இஸ்லாமிய கடமைகள் பற்றிய புரிதல் - தொடர் -1

ஒரு சகோதரர் இஸ்லாத்தின் கடமைகள் யாவை? என்ற கேள்வியை கேட்டிருந்தார்; அதற்கு சில சகோதர்கள் பதிலும் கொடுத்திருந்தார்கள். இந்த கேள்விக்கு இன்ஷாஅல்லாஹ், மஸீஹ்(அலை) அவர்களின் ஆன்மிக வழிகாட்டல் மற்றும் மிகச் சிறந்த பதிலை நாம் பார்ப்போம்:

இஸ்லாத்தின் கடமைகள் யாது? என்றால் நாம் அனைவரும் ஐந்து கடமைகள் என்று மிக எளிமையாக கூறிவிடுவோம். ஏன்! ஒரு இஸ்லாமியர் அல்லாத பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு கூட அவன் பாட புத்தகத்தில் இவ்வாறு தான் உள்ளது அல்லவா!!

முதலில் நமது எஜமானர் பெருமானார் (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தது என்ன? என்று பார்ப்போம்..

ஸஹீஹுல் புகாரி, ஹதீஸ் எண்: 4347.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் செல்லும்போது, 'வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் சாட்சியம் பகரும்படி அவர்களை அழையுங்கள். இதில் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அல்லாஹ் அவர்களின் மீது ஒவ்வொரு நாளும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்.

அன்னார் மிக தெளிவாக தூதரை ஏற்று ஏகத்துவதற்கு வரும்போதுதான் அவர்கள் மீது மற்ற அமல்கள் கடமையாகின்றது. இதை வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) பின்வரும் திருகுர்ஆன் வசனத்தை மேற்கோள் கட்டியவர்களாக..,

அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்குமிடையில் வேற்றுமை பாராட்ட எண்ணி மேலும் (தூதர்களுள்) சிலரை நாங்கள் எற்றுக் கொள்வோம் மற்றுஞ் சிலரை நிராகரிப்போம் எனவும் கூறி, இதற்கிடையில் எதேனுமொரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள். உண்மையில் இவர்களே முற்றிலும் நிராகரிப்பவர்களாவர். நிராகரிப்பவர்களுக்கு இழிவு படுத்தக் கூடிய ஆக்கினையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். (4:151)

இறைவனையும் சில தூதர்களை நம்பிக்கை கொண்டால் போதும் என்று கூறுபவர்களே! ஒரு தூதர் இல்லாமல் மனிதன் ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதை ஏகத்துவத்தின் இரசியத்தை விளக்கியவாறு அன்னார் கூறுகின்றார்கள் :-

ஏகத்துவம் கற்களில் மறைந்து இருக்கின்ற அந்த நெருப்பை போன்றே வைக்கப்பட்டுள்ளது என்பதே இதில் உள்ள ரகசியம் ஆகும். தூதர், நெருப்பு மறைந்திருக்கும் கல் போன்றவர் ஆவார், அந்த கல்லின் மீது தனது கவனத்தை செலுத்துகின்ற அடியின் மூலமாக அந்த நெருப்பு வெளியில் கொண்டு வரப்படுகின்றது எனவே தூதர் என்ற இந்த கல் இல்லாமல் ஏகத்துவத்தின் நெருப்பு ஏதோ ஒரு உள்ளத்தில் உருவானது என்பது ஒருபோதும் சாத்தியமானது. ஏகத்துவத்தை தூதர்கள் மட்டுமே பூமிக்கு கொண்டு வருகின்றார்கள் அவர்கள் மூலமாகவே இது பெறப்படுகின்றது இறைவன் மறைவானவனாக இருக்கின்றான். அவன் தனது முகத்தை தூதர் மூலமாக காட்டுகின்றான்.

பாருங்கள்!! தூதர் மீது நம்பிக்கை கொள்ளாமல் இரட்சிப்பை எவ்வாறு பெற இயலும்? தூதர் மீது நம்பிக்கை கொள்ளாமல் வெறுமனே ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்வதால் என்ன பலன்? "தௌஹீது" என்ற பெயரே காலத்தின் நபி அதாவது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா(ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு கட்டுப்பட்டு நடக்காமல் ஒருபோதும் கிடைக்காது.

எந்த ஒரு நபர் முழுக்க முழுக்க காய்ந்துபோன தௌஹீதின் மீது நம்பிக்கை வைத்து தூதர் இல்லாமல் தன்னிறைவு பெற்றவராக தன்னை கருதிக் கொள்பவர் இறை இரட்சிப்பை பெறாத துர்பாக்கியசாலி ஆவார் என்று அன்னார் நம்மை எச்சரிக்கின்றார்கள்.... இன்ஷாஅல்லாஹ். தொடரும்...