தூதுச் செய்தி கிடைக்கவில்லை என்று கூறி இறைவன் முன் தப்பிக்க இயலுமா?

நாளை நீங்கள் உங்களைப் படைத்தவன் முன் நிற்கும்போது நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை என்று கூறாதீர்கள்.

என்னை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இதை ஏற்றுக் கொள்வதோ இறை செய்தியிலிருந்து முகந்திருப்பிக் கொள்வதோ உங்களுடைய விருப்பம்.

கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) கூறுகின்றார்கள்:-

காலத்தின் கலீஃபதுல்லாஹ் என்ற வகையில், நான் செய்ய வேண்டிய (நிர்ணயிக்கப்பட்டுள்ள) வேலையைச் செய்கிறேன். அல்லாஹ்வே இம்முக்கிய செய்தியை அளிக்க என்னை வழிநடத்தி இயக்குகின்றான்; ஏனெனில் நாளை நீங்கள் உங்களைப் படைத்தவன் முன் நிற்கும்போது நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை என்று கூறமுடியாது. “யாரும் எதையும் சொல்லவில்லை; எனக்குச் செய்தி கிடைக்கவில்லை” என்று உங்களால் கூறமுடியாது. உங்களைப் படைத்தவனிடம் உங்களால் இதைக் கூற முடியாது! இறை அறிவுறுத்தலின்படி அல்லாஹ் எனக்குக் கொடுத்துள்ள பணியை நான் செய்கிறேன். என்னை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். இதை ஏற்றுக்கொள்வதோ, இறை செய்தியிலிருந்து முகந்திருப்பிக் கொள்வதோ உங்களுடைய விருப்பம். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய செயல்களுக்குப் பொறுப்பாளியாவீர்கள், தீர்ப்பு நாளில் படைத்தவனால் கணக்குக் கேட்கப்படவுள்ளீர்கள்.

இந்த தற்காலிக உலகில், நாம் அனைவரும் பயணிகளாவோம், நாம் இந்த உலகில் தற்காலிகமாகவே இருந்து கொண்டிருக் கின்றோம்; எனவே நாம் மறுமையைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது, ஏனெனில் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையே நிரந்தரமானதாகும்.

இப்போது நான் சூரா அன்-நூரில் உள்ள ஒரு வசனத்தை(24:56) மேற்கோள் காட்டுகிறேன். அதில் அல்லாஹ் :

“அவன் அவர்களுக்காகப் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாக” கூறுகின்றான்.

இதுபோல சூரா அல்-மாயிதா அதிகாரம் 5 வசனம் 4இல் அல்லாஹ் மேலும் கூறுகின்றான்:-

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்”.

இதன் பொருள் என்னவென்றால் அல்லாஹ்(ஸுபுஹ்)-வால் ஏற்படுத்தப்பட்டுள்ள, அருள் புரியப்பட்டுள்ள அமைப்பின் மூலம் இஸ்லாம் பலத்தையும், கண்ணியத்தையும் பெறும் என்பதை முன்னிறுத்தி இறுதி அறிவிப்பை வெளியிடுவான் அதில் அவன் தொடர்ந்து இறையருளை, அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியாரை, அவனது கலீபத்துல்லாஹ்வை அனுப்பிக் கொண்டேயிருப்பான், அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியாரின் மூலமாகவே அவன் உலகளவில் இஸ்லாமிய மார்க்கம் வெற்றியடைய அனுமதிப்பான். நான் ஏற்கெனவே கடந்த இரண்டு வெள்ளிக்கிழமை உரைகளில் விளக்கியதுபோல், புனித நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் விதையை விதைத்தார்கள், புனிதமான, பரிபூரணமான ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) விதைத்த அதே பணியைத் தொடர்வது கட்டாயமாகும். அவர்கள் இஸ்லாத்தின் விதையை விதைத்தார்கள். ஆனால் இன்று என்ன ஆகிவிட்டது? முஸ்லிம்களுக்கு என்ன ஆகிவிட்டது? இஸ்லாத்தின் உண்மையான போதனைகள் எங்கே போய்விட்டன? நமது அன்பிற்குரிய நபி(ஸல்) அவர்கள் வீணாகக் கூறவில்லை. பிரத்தியேகமாக இத்தலைப்பு பற்றிய திருக்குர்ஆனின் வசனம் அருளப்பட்டபோது அதில் அல்லாஹ் கூறுகிறான்:

‘வ ஆஹரீன மின்கும் லம்மா யல்ஹகூ பிஹிம்’

“இவர்களுடன் சேராத (பிற்காலத்த) வர்களுக்காகவும் “ (சூராஅல்ஜூம்ஆ 62:4)

இந்த வசனத்தில் மிகச் சிறந்த முன்னறிவிப்பு உள்ளது, அதில் இந்த உண்மையான போதனைகள் [இஸ்லாத்தின் போதனைகள்] மீறப்படும் இறுதி நாட்களில் புனித நபி(ஸல்) அவர்களின் வருகையின் நோக்கம் மற்றும் இஸ்லாத்தின் போதனைகள் குறித்து சிலர் கேள்வி எழுப்பக்கூடும், அவ்வாறு நடக்கும்போது அல்லாஹ்(ஸுபுஹ்) நிச்சயமாக இந்த ஸஹீஹ் அல் இஸ்லாத்தை (உண்மை இஸ்லாத்தைப்) பாதுகாக்க ஒரு பிரதிநிதியை அனுப்புவான். இவ்வசனம் அருளப்பட்டபோது, ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்கள் நன்கு அதனைப் புரிந்து கொள்ள வைத்தார்கள். ஏனெனில் அவர்கள் கூறினார்கள்:

“லவ் கானல் ஈமானு முஅல்லகன் பிஸ்ஸுரைய்யா லனாலுஹூ லரஜ்லும் மின் ஹாவுலாஇ” புஹாரி-கிதாபுல் தஃப்ஸீர்).

அவர்கள் இவ்வார்த்தைகளைக் கூறும்போது, அவர்கள் தமது கையை ஸல்மான் ஃபார்ஸி அவர்களின் தோளின் மீது வைத்தார்கள், ஸல்மான் ஃபார்ஸி பாரசீக வம்சத்தைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்..

இம்முன்னறிவிப்பு கடந்த நூற்றாண்டின் மஸீஹ் ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமத்(அலை) அவர்களின் காலத்தில் நிறைவேறிற்று. ஆனால் இம்முன்னறிவிப்பு இதோடு நிறைவு பெற்றுவிடாது; தற்காலத்திலும் அல்லாஹ் அனுப்பிய்யள்ள இந்த எளிய அடியானின் வருகையால் அதுத் தொடர்ந்து உணரப்படுகிறது. அல்லாஹ்வால் அனுப்பப்பட்டுள்ள இந்த எளிய அடியான் புனித நபி(ஸல்) அவர்களின் பணியைத் தொடரக்கூடிய அடியானும், பாதுகாவலனும் ஆவேன்;

மேலும் நான் புனித நபி(ஸல்) அவர்களின் மீதும் மதிப்பிற்குரிய வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்களின் மீதும் உறுதியான நம்பிக்கைக் கொண்டவனாவேன். ஹஸ்ரத் மஸீஹ் மவூத்(அலை) அவர்களின் மஸீஹ் வாதத்தை ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்களின் உம்மத்தைச் சாராத ஒருவரால் எவ்வாறு செய்யமுடியாதோ! அதேபோன்று இக்காலத்தின் ஃகலீபத்துல்லாஹ்வாகிய அல்லாஹ்வின் அடியானும் ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்களின் உம்மத்தைச் சாராதவனாகவோ அல்லது ஹஸ்ரத் மஸீஹே மவூத்(அலை) அவர்களின் ஜமாத்தைச் சாராதவனாகவோ இருக்கமுடியாது. எனவே, இஸ்லாத்தின் (ஸஹீஹ் அல் இஸ்லாம்) அசல் போதனைகளை உயிர்ப்பிக்க அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவரைப் புனித நபி(ஸல்) மற்றும் மதிப்பிற்குரிய வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் சமுதாய வட்டத்திலிருந்து பிரிக்கவோ விலக்கவோ முடியாது. அவர் இவ்விருவரையும் மிக உறுதியாகப் பின்பற்றுபவராக இருக்கவேண்டும்: முதலாவது காத்தமுன் நபிய்யீன் (நபிமார்களுக்கெல்லாம் முத்திரை), அடுத்தது காத்தமுல்குலஃபா (கலிஃபாக்களுக்கெல்லாம் முத்திரை). நபி கரீம் ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்களிடத்து பற்றுதல் இல்லையென்றால் ஹஸ்ரத் மஸிஹ் மவூத்(அலை) அவர்களின் வருகைக்கூட மதிப்பில்லாமல் போய்விடும்.

சிந்தியுங்கள்!