூறலாம். முஸ்லீம்களின் நிலையை மேம்படுத்திடவும் மாற்றிடவும் ஒரு திட்டம் அவர்களிடம் முன்வைக்கப்படும் போதெல்லாம், அதே எதிர்வினையையே நாம் காண்கிறோம்: முஸ்லிம்கள் தங்கள் கைகளில் நாடுகளோ, ஆட்சி செய்யும் அதிகாரமோ, செல்வமோ, நிதியோ, பொருளாதாரமோ, இராணுவம் அல்லது போருக்கான உபகரணங்களோ, அல்லது தேவையான செல்வாக்கோ இல்லாதபோது அவர்கள் எவ்வாறு முன்னேறுவார்கள்?. மேலதிகமாக, அவர்களுக்கு உடல் வலிமை, அவர்களுக்கிடையே புரிந்துணர்தல் மற்றும் அவர்களது செயலில் எந்த ஒற்றுமையும் இல்லை!

ஹிஜ்ரத்தில் இருந்து பதினான்கு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. [தற்போது நாம் ஹிஜ்ரி பதினைந்தாம் நூற்றாண்டில் இருக்கிறோம்], அதனால் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் போதனையிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்கிறார்கள், எனவே, அவர்களும் (அதாவுது, முஸ்லிம்களும்) இஸ்லாமும் வீழ்ச்சியடைவதைத் தவிர்க்க முடியாது என்று மார்க்கவாதிகள் கூட ஏற்கனவே தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது. தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களை மாற்ற முயற்சிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். நாம் முன்னேற்றம் அடைந்துள்ள கால கட்டத்தில், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் போதனையின் ஒளியின் தாக்கம் மேலும் மேலும் குறைந்து வருகிறது என்பது உண்மைதான், ஆனால் அந்த ஒளியை மீண்டும் பிரகாசிக்க முயற்சி செய்யக்கூடாது என்று பொருளல்ல. மாறாக, அல்லாஹ்வின் (அதாவது ஷரீஅத்) கட்டளைகளை நாம் நிலைநிறுத்தி, அதே சமயம் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்த வாழ்க்கை முறையை நமது முழு ஆற்றலுடனும், தைரியத்துடனும் நிலைநாட்டுவோமாக! அப்போதுதான் அல்லாஹ்வின் உதவி அவனுடைய சர்வ வல்லமையால் நமது முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக வரும், இன்ஷா அல்லாஹ்!

இன்றைய முஸ்லீம்களைப் போலவே முந்தைய முஸ்லிம்களும் நினைத்திருந்தால், இஸ்லாத்தின் எந்தத் தடயமும் உலகின் எந்த இடத்திலும் இருந்திருக்காது, ஏனென்றால் ஷரீஅத்தின் போதனைகளும் விதிமுறைகளும் நம்மைச வந்தடைவதற்கு எந்த வழியும் (எந்த அமைப்பும்) இருந்திருக்காது. எனவே, தீன்- மார்க்கத்தின் மீதான நமது எதிர்மறையான அணுகுமுறையை நாம் மாற்றிக்கொள்ளாவிட்டால், இஸ்லாம் மரணமடைவது என்பது வெகு தொலைவில் இல்லை. நம்மையும் எதிர்கால சந்ததியினரையும் காப்பாற்றிக் கொள்ள உறுதியான மற்றும் நேர்மறையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். காலம் விரைவாக கடந்து செல்கிறது, இஸ்லாம் மிக விரைவாக சீர்கெட்டு வருகின்றது. (இந்த இக்கட்டான) நிலைமையைத் தடுக்க உறுதியான, விரைவான மற்றும் உறுதியான முயற்சியை மேற்கொண்டு நிலைமை மேலும் மோசமடைவதையும், முஸ்லிம்களின் சீரழிந்துப் போவதைத் தடுக்கவும் (தற்போதைய) சூழ்நிலை நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறது. முழுமையாக முஸ்லிம்களின் உறுதிப்பாடு மற்றும் கூட்டு முயற்சியிலும் தான் உண்மையான இஸ்லாத்தின் இருப்பு சார்ந்துள்ளது என்பது ஒரு நிறுவப்பட்ட கோட்பாடகும். இந்த விசயத்தில் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்களிடம் அதிகமான குறைபாடுகள் உள்ளன என்பதுத் தெரிகின்றது. ஆயினும்கூட, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் பல வழிகாட்டுதல்கள் உள்ளன என்பதையும், அது முஸ்லீம்களை அல்லாஹ்வின் பாதையில் நிலைத்திருக்கவும், விடாமுயற்சியை மேற்கொள்ளவும் அழைக்கிறது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

உதாரணமாக, தனது வாழ்நாள் முழுவதும் இபாதத் [வணக்கங்கள்/ தொழுகைகளை], இரவும் பகலும் செய்யும் மிகவும் இறையச்சமுடைய ஒருவரைப் பற்றிய ஒரு ஹதீஸ் உள்ளது, ஆனால் அத்தகைய ஒருவரால் முயற்சிகளை மேற்கொள்பவர், தனது இன்பங்களையும் வசதிகளையும் தியாகம் செய்து மக்களை வழிநடத்தி இஸ்லாத்தின் நேர்வழியில் முன்னேற உதவுபவரின் நிலையை அடைய முடியாது. இந்த குறிப்பிட்ட விஷயத்தில் குர்ஆன்-ஏ கரீமில் பல கட்டளைகளும் , வழிகாட்டுதல்களும் உள்ளன. அல்லாஹ்வின் பாதையில் எவர் முயற்சி (போர்) செய்கிறாரோ அவர், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அவர் உயர்ந்தவராக இருக்கிறார் மற்றும் உயர்ந்த பதவியை வகிக்கிறார் என்று

அவரை பற்றி தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது:

لَّا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ ۚ فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً ۚ وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا ‎﴿٩٥﴾‏ دَرَجَاتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَرَحْمَةً ۚ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا ‎﴿٩٦﴾

“ஈமான் கொண்டவர்களில் எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாகமாட்டர்கள்! தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்;. எனினும், அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான். ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான். தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்;. ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அன்-நிஸா 4: 96-97)

இந்த வசனங்கள் குஃப்பார்களுக்கு (காஃபிர்களுக்கு) எதிரான ஜிஹாத் (புனிதப் போர்) மற்றும் முஷ்ரிக்கீன் (பலதெய்வவாதிகளுக்கிடையில்) இஸ்லாத்தின் போதனையை நிலைநாட்டவும், நயவஞ்சககத்தையும், ஷிர்க்கையும் (அதாவது அல்லாஹ்வின் தனித்துவமான வழிபாட்டில் மற்ற பங்காளிகளை இணை வைப்பதையும்) எதிர்த்துப்போராடவும், துரதிர்ஷ்டவசமாக இந்த உன்னதப் பணியைச் செய்ய நமக்கு வாய்ப்பு இல்லாமல் போனாலும் கூட, நம்முடைய பணி என்பது, நாம் உண்மையை பிரச்சாரம் செய்யக்கூடிய எந்த ஒரு சிறிய சந்தர்ப்பத்தையும் நாம் நம்மை விட்டும் (வெறுமனே) கடந்து செல்லுமாறு விட்டுவிடக் கூடாது. அப்போதுதான் ஒரு நாள் நமது சிறிய முயற்சிகளும் உறுதியும் நம்மை மகத்தான மற்றும் உன்னதமான பணிகளில் ஈடுபடுத்துவதற்கு சில வலிமையையும் வேகத்தையும் பெற முடியும் என்று நம்பலாம்.

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ ‎﴿٦٩﴾‏

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (அல் அன்கபூத் 29:70).

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வாழ்க்கை முறையைப் பாதுகாப்பேன் என்று அல்லாஹ் (தபாரக்) வாக்குறுதி அளித்துள்ளான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மனிதனின் (அதாவது நம்பிக்கை கொண்ட முஸ்லிமின்) முயற்சிகளும் உறுதியும் மட்டுமே ஒரே வழிமுறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமே இந்த வாழ்க்கை முறை முன்னேறவும் உயர்வடையவும் முடியும்.

ஸஹாபாக்கள் (ரலி) இந்த நோக்கத்திற்காகவே ஒவ்வொரு தியாகத்தையும் செய்திருக்கிறார்கள்; அவர்கள் வெற்றி பெற்றார்கள், மேலும் அவர்கள் பெரிய, பெரிய வெகுமதிகளையும் பெற்றார்கள். அல்லாஹ்விடமிருந்து உதவியையும் பாதுகாப்பையும் பெறும் கண்ணியத்தைப் பெற்றார்கள். அவர்கள் மீது அபிமானம் கொண்ட (போற்றுகின்ற) அனைத்து முஸ்லிம்களும் அவர்களைப் பின்பற்ற வேண்டும். மேலும் "கலிமா" மற்றும் அல்லாஹ் (தபாரக்) வின் செய்தியை பரப்புவதற்காக தயாராக வேண்டும். இந்த வழிமுறையின் மூலம் மட்டுமே அல்லாஹ் (தபாரக) வின் உதவியும் பாதுகாப்பும் நம்மை வந்தடையும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ ‎﴿٧﴾‏

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு (அவனது மார்க்கத்திற்கு) உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (முஹம்மத் 47:8).

நான்காவது காரணம்

இஸ்லாம் போதிக்கின்ற தனித்தன்மைகளும், நற்பண்புகளும் நம்மிடம் இல்லாததால், இந்த குணங்களை மற்றவர்களிடம் பரப்ப நம்மால் முடிவதில்லை என்று நம்மில் பலரும் நினைத்துக் கொள்கின்றோம். இது முற்றிலும் தவறாகும். நம்மீது ஒரு கடமை இருக்கும்போது, ​​குறிப்பாக அது அல்லாஹ் (தபாரக்)விடமிருந்து வரும் ஒரு கட்டளையாக இருக்கும்போது, ​​அதற்கு கீழ்ப்படியாமல் இருப்பதற்கு எந்த காரணத்தையும் தேடுவதற்கு நமக்கு உரிமை இல்லை. இந்த பணியை நாம் உடனேத் தொடங்க வேண்டும், மேலும் அல்லாஹ்(தபாரக்)வின் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும். அதனால், நமது முயற்சிகள் அதிக வலிமையையும், பெரும் உறுதிப்பாட்டையும், [இந்த வழியில்/ வேட்கையில்/பணியில்] தொடர்வதற்கான நம்பிக்கையையும் பெற்றுத் தரும்.இன்ஷா-அல்லாஹ்.

இந்த வழியில்,​​ தேவைப்படும் வரிசைப் பிரகாரம் (கோட்பாட்டின்படி), நாம் தொடர்ந்து ஒரு நிலையான முயற்சியை மேற்கொள்ளும்போது,அல்லாஹ் (தபாரக்) வுக்கு "பிடித்தவர்கள்" ஆக மாறிவிடும் கண்ணியம் நமக்கு கிடைக்கும். அதாவது ஒரு நபர் இறைவனுக்காக (இறைவனின் தீனுக்காக) முயற்சியை மேற்கொண்டால், அந்த நபர் திறமையற்றவராக அல்லது இந்த பணியைச் செய்வதற்க்கான [தேர்ச்சிபெற்ற] தகுந்த நிலையில் இல்லை என்ற காரணத்திற்காக அல்லாஹ் (தபாரக) அந்த நபருக்கு தனது அனுகூலங்களையும் அருளையும் வழங்க மாட்டான், என்பது அல்லாஹ்வின் கோட்பாடு மற்றும் 'சுன்னத்திற்க்கு' [நடைமுறைக்கு] எதிரானதாகும். இந்தக் கருத்து இந்த ஹதீஸில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததாவது: “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம்: “அல்லாஹ்வின் தூதரே!, இந்த நற்செயல்களை நாங்களே நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் போது, நன்மையை ஏவாமல் இருப்பது பொருத்தமானதா? இந்த தீமையான செயல்களில் இருந்து எங்களை நாங்களே தவிர்த்துக் கொள்ளாமல் இருக்கும் போது, தீமையை நாங்கள் தடை செய்வது பொருத்தமானதா?"

(அதற்கு)அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதில்)கூறினார்கள்: “இல்லை! இந்த அனைத்து நல்ல செயல்களை நீங்கள் செய்யவில்லை என்றாலும் கூட மற்றவர்களை நற்செயல்கள் செய்வதற்காக ஏவுங்கள்! இந்த அனைத்து தீமையிலிருந்தும் (கெட்ட செயல்களில் இருந்தும்) நீங்கள் விலகவில்லை என்றாலும் கூட தீய செயல்களை தடை செய்யுங்கள் (தப்ரானி)

ஐந்தாவது காரணம்

சந்தேகத்திற்கிடமின்றி, இன்று இருக்கக் கூடிய இந்த அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் முற்றிலும் அவசியமானவையாகும், மேலும் அவர்கள் மீது மிகுந்த மரியாதையை நாம் கொண்டுள்ளோம், மேலும் அவர்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் இன்று நாம் காணக் கூடிய இந்த சிறிய இஸ்லாம் நிலைத்திருக்கின்றது [அதாவது இன்னும் உள்ளது] என்பதற்காக அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க ஒரு சிறிதளவு [ஒரு பகுதி அல்லது ஒரு பிரிவு] கூட அவை போதுமான அளவில் இல்லை. குறிப்பாக நாம் குறைபாடுகளையும், மோசமாகிக் கொண்டே செல்லும் முஸ்லிம்களின் தற்போதைய நிலையையும் கருத்தில் கொள்ளும்போது செய்ய வேண்டிய பணி மிகப்பெரியதாகும். இருக்கும் இந்த சில அமைப்புகளின் மீது நாம் திருப்தி கொண்டால், நாம் மிகப் பெரிய தவறு செய்கிறோம். இன்னும், தற்போதைய இந்த அமைப்புகளில் கூட, மிகப்பெரிய குறைபாடுகள் உள்ளன, முழு உம்மத்தின் நன்மையை விடவும் தங்களின் (சொந்த)நன்மைகளைத் தேடும் சில தீய எண்ணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அல்லாஹ் இந்த நூற்றாண்டில் தனது கலீஃபத்துல்லாஹ்வை அனுப்பியுள்ளான்! இன்ஷா- அல்லாஹ், உருவாக்கப்படுவதற்கு அல்லாஹ் கட்டளையிடப் போகும் அமைப்புகளின் மூலம், இன்ஷா அல்லாஹ், ஸஹீஹ் அல் இஸ்லாமான, முஸ்லிம்களாகிய நாம் அனைவரும், இந்த உன்னதமான பணிகளில் சிறப்பாக உதவிடும் கரங்களை நாம் வழங்க வேண்டும்

உண்மையில், இந்த அமைப்புகளிலிருந்து சரியாகப் பயனடைய, இஸ்லாத்திற்காக பணியாற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் இஸ்லாத்தின் மீது உண்மையான ஆழ்ந்த மரியாதையையும், அதைத் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமியர்களுக்கு இன்னும் இஸ்லாத்தின் மீது ஆசையும் நேசமும் இருந்தது என்று நாம் கூறலாம். மேலும் நமது [அதாவது, முந்தைய முஸ்லிம்களின்] அன்றாட வாழ்வில் இஸ்லாத்தின் வெளிப்படையான அடையாளங்களை நம்மால் காண முடியும்.அந்த நேரத்தில், தீனின் தேவையை பூர்த்தி செய்ய இந்த அமைப்புகள் போதுமானதாக இருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் வெளிநாட்டு சக்திகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து நமது ஈமான் [நம்பிக்கை] மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் எதிர்ப்புகள் ஏற்படுவதன் காரணத்தால் இஸ்லாத்திற்கான முஸ்லிம்களின் இந்த உணர்வுகள் மற்றும் ஆசைகள் அனைத்தும் மரணித்துவிட்டன.

துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் திட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றனர். இஸ்லாத்திற்கான நேசம் நமக்கு [முஸ்லிம்களிடம்] இருப்பதற்கு பதிலாக நமது தீன் மற்றும் ஈமான் (நம்பிக்கையின்) மீது நமக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பது போல் தோன்றுகிறது. இப்போது இழப்பதற்கு நேரம் இல்லை; நாம் விரைவாக செயல்பட வேண்டும், பகைவர்களின் கையிலிருந்து கட்டுப்பாட்டை மீட்டெடுத்து ஒவ்வொரு முஸ்லிமிலும் உள்ள அந்த மரணித்துப் போன இதயத்தை விழித்தெழச் செய்வதற்கு ஒரு பெரும் தாக்குதலைத் தொடங்கி நம் அனைவரிலும் இஸ்லாத்தின் மீதான நேசத்தையும், வலுவான பிணைப்பையும் பற்றவைக்க வேண்டும். (எரியச் செய்ய வேண்டும்) அப்போது மட்டுமே, மார்க்க அமைப்புகளிலிருந்து நம்மால் அதிகபட்ச பலனைப் பெற முடியும், அதன் காரணமாக (மார்க்க அமைப்புகள்) சமூகத்திற்கு இன்னும் சிறப்பாக சேவை செய்ய முடியும். நாம் உறுதியான மற்றும் விரைவான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், இந்த புறக்கணிப்பு மற்றும் சோம்பேறித்தனமான நிலைமையானது தொடர்ந்து எல்லா இடங்களிலும் பரவி, தீனின் இந்த பணிகளில் சிலவற்றைச் செய்யும் அந்த நிறுவனங்கள் (கூட) மறைந்து அழிந்து போய்விடும்.

ஆறாவது காரணம்

ஒவ்வொரு முறையும் "நன்மையை ஏவி தீமையை தடுத்தல்" என்னும் இந்த பணியை எவராவது செய்தால் அவர் மக்களிடம் இருந்து சிரமங்களை எதிர்கொள்வார் என்ற அச்சம் எப்போதும் உள்ளது. மக்கள் அவருடன் மோசமாக நடந்துகொள்கிறார்கள், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள், மேலும் அவரை அவமதிக்கிறார்கள். பெரும்பாலும் மக்கள் தீனின் பணியை செய்பவர்களிடம் மிகவும் வெறுக்கத்தக்க மனப்பான்மையை மேற்கொள்கின்றார்கள். இதுவே உண்மையாகும், ஆனால் தாவத்-ஏ-இல்லல்லாஹ்வின் பணியை மேற்கொள்வது என்பது எப்போதுமே மோசமான நடத்தையை அனுபவித்த தூதர்களின்(அலை) பாதையை பின்பற்றுவதாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த பணியை நிறைவேற்று பவர்களின் பழக்கமான பாதையும், விதியும் இதுவேயாகும். நிச்சயமாக, அனைத்து நபிமார்களும் (அலை) இந்த பணியின் காரணத்தால் மிகவும் மோசமான துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள்; இது இந்த வசனத்தில் தெளிவாக (சுட்டிக் காட்டப்பட்டு) உள்ளது:

وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي شِيَعِ الْأَوَّلِينَ ‎﴿١٠﴾‏ وَمَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ ‎﴿١١﴾‏

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்தைய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.

எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை.(அல்- ஹிஜ்ர் 11-12).

ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள்: “சத்தியத்தைப் பரப்புவதில் என்னை விடவும் அதிகமாக எந்த தூதரும் துன்பப்பட்டதில்லை”.

எனவே, இந்த அச்சங்கள் நமக்கு இருக்கக்கூடாது என்பதுத் தெளிவாகிறது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை நாம் பின்பற்றுகிறோம் என்று கூறிக் கொள்ள நாம் விரும்புகிறோம்; அவர்களின் பணியை நிறைவேற்ற அவர்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அவர்கள் எப்போதும் நிறைய சபூரை [பொறுமையைக்] கடைபிடித்தார்கள் மேலும் அனைத்து சிரமங்களையும் தாராள மனதுடன் ஏற்றுக் கொண்டார்கள்.நாம் அவர்களின் அருளுக்குரிய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும், தப்லீக்கின் இந்த பணியை நாம் செய்யும் போது பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். இது இந்த நாட்களில் (மிகவும்) இன்றியமையாததாகும். இன்ஷா அல்லாஹ், ஆமீன், சும்ம ஆமீன்.

இன்ஷா அல்லாஹ், எனது அடுத்த வெள்ளிக்கிழமை குத்பாவில் இதே தலைப்பில் தொடர்வேன். இதைச் செய்வதற்கு அல்லாஹ் எனக்கு தவ்ஃபீக்கை வழங்குவானாக! மேலும் உங்கள் அனைவருக்குள்ளும் நிகழ வேண்டிய இந்த உட்புற மாற்றத்தின் பக்கம் நேர்மையான இதயங்களை தூண்டுவதில் வெற்றி பெறச் செய்வானாக!.இன்ஷா அல்லாஹ்.