ஏக இறைவனே எல்லாமாக இருக்கிறான்.. அவனின்று எதுவும் இல்லை

ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை)அவர்கள் கூறுகிறார்கள்:- 

இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட அன்பான சகோதர, சகோதரிகளே நானோ, அல்லது நீங்களோ நமது சுய விருப்பத்தின்படி தோன்றவில்லை. இந்த மிகப் பரந்த பிரபஞ்சமும் அதில் அடங்கியுள்ள அனைத்து படைப்பினங்களும் மற்றும் ஒவ்வொரு இனத்திற்கும், படைப்பிற்கும் தொகுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளும், சட்டங்களும் அந்த ஒரே ஒரு படைப்பாளன்

மேற்கொண்ட செயல்முறையே ஆகும். அந்த தனித்தன்மையுடைய படைப்பாளன் அல்லாஹ்வே ஆவான்.

முதன்முதலில், படைப்பாளனைத் தவிர வேறு எந்த ஒரு படைப்பினமும் இருந்ததில்லை. பின்னர் மலக்குகள், ஜின்கள், மனிதர்கள் போன்ற உயிரினங்களைப் படைக்க அல்லாஹ் (ஸுப்ஹா) முடிவு செய்தான். இந்த படைப்பினங்களுக்கு மத்தியில், மிகவும் குறிப்பாக ஜின்களிலும் மனிதர்களிலும் தங்களுடைய வாழ்வை நல்லவற்றை செய்வதற்காக பயன்படுத்தும், அதே சமயம் இதற்கு நேர்மாறாக மற்றவர்கள் அதை தீமையை செய்வதற்காகப் பயன்படுத்துகின்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

"அந்த பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும் பெண்ணையும் படைத்ததை, சான்றாகக் காட்டுகிறேன். நிச்சயமாக உங்கள் முயற்சிகள் வெவ்வேறானவையாகும்" (92:3-5)

இதிலிருந்து, ஆணும் பெண்ணும் இப்பூமியில் தொடர்ந்து வாழ்வதற்கு பல்வேறு முயற்சிகளைக் கொண்டு அவர்களுடைய பகல்களையும் இரவுகளையும் நிரப்ப வேண்டும் என்பதும், அதன் காரணமாக அவர்களது செயல்களுக்கான விளைவுகளை நியாயத் தீர்ப்பு நாளில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதும் தெளிவாகின்றது.

“ஆனால் எவரது (செயல்களின்) எடைகள் குறைந்தவையாக உள்ளனவோ, நரகம் அவருக்குத் தாயாகி (அவரது தங்குமிடமாகி) விடும். அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?அது ஒரு சுடர்விட்டெரியும் நெருப்பாகும்”(101:9-12).


ஆணும் பெண்ணும், சுருக்கமாக மனித இனம் தங்களின் படைப்பாளனுக்குரிய கடமையை நிறைவேற்றுவதுடன் அல்லாஹ்வை பிரத்தியேகமாக வணங்குவதை முக்கிய கடமையாகக் கொண்டு தங்களுடைய வாழ்வை இஸ்லாத்தின் அடிப்படையில் உருவாக்க ஒவ்வொரு முயற்சிகளையும் மேற்கொண்டு அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்படிந்துமுழுமையான நேர்மையுடனும் இறையச்சத்துடனும் அவனுக்கு தொண்டாற்ற வேண்டும்.

அல்லாஹ் திருக்குரானில் கூறுகின்றான்:

 "என்னை வணங்குவதற்காகவே அன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (51:57)

மேலும் அவனுக்காக பணியாற்றும் போது, அவர் மனித குலத்திற்கும் தொண்டாற்ற வேண்டும்; ஏனென்றால் இப்பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனிடமும் இறைவனின் சாராம்சம் அதாவது உள்ளியல்பு அடங்கியுள்ளது.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: 

"(செவியேற்பவரே!) படிந்திருக்கும் சேற்றிலிருந்து உருவாக்கப்பட்ட, ஓசை தரும் காய்ந்த களிமண்ணிலிருந்து நான் மனிதனைப் படைக்கப் போகிறேன் என உமது இறைவன் வானவர்களிடம் கூறிய நேரத்தை (யும் நினைத்து பாரும்)

நான் அவனை முழுமையாக்கி, என் ஆவியை அவனுள் ஊதிய போது...," (அல் ஹிஜ்ர் 15:29-30).

எனவே, மனித குலத்திற்குத் தொண்டாற்றுவதன் மூலம், நாம் இறைவனை நெருங்கி கொண்டிருக்கின்றோம்

நிச்சயமாக மனிதர்களாகிய நாம் எண்ணற்ற பலவீனங்களோடு இருப்பதனால், நமக்கு இணறவனின் ஆதரவு அவசியப்படுகிறது. நாம் பலவீனர்களாகவே படைக்கப்பட்டிருக்கிறோம். இப்பிரபஞ்சத்தின் போக்கும் சூரியனை சுற்றி வரும் பூமியின் சுழற்சியும், காலநிலை மற்றும் நமது ஆரோக்கிய நிலையும் நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லாததைப் போன்றே நமது வாழ்வை ஆட்கொள்ளும் மகிழ்ச்சிகளும் துரதிஷ்டங்களும் கூட நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லை.      

அல்லாஹ் (சுப்ஹான) கூறுகின்றான்:   

"மக்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையோர் ஆவீர். ஆனால் அல்லாஹ் தன்னிறைவு பெற்றவனும் புகழுக்குரியவனும் ஆவான்" (அல்- ஃபாதிர் 35:16 )

மேலும் ஒரு ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுகின்றான் : 

 “என்னுடைய அடியார்களே! நான் எவருக்கு நேர்வழி காட்டியிருக்கின்றேனோ அவர்களைத் தவிர நீங்கள் அனைவருமே வழிகேட்டில் இருக்கின்றீர்கள், எனவே என்னிடத்தில் வழிகாட்டுதலைத் தேடுங்கள்! மேலும் நானே உங்களுக்கு வழி காட்டுவேன்".(முஸ்லிம், இப்னு மாஜா, திர்மிதி).

நிச்சயமாக, நாம் பலவீனர்களாக இருப்பதால், இப்பூமியில் தொடர்ந்து வாழ்வதற்கும், நேரான வழியில் நிலைத்திருப்பதற்கும்அல்லாஹ்வினுடைய முழு சக்தியும் ஆதரவும் நமக்கு அவசியப்படுவதோடு, நாம் பூமியில் சிறந்த முறையில் செயலாற்றினால் மட்டுமே, நமக்கான ஒரு உலகில்நமது நிரந்தர வாழ்வு உயர்த்தப்படுவதற்கான உத்தரவாதத்தை அளிக்கின்றது. எதிர்கால வாழ்வானது நிச்சயமாக நொடிப் பொழுதில் கண்ணுக்கு தென்படாததும் நமது உணர்வுகளாலும், நமது ஆன்மாவாலும் புரிந்து கொள்ள முடியாததும் ஆகும்; ஆனால் நமது நம்பிக்கை, நமது ஆன்மா அதன் இருப்பை நம்புவதற்காக நம்மிடம் மன்றாடுகின்றது; ஏனென்றால் இந்த நம்பிக்கையும் ஆன்மாவும் எஜமானனாகிய இறைவனோடு தொடர்புடையது; மேலும் அவனே நமது நித்திய வழிகாட்டி, இன்னும் அவன் எத்தகையவனென்றால், நமது பௌதீக, ஒழுக்க மற்றும் ஆன்மீக நிலைத்திருத்தலின் உத்திரவாதத்திற்காகவும், தனித்தன்மையுடைய இறைவனின் மீதான மனிதனின் நம்பிக்கையை வலுவூட்டவும், மேலும் இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையிலான தொடர்பினை வலுப்படுத்தவும் அவ்வப்போது இவ்வுலகிற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எச்சரிக்கையாளர்களையும், தூதர்களையும் அனுப்புகின்றான் என்பதையும், அந்த இறைவனே ஒவ்வொரு மனிதனின் இறுதி இலக்கு என்பதையும், மேலும் அவனே முழு நிறைவும், சக்தியும் ஆற்றலும் உடையவன் ஆவான் என்றும், மனிதர்களாகிய, அவர்களே பலவீனமானவர்களும் ஒன்றுமே இல்லாதவர்களும் ஆவர் என்றும், மேலும் இறைவனுடைய உதவியும் அருளும் இல்லாமல், இந்த தற்காலிக உலகில் அவர்களால் ஒன்றுமே செய்ய இயலாதவர்களாவர் என்பதையும் வலியுறுத்துகின்றான்.

நான் உட்பட, நீங்கள் அனைவரும், நினைவில் கொள்ளுங்கள், நாம் ஒன்றுமற்ற துச்சமானவர்களாக இருந்ததையும், அல்லாஹ்வான அவனே நம்மை படைத்தான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அவன் நமது ஆன்மாக்களை உருவாக்கிய பின்னர் நம்மை மனித உடல்களாக அதாவது களிமண்ணால் ஆன உடல்களாக இப்பூமிக்கு அனுப்பியதனால், நாம் இந்த இவ்வுலகத்தை அறிந்து, நமது வாழ்விற்காகவும் இறை வழிபாட்டிற்காகவும் போராடி மேலும் இந்த அனைத்து உதவிகளுக்காகவும் அவனுக்கு நன்றி செலுத்துவோம்.

உண்மையிலேயே, இறைஞானம் என்பது மகத்தான ஒன்றாகும். அல்லாஹ்வின் அனைத்து தீர்மானங்களுக்கும், பேரறிவிற்கும் பின்னால் உள்ள அந்த ஞானத்தைப் பற்றி நம்மால் A முதல் Z வரை முழுமையாக அறிந்திட முடியாது. அல்லாஹ் நமக்கு எல்லாவற்றையுமே வழங்கியுள்ளான்! அவன் நமக்கு ஒரு மனித உடலை கொடுத்திருக்கின்றான் அதனால் நம்மால் இப்பூமியில் வாழ முடிகின்றது. மேலும் அவன் நமக்கு பொது அறிவு மற்றும் உடல்வலிமை போன்ற அனைத்துத் திறன்களையும், கொடுத்திருக்கின்றான், அதனால் நாம் அவனை எவ்வாறு தேடுவது என்பதை பற்றி சிந்திக்க அறிந்தவர்களாகவும், மேலும் நம்மை சுற்றிலும் நமக்குள்ளும் அவனைக் கண்டு கொள்ளக்கூடிய அறிவார்ந்த மனிதர்களாகவும் நமது வாழ்வை நம்மால் முழுமையாக வாழ முடிகின்றது. பலவீனர்களாக இருந்தாலும், அவன் நம்மை பலப்படுத்துவதோடு நமது தேடலில் வெற்றி பெறுவதற்கான வழிவகைகளையும் வழங்கியுள்ளான். அல்லாஹ் நமது தேவையையும் அவனது ஞானத்தையும் நமக்கு விளக்குகின்றான் :

"அல்லாஹ் உங்கள் கேள்வி புலனையும் பார்வையையும் போக்கி உங்கள் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டால், அல்லாஹ்வையன்றி அதனைத் திருப்பிக் கொண்டு வரும் கடவுள் யார் என்பதைச் சொல்வீர்களா என்று நீர் கேட்பீராக! (அல் - அன்ஆம் 6:47)

"நீர் கூறுவீராக: அல்லாஹ் உங்கள் மீது இரவை, மறுமை நாள் வரை நீடித்திருக்கச் செய்து விட்டால், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் கடவுள் வேறு யார் என்பதை நீங்கள் எனக்குத் தெரிவியுங்கள். (அல்கஸஸ் 28:72)"

அல்லாஹ்வின் அனுமதி இன்றி எவராலும் நமக்கு எதனையும் வழங்கிட முடியாது. அவன் தான் விரும்புகிறவரை கௌரவிக்கின்றான், அவன் தான்விரும்புகிறவரை தாழ்த்துகின்றான். அவன் நமது பார்க்கும் மற்றும் கேட்கும் புலன்களை பறித்துவிட்டால், பௌதீக மற்றும் ஆன்மீக குருட்டையும், செவிட்டையும் உள்ளடங்கிய இரண்டையுமே, அல்லாஹ்வையன்றி எவராலும் நம்மை குணப்படுத்தவும் வழிநடத்தவும் முடியாது. இறைவன் எல்லையற்ற நன்மையாளன். அவனை வணங்கும்படி அவன் நமக்கு கட்டளையிடுகின்றான். மேலும் அவ்வாறு செயல்படுவதன் மூலம், நாம் அவனது நெருக்கத்தை பெறுகின்றோம். அவனும் நம்மிடத்தில் நெருங்கி வருகின்றான். அவனே தான் நம்மை பல ஊனங்களுக்கு எதிராக பாதுகாக்கின்றான். அவன் கருணையாளனும், உன்னத சமநிலையுடைய கொடையாளனுமாவான். எவரெல்லாம் மேன்மை வாய்ந்தவராகவும், போற்றத்தக்கவராகவும் உணர விரும்புகின்றாரோ அவர் அல்லாஹ்வின் முன்னால் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள வேண்டும். இந்த முழுமையான அடிபணிதலானது அவரை கார்த்திகை அதாவது சுரையா நட்சத்திரத்திற்கு உயர்த்திவிடும், அது குறித்துக் கூறுவதென்றால் அல்லாஹ் எவ்வாறு அவரது அந்தஸ்த்தை உயர்த்திவிடுவான் என்பதையும், அவர் இறைநேசத்தை அறுவடை செய்வதையும், அவர் கண்டு கொள்வார். அந்த உண்மையான வெற்றி, பௌதீகம் அதாவது இவ்வுலகம் மற்றும் ஆன்மீகம் அதாவது மறுமை ஆகிய இரண்டுமே படைப்பாளனான அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிதலில் தான் உள்ளது.

அவன் முன்னால் நீங்கள் குனிந்து உங்களை தாழ்த்திக் கொள்வதினால், அவனது கருணையின் கதவானது உங்களுக்காக திறந்திருக்கும். இவ்வுலகம் மற்றும் மறுமையின் ஆயிரம் அதிசயங்கள் உங்களிடம் வெளிப்படுத்தப்படும்.நீங்கள் நேரான வழியில் நிலைத்திருப்பதற்காக இவ்வுலகின் சைத்தான்களோடு போரிட்டு, எல்லா நேரத்திலும் அவன் அனுப்புகின்ற அவனது தூதர்களை ஏற்று, நீங்கள் அவரை பின்பற்றவும் அவருக்கு கீழ்ப்படியவும் வேண்டும். அதனால் நீங்கள் இம்மையிலும் மறுமையிலும் அருளைப் பெற்றவர்களின் மத்தியில் இருக்கலாம். உங்களுடைய மனித பலவீனமானது உங்களது ஆன்மீக வலிமையின் மூலம் ஈடுசெய்யப்படுகின்றது ஏனென்றால் அல்லாஹ் உங்களுடன் இருந்தால் , அனைத்துமே உங்களுடன் இருக்கின்றது, ஆனால் அல்லாஹ் உங்களுடன் இல்லை என்றால், எதுவுமே உங்களுடன் இல்லை. நீங்கள் விரக்தியின் படுகுழியில் தொலைந்து போவீர்கள்.

அல்லாஹ் தன் கருணையை உங்களுக்கு வழங்கி மேலும் அவனுடைய மகிழ்ச்சிக்கான வழியை உங்களுக்காக திறக்கட்டும். ஆமீன். உங்கள் பலவீனங்களை ஒழித்துவிட்டு அதற்கு பகரமாக அவைகளை உங்கள் ஆன்மீக பலத்தைக் கொண்டு மாற்றுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்படிதலை கொண்டு உங்கள் ஆன்மாக்களை பேணுங்கள். மேலும் பூமியில் உங்கள் கடமைகளை விடாமுயற்சியுடனும் விவேகத்துடனும், மற்றும் அல்லாஹ்வின் அந்த பெரும் மதிப்பிற்குரிய அச்சத்துடன் நிறைவேற்றுங்கள். அல்லாஹ்விடம் திடப்பற்றுடன் தங்கியிருங்கள். மேலும் இப்பூமியில் உங்கள் வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வை உங்கள் அருகில் நீங்கள் காண்பீர்கள். இன்ஷா அல்லாஹ்...ஆமீன்..

ஆதாரம் : 9.11.2018 ஜும்மா குத்பா 

தலைப்பு : அல்லாஹ் இன்றி நாம் ஒன்றும் இல்லை'