காத்தமுல் குலபா ஹஸ்ரத் மஸீஹ் அலை அவர்களின் அழகிய வழிகாட்டல்

ஹாத்தமுல் குலஃபா ஹஸ்ரத் மஸீஹ்(அலை)  அவர்களின் அழகிய வழிகாட்டல்

“ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அதே மாதிரியான கஷ்டங்கள் நமது ஜமாஅத்திற்கும் ஏற்பட்டுள்ளன. புதிதான, முதன்முதலான கஷ்டம் என்னவென்றால், ஒருவர் இந்த ஜமாஅத்தில் சேரும்போது உடனே அவருடைய நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள் தனித்து பிரிந்துவிடுகிறார்கள். எதுவரையென்றால், சில நேரங்களில் பெற்றோர்கள், சகோதர, சகோதரிகளும் எதிரியாகி விடுகின்றார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவதைக் கூட ஆகுமானதாகக் கருதுவதில்லை. ஜனாஸா தொழ விரும்புவதில்லை.

இவ்விதமான பல கஷ்டங்கள் ஏற்படுகின்றன. சில பலவீனமான இயல்பைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.அவர்கள் அத்தகைய கஷ்டங்களின்போது நடுங்கிப் போய்விடுகிறார்கள். ஆனால் இந்தமாதிரியான கஷ்டங்கள் வருவது அவசியமாகும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். நீங்கள் நபிமார்களையும், ரஸூல்மார் களையும் விட மேலானவர்கள் அல்ல. அவர்களுக்கும் இந்த மாதிரியான கஷ்டங்கள் வந்தன. இறைவன் மீதுள்ள ஈமான் உறுதியாவதற்கும், தூய மாற்றமடைவதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கும் துஆக்களில் ஈடுபடுவதற்கும்தான் இவை வருகின்றன. எனவே நீங்கள் எல்லாநபிமார்கள், ரஸூல்மார்களையும் பின்பற்றுங் கள்; மேலும் பொறுமையின் வழிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. உண்மையை ஏற்றுக் கொண்டதனால் உங்களை விட்டுப் பிரிகின்ற நண்பர் உண்மையான நண்பர் அல்லர். இல்லையென்றால், அவர் உங்களுடன் இருந்து உங்களுக்கு ஒத்துழைப்பும் கொடுத்திருப்பார். நீங்கள் இறைவனால் நிலைநாட்டப்பட்ட ஜமாஅத்தில் இணைந்த ஒரே காரணத்திற்காக உங்களை விட்டுப் பிரிகின்ற வர்களுடன் நீங்கள் சண்டையிடாதீர்கள் அல்லது குழப்பம் செய்யாதீர்கள். மாறாக அல்லாஹ் தன் அருளினால் உங்களுக்கு வழங்கிய அதே அகப்பார்வையையும், இறை ஞானத்தையும் அவர்களுக்கும் வழங்குமாறு, அவர்களுக்காக மறைமுகமாக துஆ கேளுங்கள். நீங்கள் உங்கள் தூய முன்மாதிரியினாலும், அழகிய நடத்தையினாலும், நீங்கள் நல்லவழியை மேற்கொண்டுள்ளீர்கள் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். பாருங்கள். நான் உங்களுக்கு இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் தெளிவு படுத்துவதற்காகத்தான் நியமிக்கப் பட்டிருக்கிறேன். அதாவது, எல்லாவிதமான குழப்பமான இடங்களிலிருந்து விலகியிருங்கள். ஏச்சுப் பேச்சுகளைக் கேட்டும் பொறுமையாக இருங்கள். தீமைக்கு, நன்மையைக் கொண்டு பதிலடி கொடுங்கள். எவராவது குழப்பம் செய்யத் திட்டமிட்டால் நீங்கள் அந்த இடத்திலிருந்து நழுவிச் சென்று விடுவது சிறந்ததாகும். மேலும் மென்மையாக பதில் கொடுங்கள். பலமுறை இப்படியும் நடக்கின்றது. ஒருவர் மிகவும் ஆவேசத்துடன் எதிர்க்கின்றார். குழப்பத்தை உருவாக்கும் முறையை எதிர்ப்பில் கையாள்கின்றார். அதனால் கேட்பவர்களுக்கு வெறியைத் தூண்டும் அளவுக்கு அதுஇருக்கிறது. ஆனால் முன்னால் இருந்து மென்மையாக பதில் கொடுக்கும்போது, ஏச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கும்போது எதிரிக்கே வெட்கம் ஏற்பட்டு விடுகிறது. அவர் தான் செய்தது பற்றி வெட்கப்படுகின்றார்; நாணம் கொள்ள ஆரம்பித்து விடுகின்றார். பொறுமையை கைவிட்டு விடாதீர்கள் என நான் உண்மையாகவே, உண்மையாகவே உங்களுக்குக் கூறுகின்றேன். பொறுமை எத்தகைய என்றால், பொறுமையினால் நடக்கும் வேலைபீரங்கிகளாலும் நடக்க முடியாது.
பொறுமைதான் உள்ளங்களை வெற்றி கொள்கின்றது” (மல்ஃபூஸாத் தொகுதி 4 பக்கம் 157)