லைலத்துல் கத்ர் : ஒரு முஜத்தித்தின்/கலீஃபத்துல்லாஹ்வின் வருகை!

முஸ்லிம்களின் மனதில் ஆன்மீக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது. மேலும் இம்மாதத்தில் அந்த ஏகஇறைவனுக்காக நோன்பின் கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதத்தில் தான் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியது. மேலும் புனித திருகுரான் பிறந்த மாதமும் இதுவே என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இக்கூற்றை திருக்குரானே இந்த புனிதமிக்க மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது என்று சான்று பகிர்கின்றது. மேலும் அது இவ்வாறாக நமக்கு கற்பிக்கின்றது.

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது (திருகுரான் 2:185)

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (திரு குரான் 97:1)

நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். (திருக்குரான் 44:3)

இன்னும் புகழ் பெற்ற திருகுரான் மொழிபெயர்பாளர்களும், மார்க்க அறிஞர்களும், திருமறை எங்கெல்லாம் “லைலாஹ”(Lailah) என்று குறிப்பிடுகின்றதோ அதனுடன் "இறை வஹியின் வெளிப்பாட்டிற்க்கும் ஆழமான தொடர்பிருப்பதை குறிப்பிடுகின்றார்கள்" மேலும் இதற்கும் அந்த காலத்தில் தோன்றும் முஹத்தத் அதாவது இறைவஹீயை பெறக்கூடியவர், கலீஃபத்துல்லாஹ் அதாவது அல்லாஹ்வின் கலீபா மற்றும் முஜத்தித் (மார்க்க சீர்திருத்தவாதி)களின் வருகையுடன் மிக ஆழமான தொடர்பிருப்பதை இஸ்லாத்தில் தோன்றிய புனிதர்கள் அறிந்திருந்தனர்.

மேலும் இதன் முக்கியத்துவம் பற்றி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி(அலை) அவர்கள் முஸ்லிம்களிடம் இந்த இரவை பற்றிய ஞானத்தையும், "சூரா அல் கதரில் பொதிந்துள்ள நுட்பமான ஆன்மீக அறிவையும் போதித்து வந்தார்கள், இதிலும் முக்கியமாக அந்த இரவில் இறைப் புறத்திலிருந்து" அவனால் எழுப்பப்படும், அந்த அந்த காலத்தில் தோன்றக்கூடிய "முகதத் மற்றும் முஜத்தித்மார்களை" பற்றியும் அன்னார் போதித்து வந்தார்கள்,

மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவுது (அலை) அவர்கள் பஃதே இஸ்லாம் அதாவது இஸ்லாத்தில் வெற்றி என்ற புத்தகத்தில் இதைப்பற்றி நமக்கு கூறியதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன் அன்னார் கூறுகின்றார்கள்:-

திருக்குர்ஆனில் உள்ள சூரத்துல் கத்ர் 97 ஆம் அத்தியாயத்தை நான் குறிப்பிடுகின்றேன். இந்த அத்தியாயத்தில் சர்வ வல்லமையுள்ள இறைவன், அவனது வசனங்களும், அவனது நபியும், லைலத்துல் கதரில் வானத்திலிருந்து இறக்கப்பட்டிருக்கிறது என்ற நற்செய்தியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு வழங்குகின்றான்.

உள்ளது உள்ளவாறு சொல்வதானால் இறைவனிடமிருந்து வரும் ஒவ்வொரு முகதத், மற்றும் முஜத்தித்மார்கள் அத்தகைய வல்லமை மிக்க இரவிலேயே இறங்குகிறார்கள். "லைலத்துல் கத்ர் இரவு என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?" லைலத்துல் கதர் என்பது, இருள் தன் முழு எல்லையை எட்டிவிட்ட அந்த இருண்ட காலத்திற்கு பெயராகும். எனவே அந்த காலத்தில், அந்த இருளை அகற்றுவதற்கு ஓர் ஒளி இரங்க வேண்டும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. அந்தக் காலத்திற்கு உருவகமாக லைலத்துல் கதர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அது இரவு அல்ல. அதனுடைய இருள் காரணமாகவே அக் காலம் இரவு என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபியின் அல்லது ஆன்மீக பிரதிநிதியின் மரணத்திற்குப் பிறகு, அதாவது ஆயிரம் மாதங்களுக்குப் பின்னர், அவ்விருள் படரத் தொடங்குகின்றது. ஆயிரம் மாதங்கள் என்பது ஒரு மனிதனின் வாழ்நாளுக்கு சமமாகும். இக்கால கட்டத்தின் இறுதியில், மனிதனின் புலன்களும் தளர்ந்து ஓர் இறுதி காலகட்டத்திற்கு வருகின்றது. பின் "புதிய நூற்றாண்டின்" தொடக்கத்தில் ஒரு "சீர்திருத்தவாதி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சீர்திருத்தவாதிகள்" அதாவது முஜத்தித்மார்கள் தோன்றுவதற்கான விதையை பரலோகமானது விதைக்கின்றது.

இந்த நிகழ்வை தான் எல்லாம் வல்ல இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (திருக்குரான் 97:4)

வல்லமை மிக்க இரவில் இறங்குவதை காண முடிந்தவர்கள், இந்த ஒளி வரும் காலத்தில் இவ்வுலகத்தில் இல்லாமல் போய்விட்ட எண்பது வயதுக்காரர்களை விடச் சிறந்தவர்கள் என்பது இதற்குப் பொருளாகும். இந்த இரவின் போது ஒரு கணப் பொழுதில் பெறப்பட்ட ஒளியானது அந்த "இரவுக்கு முந்தைய ஓராயிரம்" இரவுகளை காட்டிலும் மேலானது. இவ்வாறாக அது மேலானது என்றால்? "அந்த இரவில் இறைவனிடமிருந்து வானவர்களும் பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸும்) மாட்சிமை மிக்க இறைவனின் அனுமதியுடன் அந்த காலத்திற்குரிய முஜத்தித் உடன் இறங்குகின்றார்கள்." அவர்கள் அதாவது பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸ்ஸும்) புதிய பாதையைத் திறந்து விட்டு மூடிய திரையை நீக்குகிறார்கள். ஆதலால் அலட்சிய மனோபாவம், அறியாமையாகிய இருள்கள் நீங்குகின்றன. "நேர்வழி என்னும் விடியற்காலை உதயமாகி அவ்விடத்தில் ஆன்மீக ஒளி பரவத் தொடங்குகிறது."

ஆகவே முஸ்லிம்களே! இந்த வசனத்தை படித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். காலத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் ஒரு "முஜத்தித்தை இறைவன் உலகிற்கு அனுப்பி வைக்கின்றான். காலத்தை அந்த இறைவன் எவ்வளவு அருமையாக அடையாளமிட்டு காட்டுகின்றான்! நீங்கள் அந்த காலத்துக்கு மதிப்பளிக்க மாட்டீர்களா?" இறைவனின் வாக்குறுதிகளை நீங்கள் ஏளனம் செய்து கொண்டு பார்ப்பீர்களா? [Victory of Islam, pp. 33-35, Qadian: Islam International Publications, (2003) ]

-ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆஸீம் (அலை) அவர்களால் 07.06.2018 அன்று வெளிடப்பட்டது.