கேள்வி :இஸ்லாமிய கடமைகள் யாவை? தொடர் -4

வாக்களிக்கபட்ட மஸீஹ் (அலை) கூறுகின்றார்கள் :-

ஆன்மீக நெருப்பால் நம்முடைய கீழ்த்தரமான வாழ்க்கையை தீட்டு கொளுத்தி விட்டு நம்முடைய பொய் தெய்வங்களை எரித்துப் பொசுக்கிவிட்டு (ஆன்மீக அர்த்தத்தில்), உண்மையானதும் தூய்மையானதுமான இறைவனின் சந்நிதியில் நம்முடைய உடல், பொருள், ஆவி கௌரவம் அனைத்தையும் தியாகம் செய்வதே ஆகும். இதனுள் நுழையும் நாம் ஒருவகை புதிய வாழ்வின் பானத்தை அருந்துகிறோம். நமது அனைத்து ஆன்மீக சக்திகளும் இயல்புகளும் நெருங்கிய உறவுகளுக்கிடையில் நிலவும் நேசத்தை ஒத்த ஒரு "உறவினை இறைவனுடன் கொண்டுள்ளன" அப்போது மின் ஒளியைபோன்ற ஒரு தீச்சுடர் நம்முடைய உள்ளத்திலிருந்து வெளியாகின்றது அப்போது மற்றொரு தீச்சுடர் "மேலிலிருந்து நமக்கு இறங்குகின்றது" இவ்விரு தீச்சுடர்களும் ஒன்றாக இணைந்தால் நம்முடைய எல்லா உலக இச்சைகளும் "இறைவனைத்தவிர" பொருட்களின் மீதுள்ள நமது நேசமும் தீய்ந்து "பஸ்பமாக" மாறிவிடுகின்றன. அதாவது நமது கடந்தகால வாழ்க்கை செயல் முறைகள் யாவும் அழிந்து போகின்றன இவ்வாறு நம்முடைய வாழ்வில் "ஒரு மரணம் ஏற்படுகின்றது" இந்த நிலைக்குத்தான் திருக்குர்ஆன் "இஸ்லாம்" என்று பெயர் சூட்டியுள்ளது

இந்நிலையை அடைந்த ஒரு அடியான் நன்கு "பழுத்த கனி" ஒன்று தானாகவே மரத்திலிருந்து கீழே விழுவது போன்று கீழான உலக இச்சைகள் யாவும் உதிர்ந்து விடுகின்றன. இறைவனுக்கும் அவனுக்குமுள்ள தொடர்பு ஆழமானதாக ஆகிவிடுவதால் மற்ற எல்லா படைப்பினங்களிலிருந்தும் தூர விலக்கப்பட்டவன் ஆகின்றான். "இறைவனுடன் உரையாடுவதாலும்" அவனிடமிருந்து போதனையைம் பெறுவதாலும் அவன் அருளுக்குரியவன் ஆகின்றான். இம்மாபெரும் பதவியை அடைவதற்கான வாசல் "முந்தைய காலத்தைப் போன்றே இன்றும் திறந்து கிடக்கின்றது" .இறைவனை உளப்பூர்வமாக தேடிக் கொண்டிருப்போருக்கு முன்பு போன்றே தற்போதும் இறையருள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது ஆனால் இவ்வழியை வெறும் *பொய் பேச்சினால் அடைத்துவிட முடியாது தேவையற்ற அகங்கார சொற்களால் அக்கதவை திறக்க முடியாது. இதனை அடைய விரும்புவோர்கள் ஏராளமானவர்கள் என்றால் இதனை பெற்றுக் கொள்பவர்கள் "ஒரு சிலரே".

இதைத்தான் திருகுரான் கூறும்போது

173. یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُلُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا رَزَقۡنٰکُمۡ وَ اشۡکُرُوۡا لِلّٰہِ اِنۡ کُنۡتُمۡ اِیَّاہُ تَعۡبُدُوۡنَ ﴿ ﴾

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு வழங்கியுள்ள தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். மேலும், நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகின்றீர்கள் என்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்.

187. وَ اِذَا سَاَلَکَ عِبَادِیۡ عَنِّیۡ فَاِنِّیۡ قَرِیۡبٌ ؕ اُجِیۡبُ دَعۡوَۃَ الدَّاعِ اِذَا دَعَانِ ۙ فَلۡیَسۡتَجِیۡبُوۡا لِیۡ وَ لۡیُؤۡمِنُوۡا بِیۡ لَعَلَّہُمۡ یَرۡشُدُوۡنَ ﴿ ﴾

(தூதரே!) என் அடியார்கள் உம்மிடம் என்னைப் பற்றிக் கேட்டால், நான் அருகில் இருக்கின்றேன்; பிரார்த்தனை செய்கிறவர் என்னை அழைக்கின்றபோது, நான் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கிறேன். எனவே, அவர்களும் எனது கட்டளையினை ஏற்றுக் கொண்டு என்னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள் (என்று பதில் அளிப்பீராக) (2:187)

எனவே இறைவனுடன் முழு அளவில் உறவினை ஏற்படுத்துவதற்கான வழி "இஸ்லாமே" ஆகும். இதன் பொருள் முதலாவதாக இறைவனின் வழியில் மனிதன் தன் முழு வாழ்வையும் அர்ப்பணம் செய்து அவனுக்கே முழு அளவில் அடி பணிந்து நடப்பதுடன் திருக்குர்ஆனில் தோற்றுவாயான சூரா ஃபாத்திஹாவில் முஸ்லிம்களுக்கு கற்றுத் தரப் பட்டுள்ள பிரார்த்தனையில் ஈடுபடுவதே ஆகும். முழு இஸ்லாத்தின் சாரமும் இவ்விரு காரியத்திலேயே அடங்கியுள்ளது. இதுவே உண்மையான இரட்சிப்பின் பானத்தை அருந்துவதற்கு உள்ள வழியாகும்.

ஆன்மீக தாகம் கொண்ட தனது உள்ளம் "இறைவனின் இனிய ஒலியை நேரிடையாக" கேட்டு பேரானந்தம் பெற வேண்டும் என்ற ஆவல் கொள்ள மாட்டார்களா? இறைவனுக்காக முழு உலகையும் விட்டு விலகி தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவழியில் தியாகம் செய்து தன்னையே இறைவனுக்காக அர்பணிக்கின்ற ஒருவன் இந்த ஒளிமிக்க உண்மையான சூரியனைப் தன் கண்ணால் காண முடியுமானால் மங்கிய ஒளியில் நின்று மரணமடைந்து விடுவதை விரும்புவானா? உயிருள்ள இறைவன் "அனல் மவ்ஜூத்" நான் இருக்கின்றேன் என நேரடியாக கூறும் போது தான் ஒருவனுக்கு உண்மையான இறை ஞானம் கிடைக்கும் என்பது உண்மை அல்லவா? இறைவனை பற்றி கூறும் விஷயத்தை எல்லாம் ஒரு பக்கமும்; நான் இருக்கின்றேன் என்று கூறும் "இறைவனின் தெளிவான குரலை மறுபுறத்திலும் வைத்துப் பார்த்தால்" மற்றவையெல்லாம் இறைவனின் குரலுக்கு முன்னால் சுத்த சூனியமாய்ப் போய்விடுகின்றன.

اِہۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ۙ﴿ ﴾

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ ٪﴿ ﴾

உன் கோபத்திற்கு ஆளானவர்கள், வழிதவறியவர்கள் ஆகியோரின் வழியில் அல்லாமல் நீ அருள் புரிந்தவர்களின் வழியில் (நீ எங்களை நடத்துவாயாக) (1:6-7)

திருக்குர்ஆனில் தோற்றுவாயான சூரத்துல் ஃபாத்திஹாவில் உள்ள இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடும் "அருள்" என்பதன் பொருள் "இல்ஹாம்" மற்றும் கஷ்ஃப் போன்ற இறைஞானமே ஆகும்.

எனவே சகோதர்களே! இஸ்லாத்தில் உண்மையான அர்த்ததையும் நம்மிடையே இறைவனின் மாபெரும் அருளாக தோன்றும் நபிமார்களின் வருகையில் பொதிந்துள்ள ரகசியத்தையும் புரிந்துகொண்டால் இஸ்லாத்தின் கடமையை ஆன்மிகரீதியாக அறிந்துகொண்டு நமது அமல்களை (தொழுகை, சகாத், ஹஜ், ஹிக்மதே கல்க்.) அழகிய முறையில் இறைவனின் திருப்தியை பெற்று இறைஇரட்சிப்பை இன்ஷாஅல்லாஹ் பெறலாம் -

தொடரும் இன்ஷாஅல்லாஹ்

ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் பத்திரிகை குழுமம்