வஹீ மற்றும் இல்ஹாம் - வேறுபாடு

இஸ்லாமிய அறிஞர்கள் வஹீ மற்றும் இல்ஹாம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை கண்டறிய முயற்சித்துள்ளனர். ஒரு நபிக்கு வரும் இறைச்செய்தியை வஹீ என்றும் நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு வரும் இறைச்செய்தியை இல்ஹாம் என்றும், அவர்கள் வேறுபடுத்தி இதற்கு விளக்கமளிக்கின்றனர். புனித திருகுர்ஆன் அத்தகைய வேறுபாடுகள் எதையும் குறிப்பிடவில்லை. ஷஹீத் ஹஸ்ரத் ஷா இஸ்மாயில் அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்கள்:

இல்ஹாம் என்பது இறைத்தூதர்களுக்கு அருளப்படும் செய்திகள் ஆகும். இதற்கு வஹீ என்றும் சொல்லப்படுகிறது. இந்த இறைச்செய்திகள் இறைத்தூதர்கள் அல்லாதோருக்கு அருளப்படுமானால், அதற்கு தஹ்தீத் என்று அழைக்கப்படும். திருக்குர்ஆனில் இல்ஹாம் எனும் இந்த இறைச்செய்தி இறைத்தூதருக்கு அருளப்பட்டிருந்தாலும், இறைநேசருக்கு அருளப்பட்டிருந்தாலும் அதற்கு வஹீ என்றே சொல்லப்படுகிறது. (மன்ஸபே இமாமத், உருது மொழிபெயர்ப்பு, பக்கம் 72).

தாபியீன்கள் இதை வேறுபடுத்தி குறிப்பிடுவதற்காக, இறைத் தூதர்களுக்கு அருளப்படும் செய்திகளை வஹீ என்றும், அவர்கள் அல்லாதோருக்கு அருளப்படும் செய்திகளை இல்ஹாம் என்றும் அழைக்கின்றனர். எனினும் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் திருக்குர்ஆனில் எப்படி இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதோ அப்படியே பயன்படுத்துவதையே தெரிவு செய்கின்றனர். இவை இரண்டிற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் அவர்கள் குறிப்பிடவில்லை.

தெய்வீகமாக நியமிக்கப்பட்ட நடுவரான வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்கள் 'பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்கள் வஹீ மற்றும் இல்ஹாம் ஆகிய இரண்டிற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் குறிப்பிடவில்லை” என்பதாக கூறியுள்ளார்கள்.

மேற்கூறப்பட்ட செய்தியை விளக்கும்போது ஹஸ்ரத் இரண்டாம் கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள், வஹீ மற்றும் இல்ஹாம் ஆகிய இரண்டும் ஒன்றே என்றும், அவை இரண்டிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்றும் கூறியுள்ளார்கள். இந்த வேறுபாட்டை சூஃபிகளே பயன்படுத்தி வந்தனர். இறைவனிடமிருந்து அவர்கள் பெற்ற செய்திகள் இல்ஹாம் என்று அழைத்தனர். இவ்வாறு பயன்படுத்துவதால், பொது மக்கள் அவர்களை தவறாகப் புரிந்துகொள்ளவோ, அல்லது அவர்களை விட்டும் வழிதவறிச் செல்லவோ மாட்டார்கள். இதுஇல்லாமல், வஹீ மற்றும் இல்ஹாம் ஆகியவற்றிற்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை. (தஃப்ஸீரே கபீர், அத்தியாயம் அல் ஸில்ஸால், பக்கம். 430).

குர்ஆனிய சொல் மரபுபடி வஹீ எனும் சொல் மிகவும் பொதுவானதாகும். இறைத்தூதர்கள், இறைநேசர்கள் மற்றும் புனிதர்கள் ஆகியோருக்கு அருளப்படும் அனைத்து வெளிப்பாடுகளும் வஹீ என்றே அழைக்கப்படுகின்றன. மேலும் வஹீ எனும் இந்த வார்த்தை புனிததிரு குர்ஆனில் எழுபது தடவைகளுக்கு குறையாமல் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, மூஸா நபியின் தாயார் விஷயத்தில் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. அதே போல, இல்ஹாம் என்ற வார்த்தையும், இதே அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு சொற்களும் ஒரே அர்த்தங்களைக் கொண்டுள்ளன. இந்த இரண்டையும் ஒரே நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதில் தவறில்லை.

சர்வ வல்லமையுள்ள இறைவன் எவ்வாறு பேசுகிறான்?

வஹீ, இல்ஹாம் ஆகியவை இறைவனின் சொல்லைக் குறிக்கிறது என்பது அவற்றின் நேரடியான அர்த்தத்தின் மூலம் நமக்கு தெளிவாகிறது. சர்வவல்லமையுள்ள இறைவன் தன்னுடைய அடியார்களுடன் உரையாட இம்முறையையே கையாளுகிறான். இப்போது இங்கே ஒரு கேள்வி எழுகிறது - இறைவன் உண்மையில் தனக்குரித்தான அடியார்களுடன் எவ்வாறு பேசுகிறான்? சர்வ வல்லமையுள்ள இறைவன் புனித திருகுர்ஆனில் இதைக் குறித்து தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வஹுயின் மூலமாகவோ, அல்லது திரைக்கு அப்பாலிருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பியோ தவிர எந்த மனிதருடனும் அல்லாஹ் பேசுவது சாத்தியம் இல்லை. அத்தூதர் அல்லாஹ் நாடியதை அவன் அனுமதி கொண்டு அறிவிப்பார். நிச்சயமாக அவன் மிக உயர்ந்தவன்; தீர்க்கமான அறிவுடையவன். (திருக்குர்ஆன் 42:52)

ஆகையால், சர்வவல்லமையுள்ள இறைவன் மூன்று வழிகளில் மனிதனுடன் உரையாடுவதன் மூலம் அம்மனிதனை உயர்த்துவான்:

( i ) நேரடி வெளிப்பாடுகள் மூலம் .

(ii) நேரடியாக ஆனால் ஒரு திரைக்குப் பின்னால் உரையாடுவதன் மூலம், அதாவது விளக்கமாக கூறுவதானால் ஒரு கனவு அல்லது சில காட்சிகள் மூலம் உரையாடுவது.

(iii) நேரடி வஹீ மூலம், அதாவது இறைவனின் புறத்திலிருந்து ஒரு வானவர் அவனது அன்பான அடியார்களுக்காக ஒரு செய்தியுடன் இறங்குவது.

இந்த மூன்று வகையான செய்திகளுக்கும் ஏராளமான எடுத்துக்காட்டுகளை திருக்குர்ஆன் கொண்டுள்ளது. இறைதரிசனங்கள், கனவுகள் ஆகியவைக் குறித்து பல்வேறு இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் இறைத்தூதர்கள் மற்றும் பிறருக்கு அருளப்பட்டுள்ள கனவுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை 'ஒரு திரைக்குப் பின்னால்' எவ்வாறு இறைச்செய்திகள் அருளப்படுகின்றன என்பதை விளக்குகின்றன.

இந்த இரண்டு வகையான வெளிப்பாடுகளும், அதாவது ஒன்று நேரடியாகவும், மற்றொன்று ஒரு திரைக்கு பின்னாலும் அருளப்படும் வெளிப்பாடுகள், புனித திருகுர்ஆனின் பல்வேறு வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகையான வெளிப்பாடுகளும் இறைத்தூதர்கள் மற்றும் பிற புனிதர்களுக்கும் அருளப்படுகின்றன. சுருக்கமாக கூறுவதானால், சர்வவல்லமையுள்ள இறைவன் தன்னுடைய அடியார்களுடன் உரையாடும் மேற்கூறிய இம்மூன்று முறைகளும் திருக்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளன. இதில் வஹீ என்பது இந்த மூன்று வகைகளில் ஒன்றாக உள்ளது. ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூத் (வாக்களிக்கப்பட்ட மகன்) அவர்கள் திருக்குர்ஆனில் அத்தியாயம் ஸில்ஸாலின் விளக்கத்தில் இருபத்தி மூன்று வகை வெளிப்பாடுகள் இருப்பதாக தனது விளக்கத்தின் மூலம் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அடிப்படையில் மேற்கூறப்பட்ட மூன்று வகைகளுக்குரிய முக்கியமான துணைக் கிளைகள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன:

வெளிப்பாடின் ஐந்து அம்சங்கள்:

வஹீ மற்றும் இல்ஹாம் ஆகியவை பொது மக்களின் கண்களுக்கு மறைவானது என்பது இப்போது நமக்கு மிகவும் தெளிவாகிவிட்டது . உயர்ந்த அந்தஸ்துடைய நபர்கள் மட்டுமே இந்த நிகழ்வை அனுபவிக்க முடியும். மேலும் அவர்கள் மட்டுமே அவற்றை விவரிக்கவும் தகுதி படைத்தவர்கள் ஆவர்கள். ஒருமுறை அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம், “தங்களுக்கு வஹீ எவ்வாறு வருகிறது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'சில வேளைகளில் ஒரு மணி ஒலிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்கிறது, சில நேரங்களில் ஒரு மனிதர் இறைச்செய்தியை அருள்வார். (புகாரி)

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள், இதை பின்வரும் முறையில் விவரித்துள்ளார்கள். இந்த வெளிப்பாடு ஐந்து வகைகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்கள்:

சர்வவல்லமையுள்ள இறைவன் தன்னுடைய இறைச்செய்தியை தனது அடியாருக்கு அருள விரும்பும் போது அவர் அதை மிகவும் மென்மையாகவும், சில சமயங்களில் அதற்கு நேர்மாறாக மிகவும் கடுமையாகவும் உணர்வதே முதல் வகை இல்ஹாம் ஆகும். அச்செய்தியைப் பெறுபவர் உறக்க நிலையில் இருக்க, அவரது நாவால் அந்த வெளிப்பாடுகளின் வார்த்தைகளை உச்சரிக்க அல்லாஹ் அனுமதிக்கிறான். இந்நிலையில் வெளிப்பாட்டின் வார்த்தைகள், கடினமான மேற்பரப்பில் விழும் ஆலங்கட்டி மழைப் போல அவரது நாவில் விழுகின்றன. இத்தகைய வெளிப்பாடுகள் ஒரு பிரம்மாண்டமான, விசித்திரமான பிரமிப்பைக் கொண்டுள்ளன. (பராஹினே அஹ்மதிய்யா, அடிக்குறிப்பு பக்கம். 223-224)

இரண்டாவது வகை என்னவென்றால், அதன் அற்புதமான தன்மைகள் காரணமாக, அதை நான் இல்ஹாம் என்று அழைக்கிறேன். சர்வ வல்லமையுள்ள இறைவன் தன் அடியானின் பிரார்த்தனைக்கு உடனடியாக பதிலளிக்க விரும்பும் போதோ, அல்லது எந்த ஒரு பிரார்த்தனையும் இன்றி இறைவன் தானாக விரும்பும்போதோ, அடியானை விசித்திரமான ஒரு மயக்கநிலை பிடித்துக் கொள்கிறது. அந்நிலையில், அச்செய்தியைப் பெறும் அடியான் தனது சொந்த இருப்பை முற்றிலுமாக மறந்துவிட்டு, அந்த நிலையில் மூழ்கி, தண்ணீர்க் குளத்தில் மூழ்குவதைப் போன்று உணர்கிறார். ஆனால் அவர் அந்த நிலையிலிருந்து மீண்டு வரும்போது, தனக்கு என்ன நேர்ந்தது என்பதன் எதிரொலிகளை உணர்கிறார். இந்த எதிரொலிகள் தணிந்தவுடன் அவர் தனது நாவில் விசித்திரமான மற்றும் இனிமையான சொற்களை உரைக்க எண்ணுகிறார். அந்த நிலையை விவரிக்க முடியாது. (பராஹினே அஹ்மதிய்யா, அடிக்குறிப்பு பக்கம் 36).

மூன்றாவது வகை வெளிப்பாடு என்பது ஒருவரின் இதயத்தில் அல்லது அவரது மனதில் மிகவும் மென்மையாக தோன்றுவதாகும். அதன் பொருள், திடீரென்று ஒரு சொல் அல்லது ஒரு வாக்கியம் அவரின் மனதை ஈர்க்கும். ஆனால் இந்த வகை வெளிப்பாடு ஏற்கனவே விவரித்த முந்தைய வெளிப்பாட்டைப் போன்று அற்புதமானதல்ல. உண்மையில், இந்த வகை வெளிப்பாட்டிற்கு தூக்கம் ஒரு முக்கிய பகுதியாகும். பெரும்பாலும் ஒருவர் முழுமையாக விழித்திருக்கும் போது அது உண்டாகலாம். மேலும் யாரோ ஒருவர் திடீரென்று இந்த வார்த்தையை கேட்பவரின் மனதில் போட்டிருக்கலாம் அல்லது அவர் மீது வார்த்தைகளை சிதறடித்திருக்கலாம். எனவே, இந்த வெளிப்பாட்டை பெறுபவர் அந்நேரத்தில் முழுமையாக விழித்துக் கொண்டிருக்கிறார். ஒரு யோசனை அல்லது ஒரு வாக்கியம் திடீரென்று அவரது மனதில் போடப்பட்டதைப் போல உணர்வார், மேலும் அது இறைவனிடமிருந்து வந்தது என்ற வலுவான உணர்வைக் கொண்டிருப்பார். (பராஹினே அஹ்மதிய்யா, அடிக்குறிப்பு, பக்கம் 247).

நான்காவது வகை சில நேரங்களில் ஒருவர் கனவுகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவார், அது எப்போதும் உண்மையாக அமையும், அல்லது சில சமயங்களில் ஒரு வானவர் மனிதனின் வடிவத்தில் தோன்றி இறைச்செய்தியை அருளுவார். சில நேரங்களில் அந்த இறைச்செய்தி ஒரு சுவரில் அல்லது ஒரு காகிதத்தில் அல்லது ஒரு கல்லில் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார், அது விரைவில் என்ன நடக்கப் போகிறது என்பதற்கான தகவலாக இருக்கும். (பராஹினே அஹ்மதிய்யா, அடிக்குறிப்பு பக்கம் 248).

ஐந்தாவது வகை இது ஒருவரின் மனதுடன் எந்த தொடர்பும் இல்லாத வகை வெளிப்பாடு ஆகும். திரைக்குப் பின்னால் இருந்து ஒரு தனித்துவமான குரல் கேட்கும். அக்குரல் மிகவும் இனிமையாகவும், பரவசமாகவும் இருக்கும், மேலும் அச்செய்தியைப் பெறுபவரை மிகவும் இனிமையான உணர்வோடு அது விட்டுச் செல்லும். முதலில் அதைக் கேட்கும்போது, அக்குரல் எங்கிருந்து வந்தது என்று அவர் யோசிக்கத் தொடங்குவார். பின்னர், இவ்வளவு இனிமையாகப் பேசுவது யார் என்பதைப் பார்க்க அவர் ஏங்குவார். இறுதியாக, அதைப் பேசியது ஒரு வானவர் என்பதை அவர் உணர்வார். (பராஹினே அஹ்மதிய்யா, அடிக்குறிப்பு பக்கம் 258)