நபி மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வின் வாக்குறுதி

இந்தத் தலைப்பு மனிதகுலம் அனைத்திற்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கும் பொதுவாகவும், அனைத்து அஹ்மதிகளுக்கும் குறிப்பாகவும் உள்ள மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். நாம் சூரா அன்-நூர்(ஒளி)யை சரியாகப் படித்தால், அது உண்மையில் எல்லா மக்களுக்கும், குறிப்பாக அனைத்து முஸ்லிம்களுக்கும், அனைத்து அஹ்மதிகளுக்கும் ஒளியைத்தருகின்ற ஒரு சூரா-அத்தியாயம் ஆகும், ஏனெனில் அல்லாஹ்(சுப்ஹா) கூறுகின்றான்:

«வஃதல்லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வஅமிலுஸ்-ஸாலிஹாத்தி லயஸ்தஃக்லிஃபன்னஹும் ஃபில் அர்ளி கமஸ்தஃக்லஃபல்லதீன மின் கப்லிஹிம். »

"அல்லாஹ் உங்களுள் (அவனது ஏகத்துவத்திலும், அவனது தூதுச் செய்தியிலும்) நம்பிக்கைக் கொண்டு, நற்செயலாற்றுபவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரைக் கலீஃபாக்களாக்கியது போன்று இப்பூமியில் நிச்சயமாக கலீஃபாக்களாக்கி வைப்பதாகவும்... வாக்குறுதி அளித்துள்ளான்...” சூரா அல்-நூர் வசனம் 24 : 56,

ஆகவே, (எந்த) ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி, இது ஒரு அசாதாரண ஒளியை (வெளிச்சத்தை) அளிக்கின்றதொரு அத்தியாயமாகும், எனவே, நீங்கள் அதன் வசனங்களைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது நீங்கள் [அதன் தெளிவான அர்த்தங்கள் மற்றும் விளக்கங்களை] காணமுடியவில்லை என்றோ கூறிவிட முடியாது. ஹாரூன்(ஆரோன்), யஷூஆ(யோசுவா), தாவூத்(டேவிட்) மற்றும் சுலைமான் (சாலமன்) போன்றவர்களை [இறைவனின் சாந்தி இவர்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!] மூஸா[மோஸே(அலை)] அவர்களது சமூகத்திற்கு ஃகலீஃபாக்களாக அனுப்பியதைப் போலவே முஸ்லிம் சமூகத்திலும் அவன் தனது ஃகலீஃபாக்களை (பின்தோன்றல்களை) அனுப்புவான் என்பதை அல்லாஹ் (சுப்ஹா) நமக்கு(த் தெளிவாக்கிக்) காட்டுகிறான். மேலும் இந்த ஃகலீஃபாக்கள் புனித குர்ஆனிலும் கூட குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃகலீஃபாக்கள் அல்ல. ஆகவே, இந்த வசனம், இதற்கு முன்னர் தீர்க்கதரிசிகள் (தோன்றியபோதுக்) கொண்டிருந்த அதே பதவிகளுடன் ஃகலீஃபாக்கள் வருவார்கள் என்றுப் பொருள்படும்..

மிஷ்காத்தில் காணப்படும் ஒரு ஹதீஸில், ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் இந்த வசனத்தைத் தெளிவாக விளக்குகின்றார்கள், அதில் அவர்கள் கூறுகின்றார்கள்: [இது ஒரு நீண்ட ஹதீஸ் - நான் அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பிடுகிறேன்]: “தகூனுன்-நுபுவ்வத்து ஃபீகும் மாஷா அல்லாஹு… ஸும்ம தகூனுஃகலீஃபதுன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத ஸும்ம தகூன முல்கன் அஸ்ஸன்..... ஸும்ம தகூனூ அலா மின்ஹாஜின் நுபுவ்வத்தி ஸும்ம ஸகத.”

மொழிபெயர்ப்பு: அல்லாஹ் நாடுகின்றவரை நபித்துவம் உங்கள் மத்தியில் நிலைத்திருக்கும்; பின்னர் நுபுவ்வத்தின் அடிப்படையில் ஃகலீஃபாக்கள் தோன்றுவார்கள், பின்னர் அநீதி மற்றும் கொடுங்கோன்மையான அரசர்களின் ஆட்சி இருக்கும் ... பின்னர் நுபுவ்வத்தின் அடிப்படையில் [அதாவது நபிக்குப் பிறகு] மீண்டும் ஃகலீஃபாக்கள் வருவார்கள். பிறகு அமைதியாகிவிட்டார்கள். [அதாவது இந்த வார்த்தைகளுடன் அவர்கள் நிறுத்திவிட்டார்கள்]. (மஸாஹிருல் ஹக், தொகுதி. 4 பக். 26)

இந்த வசனம் மற்றும் ஹதீஸின் ஒளியில், புனிதக் குர்ஆனிலிருந்தும், நபிமார்களின் வரலாற்றிலிருந்தும் நாம் உணர்ந்துக் கொள்வது அல்லாஹ்(சுப்ஹா) ஒரு தூதரை உலகுக்கு அனுப்பும்போது, ஒரு செய்தியைக் கொண்டுவருவதும் பிறகு (அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கே) திரும்பிச் செல்வதும் அல்லாஹ்வின் நோக்கமல்ல..

மாறாக, ஒவ்வொரு தீர்க்கதரிசியின் வருகையுடனும் அல்லாஹ்வின் திட்டம் என்னவென்றால், இந்தத் தீர்க்கதரிசி ஒரு மாற்றத்தையும் புரட்சியையும் கொண்டுவருகின்றார். இந்த இலக்கை அடைவதற்குத் தொடர்ச்சியானதொரு அமைப்பு இருப்பது அவசியமாகும். ஏனென்றால் எவரும் என்றென்றும் வாழப்போவதில்லை; அல்லாஹ் அவரை விதைகளை விதைக்க மட்டுமே பயன்படுத்துகிறான். ஆகவே, இந்த விதைக்கு தண்ணீர் ஊற்றுவதற்கும், களைகளை அப்புறப்படுத்துவதற்கும், விலங்குகள் அல்லது பூச்சிகள் இந்த விதை மீது தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்கும் [அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வருகையில்] ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டும், இதனால் அது வளர்ந்து ஒரு செடியாக மாறுகிறது. அவன் அதனைப் பாதுகாக்க வேண்டும், அதன் காரணமாக அது வளர்ந்து அதன் கிளைகளை வெவ்வேறுத் திசைகளிலும் பரவச்செய்து, அங்கே அது கனிகளையும் தந்துவிடும். மீண்டும் அது கனிகளைத் தரத் தொடங்கும் போது, அதனை நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். கனி சுவையாக மாறுவதற்கு முன்பு, பல கட்டங்கள் உள்ளன, இந்தச் செடியானது கடந்துச் செல்லக்கூடிய சோதனைகளான சூறாவளிகள், வறட்சி போன்றவைகளும் உள்ளன. ஆகவே, நீங்கள் ஒரு விதையை நிலத்தில் விதைக்கும் போது, வேலை அத்துடன் முடிந்து விடாது என்பதையும் நீங்கள் காண்கிறீர்கள், ஆனாலும் செய்ய வேண்டிய வேலைகளில் தொடர்ச்சியானதொரு செயல்முறை உள்ளது.

நபித்துவம் அல்லது நுபுவ்வத் அமைப்பு (நீங்கள் இதனை மஸீஹ் என்றோ, கலிஃபத்துல்லாஹ் என்றோ அழைக்கலாம்), இது மனிதனால் அல்ல, அல்லாஹ்வினால் நிலைநாட்டப்பட்ட அமைப்பாகும் என்று திருக்குர்ஆனின் இஸ்திஃக்லாஃப் வசனத்தைப் பற்றியதொரு ஆய்வு நமக்கு எடுத்துக் காட்டுகின்றது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனிதன் அவனுடைய மனநிலையின் காரணமாக,அவன் தன்னை எல்லாவற்றையும் கற்றுக் கொண்டவனாகவும், அறிந்துக் கொண்டவனாகவும் நினைக்கின்றான். (இவ்வாறு) அவன் இறைஅருளின் கதவை மூடிக்கொண்டு, அல்லாஹ்(சுப்ஹா) அவனுக்கு வழங்கியுள்ள ஒளியை அணைத்துவிட முற்படுகிறான். அவன் தன்னைப் படைத்தவனைக் காட்டிலும் தான் மிகவும் கற்றுக்கொண்டவனாக பகிரங்கப்படுத்திக்கொள்கிறான், இறைதூதர்களின் வருகையின் கதவையும், இறைவெளிப்பாட்டின் கதவையும் அடைத்துவிட்டு, தானாகவே இருளில் தொலைந்து விடுகிறான், எல்லாப்பக்கங்களிலும் ஒளியின் கதவுகளை மூடிவிடும்போது, முழுமையான இருளில் வீழ்ந்து விடுகிறான்.

அல்லாஹ்(ஸுப்ஹா) ஓர் அருளுக்குரிய அமைப்பினை நிறுவி, தனது மகிழ்ச்சியின் வெளிப்பாடாகத் தன்னிடமிருந்துள்ள வெகுமதியாக அதனை நம்பிக்கையாளர்களுக்கு வழங்கி, அவன் அவர்கள் மீது திருப்திக்கொண்டுள்ளதை நிரூபிக்கும் விதமாக நம்பிக்கையாளர்களுக்கு அருளுக்குரியத் தலைமையைக் கொண்டுள்ள உன்னதமான அமைப்பை வெகுமதியாக வழங்கியிருக்க, முஸ்லிம்களின் நிலையோ இன்று இவ்வாறாக உள்ளது. அல்லாஹ், அவன் வாக்களித்திருக்கின்ற அத்தகையதொரு ஆன்மீகத் தலைமைத்துவ அமைப்பை ஏற்படுத்துகிறான், பின்னர் அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தன்னுடைய பிரதிநிதிகளைத் தேர்வு செய்கிறான்; தக்வா, நம்பிக்கை மற்றும் நற் செயல்களைச் செய்யக்கூடிய நம்பிக்கைகொண்ட சமூகத்திற்கு அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தில், அனுப்புகிறான். இவர்கள் அல்லாஹ்வுக்காக அனைத்தையும் தியாகம் செய்துத் தங்களைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்தும் பணிவான நம்பிக்கையாளர்கள் ஆவார்கள்.

ஆகவே, ஒரு ஃகலீஃபதுல்லாஹ் - அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு ஃகலீஃபா என்று நாம் கூறலாம். அவர் (அல்லாஹ்விடமிருந்து) இறை அறிவிப்பைப் பெற்றுக் கொண்டு, தன்னை அல்லாஹ்விடமிருந்து வந்தவர் என்ற பிரகடனம் செய்வது- நபித்துவத்தின் தொடர்ச்சியையும், அந்த ஒளியின் ஒரு முழுநிறைவான நிழலையும் குறிக்கின்றது. இந்த அம்சத்தில், நபித்துவ ஒளியினுடைய அருளின் முழு வடிவத்தையும், நபித்துவத்தின் இத்தகைய பிரதிபலிப்பில் காணமுடிகின்றது. உண்மையில் ஃகலீஃபத்துல்லாஹ் தான் நம்பிக்கை மற்றும் நற்செயல் செய்கின்ற நம்பிக்கையாளர்களின் சமூகத்திற்க்கு ஒரு சாட்சியாக விளங்குகின்றார்.

எனவே ஃகலீஃபத்துல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு ஒற்றுமை மற்றும் அமைதியின் பாடத்தை கற்பிக்கின்றார்.அவர் பிளவுகளை உருவாக்கவோ, புறக்கணிப்பை ஏற்படுத்தவோ, சகோதர சகோதரிகளின் இதயங்களில் வெறுப்பை உருவாக்கவோ, அல்லது குடும்ப உறவுகளை முறித்து விடாமல், எல்லா மக்களையும் ஒன்றிணைப்பதற்காகவே இருக்கின்றார். அதற்கு மாறாக, ஒரு ஃகலீஃபத்துல்லாஹ் அனைவரையும் அவர்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளையும், நம்மிடையேயுள்ள வேறுபாடுகளையும் மறந்துவிடுமாறு அழைக்கின்றார், அங்கு நாம் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறோம் (அல்லாஹ்வின் கயிறு என்பது ஷஹாதா: லா இலாஹா இல்லல்லாஹ்வாகும்), நாம் இந்த ஆன்மீகக்கயிற்றால் இணைந்துவிடுகிறோம், அனைவரும் ஒன்றிணைந்து, அங்கே நாம் ஒரே உடலாக மாறிவிடுகிறோம். அந்த நேரத்தில், இந்த உடலின் ஒரு பகுதி துன்பப்படும்போது, முழு உடலும் பாதிப்படையும். இதையே எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் நமக்குப் புரிய வைத்திருக்கின்றார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் கயிற்றில் நம்மை இணைத்துக் கொள்வோம், அந்த சமயத்தில் நாம் முழு உம்மத்துடன் ஒற்றுமையிலும், அன்பிலும் பிணைக்கப்பட்டுள்ளதைக் காண்போம். மேலும் இன்ஷா-அல்லாஹ். உம்மத்தின் தலைமையில் ஒரு ஃகலீஃபத்துல்லாவுடன் உறுதிமிக்க அடித்தளத்திற்க்குள் நாம் வந்துவிடுவோம். அங்கே எவ்விதமான புறக்கணிப்போ, வாக்குவாதமோ, போரோ இடம்பெறாது. நமது சகோதர சகோதரிகளின் இரத்தம் சிந்தப்பட்டு கொல்லப்படுதலும் இடம்பெறாது, நாம் குடும்ப உறவுகளை முறித்துக் கொள்ளவோ அல்லது வெறுப்பு போன்றவைகளோ இருக்காது. அந்த நேரத்தில், நாம் சப்தமாகவும், தெளிவாகவும் சொல்ல முடியும் [அதாவது இந்த தக்வாவின் விதை, மற்றும் ஷஹாதா - இந்த உறுதியான நம்பிக்கை] நம் இதயத்தில் நடப்பட்டது, அதன் வேர்கள் வளர்ந்து இதயத்திற்குள் ஆழமாக ஊடுருவி, பின்னர் அங்கிருந்து [இம்முழக்கம்] வருகின்றது: “அனைவரிடத்தும் அன்பு; எவரிடத்தும் பகை இல்லை”. அந்த சமயத்தில், பள்ளிவாசல்களில் இந்த சொற்களைக் கொண்டு பெரிய விளம்பரப் பலகைகள்(சைன்போர்டுகள்), டீ ஷர்ட்டுகள் மற்றும், ஸ்டிக்கர் போன்றவற்றிலும் (அவ்வாறு) வைக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. ஆனால் இந்த முழக்கம், இந்த வார்த்தைகள் இதயத்தில் இடம்பெற்றிருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறு இருப்பதில்லை. நீங்கள் மக்களின் முன் வைப்பதற்க்கு நேர்மாற்றமாக இதயம் கூறுகின்றது. இந்த [நற்செயல்களை] மக்களிடம் காண்பிப்பதற்காகவும், அவர்களை திருப்திப் படுத்துவதற்காகவும் செய்யாதீர்கள், ஆனால் உங்களை படைத்தவனை மகிழ்விப்பதற்காக, அல்லாஹ்வுக்காக மட்டுமே நல்ல செயல்களைச் செய்யுங்கள், அப்போதுதான் அல்லாஹ் (ஸுப்ஹா) அவன் தேர்ந்தெடுத்தவரின் வருகையின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் ஆன்மீக அருளைப் பெறக்கூடியவர்களாக உங்களுக்கு வெகுமதி அளிப்பான், மேலும் உங்களைத் தூய்மைப்படுத்த ஆன்மீக மழை வானத்திலிருந்து இறங்கும். இன்ஷா அல்லாஹ்.

நேரம் இல்லாததால், இந்தச் சொற்பொழிவின் தலைப்பை அடுத்த வாரமும் தொடருவேன். இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் முஸ்லிம்களின் இதயங்களைத் திறந்து இந்தச் செய்தியைப் புரிந்து கொள்ளவைப்பானாக! இன்ஷா-அல்லாஹ், ஆமீன்.