கிலாஃபதுன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - விளக்கம்

"கிலாஃபத்ன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத்" என்று கூறி பெருமானார்(ஸல்) அவர்கள் அமைதி ஆகி விட்டார்கள்" என்பதற்கான உண்மை விளக்கம்:

இன்னும், இந்த முல்லாக்கள் கட்டவிழ்க்கும் மற்றுமொரு சுயவிளக்கம் என்னவென்றால்; இந்த நபிமொழிக்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் அமைதியாகிவிட்டார்கள். எனவே, இதற்கு பிறகு இந்த கிலாஃபத் (கலீஃபத்துர் ரஸுல்) தான் தொடரும் என்ற கற்பனையை அப்பாவி மக்களிடையே பரப்புகின்றனர். இதற்கு மாறாக, நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இது ஒரு முடிவல்ல தொடர் என்பதையே இந்த நபிமொழியில் உணர்த்துகின்றார்கள். அது எங்ஙனம்? இந்த நிஜாமிகளின் கூற்றை போல் அன்னார் ஒருபோதும் இறுதி நபிக்கொள்கையை போதிக்கவில்லை. (நஊதுபில்லாஹி மின் தாலிக்)

இக்கூற்றை இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள அல்லாஹ் தனது இறைவேதத்தில் இவ்வாறு கூறுகின்றான்:-

அல்லாஹ் மேகத்திலிருந்து தண்ணீரை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான். பின்னர் அவன் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட புற்பூண்டை வெளிப்படுத்துகின்றான். பிறகு அது உலர்ந்து விடுகிறது. பின்னர் அது மஞ்சள் நிறமாவதை நீர் காண்கின்றீர். பின்னர் அவன் அதனைப் பதராக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நற்போதனை இருக்கிறது. (திருக்குர்ஆன் 39: 22)

இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது(ரலி) அவர்கள் கூறுகின்ற விளக்கம் என்னவென்றால், பூமியானது ஆன்மீக ரீதியாக வறட்சியடைந்து விடும்போது, இறைவன் இறை வஹீயின் வடிவத்தில் மழையை இறக்குகிறான். பின்னர் அ(ந்த பூமியான)து ஒரு புதிய வாழ்க்கையைப் பெற்று, பல்வேறு நிறங்களையும், சுவைகளையும், தனித்துவ குணங்களையும் கொண்ட பூக்களும், பழங்களும், வளர்ச்சியடைகின்றன.

அதாவது, ஓர் ஆன்மீக சீர்திருத்தவாதி (முஜத்தித்) தோன்றுகின்ற போது, நற்குணம் கொண்ட மற்றும் இறைவனுக்கு அஞ்சுகின்ற மனிதர்களின் சமூகம் பிறக்கின்றது. மேலும், பயபக்தியுள்ள மற்றும் கற்றறிந்த ‘உலமா’ (மார்க்க அறிஞர்களுக்குக்கூட) இறைவனுடைய வார்த்தையை அவர் கற்பிக்கின்றார். பிறகு ஒரு நீண்ட இடைவெளி (ஏற்பட்டு அதனால்) இறைவனுடைய வார்த்தை மறக்கப்பட்டும், அவனுடைய கட்டளைகள் மீறப்பட்டும், கீழ்ப்படியாமையும் உருவாகி விடுகின்றது. அப்போது மீண்டும், பூமியானது வறண்டு, காய்ந்து போய், ஒரு நெருப்பில் எறியப்படுவதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கக்கூடிய உலர்ந்த எரிபொருளைப் போன்ற தீய மனிதர்களின் ஒரு தலைமுறையானது மீண்டும் உருவாகி, நல்ல மனிதர்களின் இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது. இவ்வாறாக இந்த சுழற்சி செல்கின்றது. (அதாவது மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றது)

இறைவன் மிகத்தெளிவாக ஆன்மீக வறட்சி ஏற்படும்போது, அவன் தனது அருள் மழையை வஹீயின் மூலம் தனது ஆன்மீக சீர்த்திருத்தவாதியின் மீது இறக்கி மீண்டும் பூமியில் ஆன்மீக வசந்த காலத்தை உருவாக்குகின்றான். சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் இந்த நிகழ்வு ஏற்படுகின்றது.. அதாவது, இது ஒரு சுழற்சியாகும். மேலும், இந்த இடத்தில் அல்லாஹ் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இது ஒரு சுழற்சியாகும் இதே நிகழ்வு தான் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்கள் கிலாஃபத்தே ரஸூலின் காலத்தை பற்றி கூறும்போது ஒரு நபிக்கும் அவருக்கு பின் தோன்றும் நபிக்கும் இடையில் இந்த கிலாஃபத்தே ரஸூலின் நிலையை பற்றி முஸ்னத் அஹ்மதில் தொகுக்கப்பட்ட ஹதீஸீல் அன்னார் மௌனமாகி விட்டார்கள் என்று வருகின்றது. ஏனென்றால், இதுவும் ஒரு சுழற்சியாகும். இந்த நபிமொழி நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் ஒவ்வொரு நுபுவத்திற்கும் நிகழக் கூடியதாகும்.

மேலும், இந்த நபிமொழியின் உண்மை வடிவமே இந்த நூற்றாண்டில் அல்லாஹ்வின் பெரும் கருணையாக வெளிப்பட்டுள்ளது. அதாவது, இந்த நபிமொழி உம்மத்தே முஹ்மதிய்யாவில் தோன்றும் ஒரு நபிக்கும் அடுத்து வரும் நபிக்கும் இடையிலான கிலாஃபத்தின் நிலை என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். அவ்வாறில்லை என்றால் மற்ற பிரிவு முஸ்லிம்கள் போல் இறுதிநபி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அபாய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் தெரிந்து கொண்டாம்.

மேலும், ”எனக்கும் மஸீஹிக்கும் இடையே நபியில்லை” என்ற நபிமொழிக்கேற்ப நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் மஸீஹ் மட்டுமே நபி என்ற அந்தஸ்தை பெறுகின்றார். இன்னும் மூஸா(அலை) அவர்களின் கிலாஃபத் மஸீஹ் உடன் முடிவடைந்து விட்டது. ஆனால், நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமை அதாவது கிலாஃபத் மறுமைவரை தொடரக்கூடியதாகும். எனவே, அன்னாரின் உம்மத்தில் இறுதியாக தோன்றக்கூடிய கலீஃபாவான மஸீஹ் இருக்கின்றார். இந்த இடத்தில் மிக குறிப்பாக நாம் அறியவேண்டியது என்னவென்றால் உம்மத்தே முஹம்மதிய்யாவில் மஸீஹ் ஒருவர் என்றால் அது மூஸா(அலை) அவர்களின் கிலாஃபத்தை போல் முற்று பெற்றுவிடும். ஆகையால், உம்மத்தே முஹம்மதிய்யாவில் மஸீஹ் என்ற வார்த்தையின் அர்த்தம் "மஸீஹ் ஒருவரல்ல; பலர்." என்பதாகும், இன்னும் தெளிவாக கூறினால் உம்மத்தே முஹம்மதிய்யாவில் இறுதி கலீஃபா மஸீஹாக இருக்கின்றார். அவர் ஒருவர் அதாவது ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) மட்டும் தான் என்று கருதினால், நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமை, மூஸா(அலை) அவர்களின் இரண்டாவது வல்லமை போல் முற்று பெற்றுவிடும்! மாறாக, வரக்கூடிய மஸீஹ் ஒருவர் அல்ல பலர் என்றால் நபி(ஸல்) அவர்களின் அருளுக்குறிய கிலாஃபத் தொடரக் கூடியதாகவும் மஸீஹ்மார்களின் வருகை முற்று பெறவில்லை என்பதால் பகுதி அதாவது நிழல் நுபுவ்வத்தின் கதவு என்றென்றும் திறந்தே இருக்கும். இன்ஷா அல்லாஹ் சகோதரர்களே!