சென்ற நூற்றாண்டில் தோன்றிய மஸீஹ்(அலை) அவர்களின் அழகிய போதனை!

நீங்கள் பெரியவர்களாயிருந்தால் சிறியவர்களிடம் அன்பைக் காட்டவேண்டுமே ஒழிய அவர்களை ஏளனம் செய்யக்கூடாது. நீங்கள் அறிவாளிகாக இருந்தால் அறிவீனர்களுக்கு அறிவூட்ட வேண்டுமே ஒழிய அவர்களை அவமதிக்க கூடாது. நீங்கள் பணம் படைத்தவர்களாக இருந்தால் ஏழை எளியவர்களுக்கு உதவிட வேண்டுமேயொழிய தற்பெருமை கொண்டு அவர்களை இழிவுபடுத்தக் கூடாது. நாசத்தின் வழியைக் கண்டு பயப்படுங்கள். இறைவனுக்கு அஞ்சி அவனை வழிபட்டு வாருங்கள். படைப்பினங்களை வணங்காதீர்கள். எல்லாம்வல்ல இறைவனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். உலகின்மீது மிகுந்த பற்று கொண்டு விடாதீர்கள். இறைவனுக்காக வாழுங்கள். அவனுக்காகவே ஆகிவிடுங்கள். அவனுக்காக, பாவங்களையும் அசுத்தமானவற்றையும் வெறுத்து ஒதுக்குங்கள். ஏனெனில், இறைவன் தூய்மையானவனாக இருக்கின்றான். நீங்கள் இறைபக்தியுள்ளவர்களாக இரவைக் கழித்ததாக ஒவ்வொரு பகலும் நீங்கள் இறைவனுக்கு அஞ்சியே பகலைக் கழித்ததாக ஒவ்வொரு இரவும் சான்று கூறட்டும். பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையைப்போல் மறைந்துவிடும் இவ்வுலகத்தின் சாபத்தைக்கண்டு பயப்படாதீர்கள். ஏனென்றால் அதற்குப் பகலை இரவாக்க முடியாது. வானத்திலிருந்து இறங்கும் இறைவனுடைய சாபத்திற்கே நீங்கள் அஞ்ச வேண்டும். அந்தச் சாபம் யார்மீது விழுமோ அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமே ஏற்படும். வெறும் வெளிவேஷத்தால் உங்களால் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலாது. ஏனெனில் உங்களுடைய இறைவனின் பார்வை மனிதனின் அடிமட்டம்வரை ஊடுருவிச் செல்லக்கூடியது. உங்களால் இறைவனை ஏமாற்றிவிட இயலுமா? எனவே நீங்கள் நேர்மையாளர்களாக வாழுங்கள்! தூய்மையாளர்களாக விளங்குங்கள்! ஓர் அணுவளவாவது இருள் உங்களிடத்திலே இருந்தால் உங்களுடைய ஒளியனைத்தையும் தொலைத்துவிடும். உங்களில் எள்ளளவாவது கர்வம்,சுயநலம்,சோம்பெறித்தனம்,வெளிவேஷம் ஆகியன இருந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டீர்கள். சில விஷயங்களை மட்டும் செய்துவிட்டு நாங்கள் செய்ய வேண்டியதையெல்லாம் செய்துவிட்டோம் என்று நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் ஒரு முழுமையான ஆன்மீக மாற்றம் உங்களிடத்திலே ஏற்பட வேண்டுமென்றே இறைவன் விரும்புகின்றான். அதற்குபிறகு அவன் உங்களை வாழவைப்பான். நீங்கள் ஒருவரோடொருவர் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சகோதரருடைய குற்றத்தை மன்னியுங்கள்! தன்னுடைய சகோதரனுடன் சமாதானமாக வாழவிரும்பாத மனிதன் துஷ்டனாக இருக்கின்றான். வேற்றுமைகளை ஏற்படுத்துகின்ற மனிதன் வெட்டுண்டு போவான். உங்களுடைய மனவிகாரங்களை ஒழித்துக்கட்டுங்கள். ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாதீர்கள். நீங்கள் உண்மையாளராக இருந்தாலும் உங்களை அடிமட்டத்தில் உள்ளவராகவே எண்ணிக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். தற்பெருமையையும் அகங்காரத்தையும் விட்டுவிடுங்கள். நீங்கள் அழைக்கப்படவிருக்கின்ற வாசல் வழியாக தற்பெருமையுள்ளவனும் அகங்காரம் கொண்டவனும் நுழையவே முடியாது. இறைவன் புறமிருந்து வெளியாகி என்னால் கூறப்பட்ட இவ்வசனங்களை ஏற்றுக் கொள்ளாத மனிதன் பேறிழந்தவனாக இருக்கிறான். விண்ணில் இறைவன் உங்களை நேசிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் ஒரே வயிற்றில் பிறந்த இரு சகோதரர்களைப் போல் ஆகிவிடுங்கள். உங்களிடையே கண்ணியத்திற்குரியவர் தன்னுடைய சகோதரனின் தவறுகளை மன்னிக்கிறவரேயாவார். பிடிவாதம் கொண்டு அவ்வாறு மன்னிக்கத் தவறுகின்றவர் பாக்கியமற்றவர்கள். அத்தகையவரோடு எனக்கு எவ்வித உறவுமில்லை. இறைவனுடைய சாபத்திற்கு மிகமிக அஞ்சுங்கள். ஏனெனில் அவன் தூய்மையானவனும் அன்புடையோனுமாக இருக்கின்றான். மோசமான விளைவை ஏற்படுத்துகின்ற கெட்ட குணங்களுள்ள ஒருவனால் இறைவனை அணுக இயலாது. அகம்பாவமும் கர்வமும் நிறைந்த ஒருவனால் அவனை அடையவே முடியாது. அநியாயக்காரனால் அவனை அணுக முடியாது. நம்பிக்கைத் துரோகியாலும் அவனை நெருங்க முடியாது. அவனுடைய திருநாமங்களை உணர்ந்து பயபக்தியாக நடக்காதவன் அவனை ஒருபோதும் நெருங்க முடியாது. உலகின் மீது நாய்களைப் போலவும் எறும்புகளைப் போலவும் கழுகுகளைப் போலவும் விழுகின்றவர்களும் உலக சுகபோகங்களில் மூழ்கியிருப்பவர்களும் இறைவனின் திருச்சன்னதியை அடைதல் என்பது அறவே சாத்தியமற்றதொன்று! தூய்மையற்ற ஒவ்வொரு கண்ணும் அவனைவிட்டும் வெகுதூரம் அகன்று போனதாகும். தூய்மையற்ற எந்த உள்ளமும் அவனை அறியாது. எவர் இறைவனுக்காக நெருப்பில் வீழ்வாரோ அவர் அதிலிருந்து காப்பாற்றப்படுவார். எவர் இறைவனுக்காக அழுவாரோ அவரே பிறகு சிரிப்பவராக மாறுவார். எவர் அவனுக்காக உலகிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வாரோ அவருக்கு அவ்வுலகம் கிடைக்கும். நீங்கள் உளப்பூர்வமாக, தூய்மையாக, தீவிரமாக இறைவனுடன் நட்பு கொள்வீர்களாயின் அவனும் உங்களுடைய நண்பனாக ஆகிவிடுவான். உங்கள் மனைவிமார்கள் மீதும் உங்களுடைய ஏழைச் சகோதரர்கள் மீதும் நீங்கள் கருணை காட்டுங்கள். அப்போதுதான் வானத்தில் உங்களுக்கு கருணை காட்டப்படும். உண்மையாகவே நீங்கள் இறைவனுக்காக ஆகிவிடுவதென்றால் இறைவனும் உங்களுக்காக ஆகிவிடுவான். இவ்வுலகு ஆயிரக்கணக்கான ஆபத்துகள் நிறைந்த இடமாக இருக்கிறது. பிளேக் என்னும் கொடிய நோய் அந்த ஆபத்துகளில் ஒன்றாகும். நீங்கள் உளப்பூர்வமான இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருங்கள். அப்போதுதான் இந்த ஆபத்துக்களை இறைவன் உங்களிடமிருந்து அகலச் செய்வான. வானத்திலிருந்து ஆணை பிறக்காமல் பூமியில் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. வானத்திலிருந்து கருணை இறங்காமல் பூமியில் ஏற்பட்ட ஆபத்து நீங்குவதுமில்லை. எனவே கிளையை பிடிக்காமல் ஆணிவேரைப் பற்றிப்பிடிப்பதுவே புத்திசாலித்தனமாகும்.

(நூல்: கிஸ்திநூஹ்)