ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் நீடித்த மரபு!

பிஸ்மில்லா ஹிர் ரஹ்மான் நிர்ரஹீம்

நபித்துவத்தின் முத்திரை

இமாம் புஹாரி அவர்கள் பதிவு செய்துள்ள ஒரு ஹதீஸில், ‘ஹஸ்ரத் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கின்றார்கள். எம்பெருமானார்(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ‘எனக்கும் எனக்கு முன்னர் தோன்றிய நபிமார்களுக்கும் இடையிலுள்ள நிலைமை ஒரு கட்டிடத்திற்கொப்பானதாகும். அதன் அமைப்பு மிகவும் அழகுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதில் ஒரு செங்களுக்கான இடம் விடப் பட்டிருக்கிறது. மக்கள் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிப்பார்த்து அதன் அழகைக்கண்டு வியப்படைகின்றனர். ஒரு செங்களுக்கான இடம் ஏன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறதென மனதிற்குள் கேட்டுக் கொள்கின்றனர். விட்டு வைக்கப்பட்ட அந்த இடத்தை நிரப்புவதற்கான செங்கல் நான்தான். என்மூலம் அந்தக் கட்டிடம் முழுமை பெற்றுவிட்டது. இதன் காரணமாகத்தான் ரஸுல்மார்களின் முத்திரையாக ஆக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்தான் கடைசி செங்கல் ஆவார்கள் (என்பதிலும்), தீன் - மார்க்கத்தின் வீட்டை முழுமையாக்குகின்றார்கள் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை. உண்மையில், அன்னார் தோன்றியதால் (வருகையினால்) அவர்களே (அந்தக்) கட்டுமானத்தை முழுமைப் படுத்தினார்கள், ஏனெனில் அன்னார் மூலமாகவே அல்லாஹ் நமது மார்க்கத்தை, இறுதி மார்க்கத்தை நமக்கு வழங்கி, நமக்காக அதனை முழுமைப் படுத்தி அதற்கு இஸ்லாம் என்றும் பெயரிட்டான்.

நபிமார்கள் மற்றும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பணி

இது ஒரு நபி என்பதன் அர்த்தத்தின் பக்கம் நம்மை கொண்டு வருகிறது. அர்த்தத்தின் அடிப்படையில், ஒரு தீர்க்கதரிசி/ நபி என்பவர் அல்லாஹ்விடமிருந்து ரூஹுல் குத்தூஸ் மூலம் மறைவானவற்றின் செய்திகளைப் பெறக் கூடிய ஒருவர். அவர் எதிர்காலத்தைப் பார்ப்பதில்லை, ஆயினும் அல்லாஹ்வின் நாட்டத்தால் எதிர்காலத்தில் நடக்கும் முக்கியமான விஷயங்களைப் பற்றி அவருக்கு அறிவிக்கப் படுகிறது. அல்லாஹ்விடம் இருந்து அதைப் பற்றி அவருக்கு முன்னதாகவே அறிவிக்கின்ற வெளிப்பாடுகளைப் பெறாமல் எதிர்கால நிகழ்வுகளை அவரால் கணிக்க இயலாது. ஆகவே, ஒரு நபி என்பவர் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு முன்னறிவிப்புகளை / தீர்க்கதரிசனங்களைச் செய்பவராகவும், அவர் அல்லாஹ்விடமிருந்து வெளிப்பாடுகளை பெறுபவராகவும் இருக்கிறார். நபஅ என்றால் செய்தி, உண்மையான, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த உண்மைச் செய்தி. அரபுச் சொல் அமைப்பில், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் போன்ற வேறு எந்த சாதாரண செய்திகளுக்கும் இது பயன்படுத்தப்படுவதில்லை. (மாறாக)

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அத்தகைய செய்திகளுக் காகவேப் பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக ஆன்மீக வட்டத்தில் (களத்தில்) இவ்வாறாக, 'நபி' (அதாவது தீர்க்கதரிசி) என்பவர் உண்மையைப் பேசுகின்ற, அல்லாஹ்விடமிருந்து (கிடைக்கின்ற) மிகுந்த மதிப்பு மிக்க உண்மைச் செய்திகளைப் பெற்று அதை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற அத்தகைய ஒரு நபராவார். ஆகவே, ஒரு நபி/தீர்க்கதரிசியானவர் (ஷரீஅத்) சட்டத்துடன் கூடிய செய்திகளுடன் மற்றும் (ஷரீஅத்) சட்டத்தை கொண்டிராத செய்திகளைக் கொண்டுள்ள அல்லாஹ்வின் கட்டளை(களைக்) கொண்டு வர முடியும்.

அவரது சகாப்தத்தின் பொதுவான மக்களிடையே தகுதிப் பெறுவதற்கான ஒரு விரும்பப்பட்ட நிலையாகும், அவர் தனது சகாப்தத்தின் பொது மக்களிடையே அல்லாஹ்வின் வெளிப் பாடுகளைப் பெறுகின்றார். அவருடைய சகாப்தத்தின் பொதுவான மக்களுக்கிடையே அல்லாஹ்வின் வெளிப்பாடுகளைப் பெறும் அத்தகைய நபரைத் தகுதி பெறவைக்கின்ற ஒரு பதவி ஆகும். மேலும் அவரால் தீனின் (மார்க்கத்தின்) இரட்சிப்பிற்காக அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய முடியும்.

மேலும், நிச்சயமாக, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களே, (ஷரீஅத்) சட்டத்துடன் வருகை தந்த மற்றும் (ஷரீஅத்) சட்டத்தை கொண்டிராமல் வருகை தந்த அனைத்து நபிமார்கள்/ தீர்க்கதரிசிகள் (அனைவரிலும்) மிகச் சிறந்தவர்/முழுமைப் பொருந்தியவர் ஆவார்கள். அன்னாரது வருகையுடன், மார்க்கம் மற்றும் அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் நிறைவடைந்தது. அல்லாஹ்வின் மார்க்கத்தின் மீதான அன்னாரது நெருங்கிய நிலையானது மிகவும் முழுமைப் பொருந்திய ஒன்றாக இருந்தது, ஏனெனில் அவர்கள் நடைமுறையில் அல்லாஹ்வின் வார்த்தைகளை உண்மைப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மனிதராக, வேதமாக இன்னும் அல்லாஹ்வின் ரூஹ் - ஆன்மாவாக அனைத்துமே அன்னாருடன் இணைந்திருந்தது. இதன் காரணமாகவே அவர்கள் ஒரு மனிதர் என்ற நிலையிலும், ஒரு நபி என்ற இரண்டு நிலையிலுமே அன்னார் பரிபூரணமாணவராகத் திகழ்ந்தார்கள்.

மேலும், ஒரு ரசூல் என்ற நிலையில்,, அவர்கள் அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்தியை வழங்குவதற்காக வருகைத் தந்தார்கள். அல்லாஹ் அவர்களை அவனது பிரதிநிதியாக, அவனதுத் தூதராக அனுப்பினான், மேலும் அன்னார் இதனைச் செய்தார்கள்: அதாவது இறைச் செய்தியை வழங்கினார்கள். அல்லாஹ்வின் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவரால் மக்களின் இதயங்களில் நுழைய முடியவில்லை. அல்லாஹ் அன்னாரை அவனது ஒரு பிரதிநிதியாகவும், ஒரு தூதராகவுமே அனுப்பினான். மேலும் அன்னார் என்ன செய்தார்கள் என்றால் தூதுச் செய்தியை மட்டுமே எடுத்து வைத்தார்கள். அன்னாரால் மக்களின் இதயங்களில் புகுந்து அல்லாஹ்வின் உண்மையை எடுத்து வைக்க முடியாத தாக இருந்தது. அன்னார் (இறைச் செய்தியை மக்களுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். அவற்றின் படி சரிசெய்யும்படி அவர்களை அறிவுறுத்தினார்கள். மேலும் அம்மக்கள் இறைச் செய்தியை நிராகரித்துத் தவறான பாதையை எடுத்துக் கொண்டால், ஒரு பெரும் தண்டனையை குறித்தும் அவர்களை எச்சரித்தார்கள்.

ஆகையால், ஒரு 'நபி' மற்றும் 'ரஸுல்' ஆகிய இரண்டிலும், அவர்கள் முழுமையின்/பரிபூரணத்தின் (உச்சமாக) உருவகமாகத் திகழ்ந்தார்கள். வேறு எந்த ஒரு நபியும்/தீர்க்கதரிசியும் அல்லாஹ்வின் பரிபூரணத்தின் உயர் நிலையை மற்றும் (அவனது) நெருக்கத்தை அடையவில்லை! அடையவும் முடியாது. அல்லாஹ்வின் பார்வையில் அனைத்து நபிமார்களுக்கும் மத்தியில் அந்தஸ்தின் தரத்தில் அவர்களே முதன்மையானவர்களாவார்கள். அவர்களே (வரிசையில்)முதல் சிறந்தவர் ஆவார்கள். (இரண்டாவது சிறந்தவரோ அல்லது மூன்றாவது சிறந்தவரோ அல்ல), மற்றவர்கள் பதவி, அந்தஸ்து மற்றும் நேசம் ஆகியவற்றி(ன் அடிப்படையி)ல் அன்னாருக்குப் பிறகே வருகிறார்கள்.

ஹஸ்ரத் திரு நபி(ஸல்) அவர்களின் கம்பீரமான (மேன்மையான) அந்தஸ்து:

உதாரணமாக, அவர்களுடைய ஆன்மீகக் காட்சி மற்றும் பயணத்தின் போது (அதாவது இஸ்ரா மற்றும் மிஃராஜ்) அல்லாஹ்வுடனான மிக உயர்ந்த தொடர்பினால் அவர்களுடைய ஆன்மா வின் மீது அருள் புரியப்பட்டது, ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் நேசம் மற்றும் அவனுடன் நேரடியாகப் பேசும் திறனைப் பெற்றிருந்தாலும், ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆன்மீகத்தின் அல்லது வானுலகின் மிக உயர்ந்த நிலைக்கு ஏறிச் செல்வதையும், ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் கண்டு கொண்ட அந்தஸ்தை விடவும், அல்லாஹ்வின் முன்னிலையில் மேன் மேலும் உயர்ந்து சென்றதையும் கண்டு ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் 'வேதனையுடன் பொறாமைப்பட்டு' அழுததாகவும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு இமாம் புகாரியின் ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் நேரடியாகப் பேசும் அவர்களின் சிறப்புத் தன்மையின் காரணத்தால் அவர்கள் ஏழாவது வானத்தில் இருந்தார்கள், மூஸா(அலை)  அவர்கள் (அல்லாஹ்விடம்) கூறினார்கள், ‘இறைவா! எனக்கு மேல் யாரும் உயர்த்தப்பட மாட்டார்கள் என்று நான் நினைத்தேன்.' (புஹாரி).

ஸஹீஹ் முஸ்லீமில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு அறிவிப்பில், ஹஸ்ரத் மாலிக் பின் ஸாஸா(ரலி) அவர்களின் மேற்கோளில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் ஆறாவது வானத்தை அடையும் வரை பயணம் செய்து, மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது, நான் அவர்களை வாழ்த்தினேன், அவர்கள் கூறினார்கள்: 'நேர்மையுள்ள சகோதரரே! நேர்மையுள்ள தூதரே! வாருங்கள்.' நான் (அவர்களை) கடந்து சென்றபோது அவர் அழுதார், 'உங்களை அழ வைப்பது எது?' என்று கூறுகின்ற ஒரு குரல் கேட்டது. என் இறைவா! அவர் ஒரு இளைஞன் ஆவார், அவரை நீ எனக்குப் பின் (ஒரு தூதராக) அனுப்பினாய், மேலும் என்னைப் பின்பற்றுபவர்களை விட அவரைப் பின்பற்றுபவர்கள் அதிக எண்ணிக்கையில் சுவர்கத்திற்குள் நுழைவார்கள் என்று அவர் கூறினார்.

ஹஸ்ரத் மூஸா(அலை) அவர்கள் ஆறாவது அல்லது ஏழாவது வானத்தில் இருந்தாலும், இங்கு முக்கியமானது என்னவென்றால், ஹஸ்ரத் மூஸா(அலை) மற்றும் அவர்களுடைய உம்மத்தை (சமூகத்தை)விட ஹஸ்ரத் நபி(ஸல்) மற்றும் அவர்களை உண்மையாகப் பின்பற்றுபவர்கள் ஆகிய இருவருக்கும் அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்து மற்றும் நெருங்கியத் தன்மை இருக்கும். நான் மீண்டும் கூறுகிறேன், ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் உண்மையாக பின்பற்றுபவர்களால் மட்டுமே அல்லாஹ்வின் நெருக்கத்தை நோக்கி ஏறிச் செல்ல முடியும், பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் இஸ்லாத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாத அவர்களால் (அல்லாஹ்வின் நெருக்கத்தை நோக்கி ஏறிச் செல்ல) முடியாது.

உண்மையாக பின்பற்றுபவர்களுக்கான இறை வாக்குறுதி

அல்லாஹ்வின் வாக்குறுதியானது கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய தாக இருக்கின்றது. திரு குர்ஆனில் சூரா அன் நிஸாவில் (அத்தியாயம் 4, வசனம் 70) (அது பற்றி) அவன் குறிப்பிட்டுள்ளான்:

وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ ۚ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا

அல்லாஹ்வுக்கும் இந்தத் தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள், அல்லாஹ் அருள் புரிந்தவர்களான, நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), சித்தீக்குகள் (உண்மையாளர்கள்), ஷஹீதுகள் (உயிர்த்தியாகிகள்), ஸாலிஹீன்கள் (நல்லவர்கள்) ஆகியோரைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இத்தகையோரே (மிக்க) நல்ல நண்பர்கள் ஆவார்கள்.

இதன் பொருள் என்னவென்றால், எம்பெருமானார் ஹஜ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் உண்மையானத் தொண்டர்களை/ பின்பற்றுபவர்களை அல்லாஹ் எப்பொழுதும் கௌரவிப்பான். மேலும் கடந்த கால தூதர்களின் மக்கள் அல்லது சமுதாயங்களை விடவும் அவர்களை அதிகளவில் கௌரவிப்பான் என்பதாகும். ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதிச் செங்கல் என்ற முறையில், அவர்கள் புதிய வாயிலாக இருக்கின்றார்கள். அதன் மூலம் அல்லாஹ்வின் மார்க்கத்தை (மேன்மேலும்) வலுப்படுத்த அவர்களது ஆன்மீக சந்ததி வரக்கூடும், மேலும் மார்க்கம் புதிய மார்க்கமாக இல்லாமல் அது எப்பொழுதும் இஸ்லாமாகவே இருக்க முடியும் என்பதே இதன் (சரியானப்) பொருளாகும்.

இன்றைய நாட்களில் நாம் பார்ப்பதுபோல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாம் அபாயத்தில் இருக்கும் போது இஸ்லாத்தை ஆதரிப்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும், தீனின் - மார்க்கத்தின் கட்டுமானத்தை, ஷரீஅத்துடைய அனைத்துத் தூதர்களின் வீடும் இடிந்து விழுவதிலிருந்தும் பாதுகாக்க, ஹஸ்ரத் நபி கரீம்(ஸல்) அவர்களின் உம்மத்திலிருந்து அல்லாஹ் எவரையேனும் ஒரு துணை நபியாக, ஓர் இஸ்லாமியத் தூதராக, எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களது ஆன்மீகத் தொண்டராகவும், கீழ்ப்படிதலுடனும் இருக்கின்ற (ஒரு)வரை தூதராக அல்லாஹ் எழுப்புவான்.

இது ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கும் அவர்களது உம்மத்தில் இருந்து உண்மையான அடியார்களுக்கும், இறைபக்தி உடையவர்களுக்கும் அல்லாஹ் வழங்கியுள்ள மேன்மையாகும், மேலும் நம்மீதான அந்த மேன்மையும் இறை நேசமும் தான் ஹஸ்ரத் எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் தூக்க நிலைக்கும் விழித்திருக்கும் நிலைக்கும் இடைப்பட்டு இருந்தபோது (கஷ்ஃப்) ஆன்மீக ஏற்றத்தின் போது ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களை‌ அழ வைத்தது.

மனிதர்களும் இறை முகத்தை வெளிப்படுத்துதலும்.

நான் இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அன்னார் அல்லாஹ்வின் முன்னிலைக்கு ஏறிச் சென்ற போதிலும், அவர்கள் அல்லாஹ்வைக் காணவில்லை, ஏனெனில் எந்த மனித ஆன்மாவும் தாம் இறந்த (பிறகு) அல்லாஹ் அவருக்கு முன்னால் தன்னைத் தானே வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பும் நிலைக்கு ஏறிச் செல்லாத வரை தூக்கத்திலோ அல்லது அரை தூக்கத்திலோ ஒருபோதும் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது.

ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்:

"முஹம்மது தனது இறைவனைக் கண்டுள்ளதாக எவராவது உம்மிடம் கூறினால், அவர் ஒரு பொய்யர் ஆவார், ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: 'எந்தப் பார்வையாலும் அவனை (அல்லாஹ்வை) அடைய முடியாது.' (6:104) மேலும் முஹம்மத் மறைவானதைக் கண்டதாக எவராவது உம்மிடம் கூறினால் அவர் ஒரு பொய்யர் ஆவார் ஏனெனில் 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் மறைவானதை பற்றிய அறிவு இல்லை."(புகாரி)

கூடுதலாக, இது அபூ தர் அவர்களின் மேற்கோளில் கூறப்பட்டுள்ளது: 'நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று “நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: (அவன்) ஒளிமயமானவன் ஆவான் (அவன் ஒளியால் மறைக்கப் பட்டுள்ளான்); நான் எவ்வாறு அவனைப் பார்க்க முடியும்? ’’ (முஸ்லிம்).

ஆகையால், அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும், ஷரீஅத்தைக் கொண்டவர்கள் (ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் ஷரீஅத் உடைய தூதர்களில் இறுதியானவர்கள் ஆவார்கள்) மற்றும் ஷரீஅத்தைக் கொண்டிராதவர்களாக இருந்தாலும் சரி அல்லாஹ்வின் வெளிப்பாடுகளை மட்டுமே காண்கிறார்கள், ஆனால் அல்லாஹ்வை அவனது உண்மையான மற்றும் யதார்த்தமான வடிவிலோ அல்லது இருப்பிலோப் பார்க்கவில்லை.

உதாரணமாக, எவராவது தனது தந்தையின் வடிவம் அல்லது ஒளியின் வடிவம் போன்றவற்றில் அல்லாஹ்வைப் பார்த்ததாகக் கனவு காண முடியும். இவை அல்லாஹ்வின் வெறும் வெளிப்பாடுகள் ஆகும், அவன் (அதாவது அல்லாஹ்) அந்த நபருடன் இருக்கிறான் என்பதை (அந்த) நம்பிக்கையாளருக்கு மீண்டும் உறுதியளிக்கவும், அல்லாஹ் மற்றும் இஸ்லாத்தின் மீதான அவரது இறை நம்பிக்கையில் அவரை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கிறான்.

உங்களது பாக்கியத்தை கண்டுணருங்கள்

எனவே, எனது அன்பான சஹாபாக்களே! இன்று ஆன்மீக சந்ததியினருக்கு, வாக்களிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு, ஹஜ்ரத் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருந்து கொண்டு, ரூஹுல் குதுஸ் இறங்குவதன் மூலம் பொன்னான வாய்ப்பைப் பெற்று தீன்-ஏ-இஸ்லாத்தை வலுப்படுத்தவும், மனிதனை அல்லாஹ்வை நோக்கி அழைத்துச் செல்லும் பழமையான நெடுஞ்சாலையை சரிசெய்திடவும் இந்த யுகத்தின் கலிபத்துல்லாஹ் என்ற முறையில் இந்த எளியவனின் இறைவெளிப்பாடும் நமக்கான ஒரு நன்மதிப்பு-கௌரவமாகும்.

நான் வேறொரு புதிய மார்க்கத்தையோ அல்லது புதிய ஷரீஅத்தையோ கொண்ட வேதத்தையோ கொண்டு வரவில்லை! மாறாக, அபாயம் மற்றும் பாதிப்பற்ற நிலையில் இருந்து உங்கள் அனைவரையும் பாதுகாத்து அல்லாஹ்வின் பக்கம் வழிநடத்துவதற்காக என்னை வழிநடத்துபவரும், எனது ஆன்மீக வழிகாட்டியும், தூதரும், ரஹ்மத் துலில்ஆலமீன் (அனைத்து பிரபஞ்சத்திற்கும் அருள்கொடை) மற்றும் காதம்-அன் நபிய்யீன் (அனைத்து தூதர்களின் முத்திரை)யின் நிழலாகவே நான் வந்துள்ளேன். நீங்கள் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் இந்த எளியவனுக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அடிபணிந்து, உண்மையான முஸ்லீம்களாக பௌதீக, ஒழுக்க மற்றும் ஆன்மீக ரீதியில் உங்களை வலுப்படுத்திக் கொள்ளவுமே இவை அனைத்தும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்ஷா-அல்லாஹ், ஆமீன்.

அல்லாஹ் உங்கள் அனைவர் மீதும் அருள் புரிவானாக!, மேலும் பூமியில் உங்களது இறுதி மூச்சு இருக்கும் வரை உங்களது நம்பிக்கையில் எப்போதும் வலுவாக இருக்கச் செய்வானாக! ஆமீன்.

(மொரீஷியஸை சார்ந்த ஹஸ்ரத் முஹை-யுத்-தீன் அல்-லீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் சாஹிப்(அலை) அவர்களால் 03 டிசம்பர் 2018 அன்று (25 ரபி உல் அவ்வல் 1440 AH) வரலாற்று சிறப்பு மிக்க நூருல் இஸ்லாம் பள்ளி வாசல், மாத்ரா (கேரளா, இந்தியா) வில் நிகழ்த்திய உரை.)