கலீஃபத்துல்லாஹ்வின் அறிவிப்புகள்

எனது அன்பிற்குரிய ஸஹாபிகளுக்கும், உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம் உம்மத்திற்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ,

மிகுந்த கவலையுடனும் ஆழ்ந்த மனவேதனையுடனும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் நிலைமையை நான் உற்றுநோக்குகிறேன். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மற்றும் லெபனான் போன்ற வளைகுடா நாடுகள் முழுவதும் தாக்குதல்கள் பரவி வருவதாக வரும் செய்திகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு குண்டுவெடிப்பும், ஒவ்வொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையும், விரோதப் போக்கின் ஒவ்வொரு வளர்ச்சியும், தங்களது குடும்பங்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் மட்டுமே விரும்பக்கூடிய அப்பாவி மக்களிடம் அச்சத்தையும், உறுதியற்ற தன்மையையும், துயரத்தையுமே கொண்டு வருகின்றன.

நடப்பு ஆண்டானது, தீவிரமடைந்து வரும் இடர்ப்பாடுகளையும் உலகளாவிய உறுதியற்ற சூழலையும் அடையாளப்படுத்துவதாகத் தெரிகிறது. எனது முந்தைய வெள்ளிக்கிழமை உரைகளிலும், இறைவெளிப்பாடுகளிலும் நான் ஏற்கனவே எச்சரித்தபடி, உலகமானது கடுமையான சோதனை மற்றும் கொந்தளிப்பான

ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில்,

ஆயுதமேந்திய மோதல்களும், அரசியல் பதற்றங்களும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. போர்கள் தொடர்ந்து வெடிக்கின்றன அல்லது தீவிரமடைந்து

வருகின்றன; இவை நகரங்களை அழித்து, குடும்பங்களை இடம்பெயரச் செய்து, அளவிட முடியாத மனிதத் துயரங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள் போர்க்களத்தோடு மட்டுமே நின்றுவிடாமல் - வீடுகள், பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த சமூகங்கள் வரையில் நீண்டு, ஆழமான மற்றும் நீடித்த வடுக்களை விட்டுச் செல்கின்றன.

ஆனால், இந்தச் சூழலை இன்னும் வேதனைக்குரியதாக மாற்றுவது எதுவென்றால், முஸ்லிம் உம்மத் ஒன்றிணைந்து நிற்பதற்குப் பதிலாக ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்புவதைக் காண்பதுதான்! உள்நாட்டுப் பிளவுகள், அரசியல் போட்டிகள் மற்றும் பிரிவினைவாத வேறுபாடுகள் போன்றவை ஒற்றுமையால் ஏற்படும் பலத்தை பலவீனப்படுத்திவிடுகின்றன. முஸ்லிம் நாடுகள் பிளவுபடும்போது, வெளிப்புறசக்திகள் பெரும் செல்வாக்கைச் செலுத்த முடிகிறது; அத்துடன் அவர்கள் பிராந்திய மக்களின் நலனைக் காட்டிலும், தங்களது தனிப்பட்ட திட்டமிட்ட லாபங்களுக்கு ஏற்றவாறு மோதல்களை வடிவமைக்கின்றார்கள். இது உறுதியற்றத் தன்மையை ஆழமாக்கி, துயரங்களை (மேலும்) நீட்டிக்கச் செய்கிறது.

ஒற்றுமையின்மையானது உம்மத்தை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பலவீனமான நிலைக்கு தள்ளி விடுகிறது.  வளங்களை வளர்ச்சி, கல்வி மற்றும் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஆற்றல் முழுவதும் மோதல்களுக்கும் சண்டைகளுக்குமே செலவிடப்படுகிறது. இந்த சிதறுண்ட நிலை (பிளவு)கள் நாடுகளைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், (ஒட்டுமொத்த) முஸ்லிம் உலகின் கூட்டு கண்ணியத்தையும், வலிமையையும் சீர்குலைத்துவிடுகின்றன.

இத்தகைய நேரத்தில், நேர்மையான (ஆழ்ந்த) சுயப்பரிசோதனை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

உண்மையான வலிமை ஒற்றுமையின் மூலமே கிடைக்கிறது — அது நீதி, ஞானம் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒற்றுமையாகும்.

ஒற்றுமை இல்லாமலும், கொள்கைப் பிடிப்பும் நீதியான தலைமைத்துவமும் இல்லாமலும், மனிதகுலத்தின் சீர்திருத்தத்திற்காக அல்லாஹ் அனுப்பிய 'தேர்ந்தெடுக்கப்பட்டவரை' (The Chosen One) அங்கீகரித்து ஏற்காமலும் போனால், மோதல்கள் முடிவின்றித் தொடர்ந்து கொண்டே செல்லும். மக்கள் இறைவழிகாட்டுதலைப் (Divine Guidance) புறக்கணித்து விட்டு, தொடர்ந்து பிளவுபட்டுக் கொண்டே இருக்கும்போது, வன்முறைச் சுழற்சி மீண்டும் மீண்டும் நிகழ்கிறது; இதில் எப்போதும் அப்பாவி உயிர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.

நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சம்பவங்கள் மனிதகுலம் முழுமைக்குமான ஒரு கடுமையான எச்சரிக்கையாகக் கருதப்பட வேண்டும். உலகம் ஒரு மிகப்பெரிய சோதனை மற்றும் கஷ்டமான காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் போர்களும், மோதல்களும் அதிகரித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அதே நேரத்தில், இந்த ஆண்டில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் மற்றும் பிற இயற்கை பேரிடர்களும் அடிக்கடி நிகழும். கண்ணுக்குத் தெரிந்த இந்த நெருக்கடிகளுடன், கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தல்களான கொடிய வைரஸ்களும் தொடர்ந்து பரவி, பல உயிர்களைப் பறித்து, அச்சத்தையும் உறுதியற்றத் தன்மையையும் உருவாக்கும்.

இவை அனைத்தும் நமது நேசத்திற்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழங்கிய எச்சரிக்கைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. குழப்பங்கள் (ஃபித்னா) பரவலாகும், மோதல்கள் தீவிரமடையும் மற்றும் துயரங்கள் உலகின் பல பகுதிகளையும் பாதிக்கும் ஒரு காலத்தைப் பற்றி அன்னார் குறிப்பிட்டார்கள்.

எவ்வாறாயினும், நாம் கவனக்குறைவாகவோ அல்லது விழிப்புணர்வற்றோ இருந்து விடக்கூடாது என்பதுத் தெளிவாகிறது. இது உலக விவகாரங்களில் மட்டுமல்ல, அத்துடன் நமது ஆன்மீக வாழ்விலும் கூட விழிப்புடன் இருக்க வேண்டிய ஒரு தருணம் ஆகும்.இந்த நிகழ்வுகளானது நம்மைச் சிந்திக்கச் செய்வதற்கும், பாவமன்னிப்புத் தேடுவதற்கும், ஈமான் (நம்பிக்கை), நேர்மை மற்றும் ஒற்றுமையின் பக்கம் திரும்புவதற்கும், அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப்பிடித்துக்கொள்வதன் பக்கமும் நம்மை அழைக்கின்றன.

ஆகவே, உலக அதிகாரங்கள் என்பது தற்காலிகமானவையே என்பதை நாம் நினைவில் கொள்வோம். நாடுகள் உயரும்,வீழும், கூட்டணிகள் மாறும், ஆனால் அல்லாஹ்வின் கட்டளையே அனைத்திற்கும் மேலாக மேலோங்கி நிற்கும்- வெற்றிகொள்ளும். இத்தகைய நிச்சயமற்ற நேரங்களில், நமது புகலிடம் அவன் மட்டுமே-

அவனிடத்திலேயே நாம் தஞ்சமடைய வேண்டும். அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தினர் அனைவரையும் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் தீங்கிலிருந்து பாதுகாப்பானாக! உலகத் தலைவர்களுக்கு ஞானத்தையும் நிதானத்தையும் வழங்கி நேர்வழி காட்டுவானாக! மேலும் மனிதகுலத்தை மேலதிக அழிவிலிருந்தும் இழப்பிலிருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்.

ஆகவே, நாம் நமது ஈமானை வலுப்படுத்த வேண்டும், நமது பிரார்த்தனைகளை அதிகப்படுத்த வேண்டும், பாவமன்னிப்புத் தேட வேண்டும், தர்மம் செய்ய வேண்டும், நீதி மற்றும் கருணையில் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். வெறுப்பையோ அல்லது தவறான தகவல்களையோ பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்; அதற்குப் பதிலாக அமைதிக்காகவும், (நாடுகளின்) தலைவர்களுக்கிடையே ஞானம் மற்றும் நிதானம் நிலவுவதற்கும், எங்கும் உள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்பிற்காகவும் உண்மையாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆமீன் ஸும்ம ஆமீன்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்,
வஸ்ஸலாம்
அல்லாஹ் ஹாஃபிஸ்.